ஹராப்பானில் இணைய முயற்சிக்கும் சிறுபான்மையினர் கட்சி! ஆட்சேபம் இல்லை என்கிறார் மகாதீர்!

அரசியல்
Typography

கோலாலம்பூர், நவ.11- 'மீரா' என்றழைக்கப்படும் சிறுபான்மையினரின் உரிமை நடவடிக்கைக் கட்சியை ஹராப்பான் கூட்டணியில் ஏற்றுக் கொண்டு அந்தக் கூட்டணியை விரிவுபடுத்துவதில் தமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். 

நேற்று முன்தினம், நாட்டின் முன்னாள் பிரதமரான மகாதீரை நேரில் சந்தித்து, ஹராப்பான் கூட்டணியில் இணைவதற்கான விண்ணப்பத்தை மீரா கட்சியினர் அவரிடத்தில் சமர்ப்பித்ததாக மீராவின் துணைப் பொதுச் செயலாளர் கே.கார்த்திகேசு தகவல் தெரிவித்தார். 

இந்தியர்கள் மற்றும் இதர சிறுபான்மையினரின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் பொருட்டு, பக்காத்தான் ஹராப்பான் கட்சி என்னென்ன யுக்திகளை எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது கையாள வேண்டும் என்பது குறித்தான பகுப்பாய்வு அடங்கிய பட்டியலை புத்ராஜெயாவிலுள்ள பெர்டானா தலைமைத்துவ அறவாரியத்தில் மகாதீரிடம் மீரா கட்சியினர் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

"தேசிய முன்னணிக்கு வாக்களிக்கும் இந்தியர்களில், 16 விழுக்காட்டினர் தங்களின் வாக்குகளை எதிர்கட்சிக்கு அளித்தால், 16 முக்கிய நாடாளுமன்ற தொகுதிகளையும், 14 மாநில இடங்களையும் இழக்கும் வாய்ப்பு நேரலாம் என்று எங்களின் ஆய்வு தெரியப்படுத்துள்ளது" என்று கார்த்திகேசு சொன்னார். 

நியூஜென் கட்சி என்றழைக்கப்பட்ட மீரா, ஏ.ராஜரெத்தினம் தலைமையில் புதிய கட்சியாக உருவெடுத்துள்ளது. 

இந்தியர்கள் மற்றும் சிறுபான்மையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு கட்சி, பக்காத்தான் ஹராப்பானில் இடம் பெற வேண்டும் என்று தாங்கள் கருதுவதாக கார்த்திகேசு சொன்னார். மீரா இப்போதே இந்தியர்களின் நலனுக்காக பாடுபட தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறினார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS