177 மலேசிய இந்தியர்களுக்கு இன்று குடியுரிமை வழங்கினார் பிரதமர் நஜிப்!  -(VIDEO)

அரசியல்
Typography

கோலாலம்பூர், அக்.31- குடியுரிமையின்றி பல வருடங்களாக தவித்த 177 மலேசிய இந்தியர்களுக்கு இன்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் குடியுரிமை ஆவணங்களை வழங்கினார். 

குடியுரிமை இல்லாமல் இருக்கும் 1,054 மலேசிய இந்தியர்களுக்கு இவ்வருடம் குடியுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிக்கையில் 177 பேருக்கு இன்று மெனாரா டி.பி.கே.எல்-யில் இந்த குடியுரிமை ஆவணங்கள் வழங்கப்பட்டன. 

துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி, சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மற்றும் செடிக் இயக்குநர் பேராசிரியர் டத்தோ டாக்டர் என்.எஸ். இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆவண மற்றும் குடியுரிமை அட்டைகள் வழங்கப்பட்டன.

அரசாங்கத்தின் திட்டமான 'ஒரே மலேசியா' உதவித் தொகை மற்றும் சமூக நல உதவிகளை அவர்கள் பெறும் பொருட்டு, செடிக் எனப்படும் இந்திய சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டப் பிரிவு, அந்த உதவிகளை பெறுபவர்கள் பட்டியலில் அவர்களைப் பதிவு செய்ய உதவி செய்யும். 

"இன மத பேதம் பாராமல், அனைத்து சமூகத்தினருக்கும் உதவிகளை வழங்குவதே தேசிய முன்னணியின் கொள்கை. அதன் அடிப்படையில் தான், 1,054 இந்தியர்களுக்கு குடியுரிமையை வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது" என்று நஜிப் தெரிவித்தார். 

நாட்டில் 3லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை இல்லை என்று எதிர்க்கட்சியினர் கூறியதை சாடிய நஜிப், 'மை-டப்தார்' எனப்படும் ஆவணப் பதிவு திட்டத்தின் கீழ் 2,500 பேர் மட்டுமே குடியுரிமை இல்லாமல் இருப்பதாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது என்பதை நஜிப் சுட்டிக் காட்டினார். 

மேலும் எதிர்க்கட்சியினரின் இந்தக் கூற்று 'நிஜம்' அல்ல வெறும் 'அவுட்'டா? என்று பிரதமர் வர்ணித்தார்.

இந்திய சமூகத்தில் நிலவும் குடியுரிமை மற்றும் ஆவணப் பிரச்சினைகளை களையும் பொருட்டு, 2011-ஆம் ஆண்டு இந்த மை-டப்தார் ஆவணப் பதிவு திட்டம் தொடங்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டிலிருந்து 2015-ஆம் ஆண்டு வரை சிறப்பு செயலாக்க பணிக்குழுவின் கீழ் இந்த மை -டப்தார் திட்டம் செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்நிகழ்வில், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் மன்சோர், இளைஞர், விளையாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன், ம.இ.கா தேசிய துணைத் தலைவரும் துணையமைச்சருமான டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி, ஐ.பி.எப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் மற்றும் கெராக்கான் கட்சியின் உதவித் தலைவர் கோகிலன் பிள்ளை ஆகியோருடன் நூற்றுக்கணக்கான பொது மக்களும் கலந்துக் கொண்டனர்.  

 

BLOG COMMENTS POWERED BY DISQUS