'என்னைப் பற்றிய யூகச் செய்திகளை நிறுத்துங்கள்! -ஊடகங்களுக்கு இராமசாமி கோரிக்கை

அரசியல்
Typography

பினாங்கு, நவ.20- அண்மைய காலமாக, செய்தி ஊடகங்கள் தம்மைப் பற்றி யூகங்களை வெளியிடுவதில் அதிக அக்கறை காட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பினாங்கு மாநில 2-ஆவது துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் இராமசாமி வலியுறுத்தினார். 

நடந்து முடிந்த ஜ.செ.க-வின் கட்சித் தேர்தலில், மத்திய ஆட்சிக் குழுவுக்கு போட்டியிட்டு தாம் 356 வாக்குகள் பெற்றதைச் சுட்டிக்காட்டிய டாக்டர் இராமசாமி, ஆட்சிக் குழுவுக்கு தாம் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறித்து வெவ்வேறு காரணங்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப யூகம் செய்து, செய்தி வெளியிடுவதை சம்பந்தப்பட்ட ஊடகங்கள் கைவிட வேண்டும் என்றார். 

"கட்சித் தேர்தலில் வெற்றி-தோல்வி என்பதெல்லாம் ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகள் என்பதை நான் அறிவேன். நான் இதுவரை, தோல்வியைக் கண்டு சோர்ந்து போனது கிடையாது. தோல்விகள் என்னுடைய வெற்றிக்கான வழிகாட்டிகளாகவேகருதி வந்துள்ளேன்" என்று அவர் கூறினார். 

"சங்கப் பதிவகத்தின் கட்டாயத்தின் பேரில் ஜ.செ.க தேர்தல் நடந்தது என்பது அனைவரும் அறிந்த விஷயம். பொதுவாக கட்சித் தேர்தலின் போது போட்டியிடும் இதர வேட்பாளர்களைச் சார்ந்து இருப்பது என் வழக்கமல்ல. அத்தகைய சூழ்நிலை கூட எனக்கு வாக்குகள் குறைந்ததற்கு காரணமாக இருக்கலாம். ஆனால், இதுபற்றி நான் அதிகம் கவலைப்பட்டதில்லை. எனது குரல் எப்போதும் போலவே ஒலித்துக் கொண்டிருக்கும்" என்று டாக்டர் இராமசாமி அறிவுறுத்தினார். 

கட்சித் தேர்தலுக்குப் பின்னர், மத்திய ஆட்சிக் குழுவுக்கு ஒரு நியமன உறுப்பினராக கட்சி என்னை நியமித்து, சமான்ய மக்கள் சார்ந்த சேவைக் குழுவுக்கும் தலைவராகவும் ஆக்கியது. எனவே, எனது பணியோ அல்லது சேவையோ ஒருபோதும் தடைபடாது என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழ் ஊடகங்கள் சில, அடிப்படை ஆதாரமற்ற முறையில் வெறும் யூகங்களை செய்திகளாக வெளியிடுகின்றன. ஜசெகவில் இராமசாமி ஓரங்கட்டப் படுவார் என்றும், நியமனப் பதவி எதுவும் அவருக்கு தரப்படவில்லை என்றும், கேமரன் மலைத் தொகுதியில் அவர் போட்டியிடக் கட்டாயப் படுத்தப்படுகிறார் என்றும் துணை முதல்வர் பதவி பறிக்கப்படும் என்றும் ஏகப்பட்ட யூகங்களை செய்திகளாக வெளியிடுகிறார்கள்.  

"நான் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். தொடர்ந்து ஊடகங்கள் அடிப்படையற்ற யூகங்களை வெளியிட்டு வந்தால், வாசகர்கள் அந்த ஊடகங்களின் செய்திகள் மீது நம்பிக்கை இழந்து விடுவார்கள். நம்பகத்தன்மையை பத்திரிக்கைகள் இழந்து விடும் என்று அவர் சொன்னார்.

"நான் துணை முதல்வர் பதவியில் நீடித்து இருப்பேனா, இல்லையா? என்பதெல்லாம் கட்சித் தலைமைத்துவத்தின் முடிவைப் பொறுத்தது. பதவி எனக்கு முக்கியமல்ல. சாமன்ய மக்களுக்காக, இந்தியர்களுக்காக நான் உரக்கக் குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன்" என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS