பொதுத் தேர்தலுக்கு தயாராகுங்கள்!  கட்சியினருக்கு டாக்டர் சுப்ரா அறிவுறுத்து!

அரசியல்
Typography

 

கோலாலம்பூர், நவ.21- முக்கிய முடிவுகளை ம.இ.கா எடுக்கப் போகிறது என்கிற பல்வேறு யூகங்களுக்கு இடையே இன்று பிற்பகலில் ம.இ.கா மத்திய செயலவைக் கூட்டம் நடந்தது என்றாலும், பொதுவாக அடுத்து வரும் பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பற்றியே செயலவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று ம.இ.காவின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

நாட்டின் 14-ஆவது பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடக்கலாம். எனவே, அதனை எதிர்கொள்ள கட்சித் தயார் நிலையில் இருக்க வேண்டியது கட்டாயமாகிறது என்று இன்று பிற்பகலில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் டாக்டர் சுப்ரமணியம் சொன்னார். 

கட்சித் தலைவர்களும், பொதுத் தேர்தலுக்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார். 

அதேவேளையில், இன்று ம.இ.கா தொகுதித் தலைவர்களுடனான சந்திப்புக் கூட்டம் தலைமையகத்தில் நடந்தது. தொகுதித் தலைவர்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பாக கட்சித் தலைமைத்துவம் விளக்கம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டது. 

இன்று அவசர மத்திய செயலவைக் கூட்டம் நடக்கப்போவதாக தகவல் வெளியானதும் பரபரப்பு ஏற்பட்டது. கட்சிக்கு வெளியே இருக்கின்ற சில முன்னாள் ம.இ.கா தலைவர்கள் உடனடியாகக் கட்சிக்குள் ஈர்க்கப்படும் சாத்தியம் இருப்பதாக ஆருடம் நிலவியது. 

குறிப்பாக, முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் ஏ.கே.இராமலிங்கம், முன்னாள் பொருளாளர் டத்தோ ரமணன் ஆகியோர் ம.இ.காவில் மீண்டும் சேர்க்கப்படுவது தொடர்பில் இன்றைய செயலவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என்ற தகவல் பரவியதால், கட்சியின் மத்தியில் பரபரப்பு நிலவியது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS