பொதுத் தேர்தல்: எதிர்க்கட்சி கூட்டணியை ஹிண்ட்ராப் ஆதரிக்கும்! வேதமூர்த்தி

அரசியல்
Typography

 கோலாலம்பூர், நவ.25- அடுத்துவரும் பொதுத்தேர்தலின் போது தேசிய முன்னணிக்கு எதிராக பக்காத்தான் ஹரப்பான் எனப்படும் எதிர்க்கட்சிக் கூட்டணியை ஹிண்ட்ராப் இயக்கம் ஆதரிக்கும் என்று அதன் தலைவர் வேதமூர்த்தி இன்று பகிரங்கமாக அறிவித்தார்.

பிரதமர் நஜிப்பின் தலைமையிலான தேசிய முன்னணி ஒரு நேர்மையற்ற அரசியலை நடத்திவருவது குறித்து ஹிண்ட்ராப் வெறுப்புக் கொண்டு    இருப்பதாக அவர் சொன்னார்.

தேசிய முன்னணியை நிராகரிக்கும் வண்ணம் கிராமப்புறங்கள் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இருக்கும் இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்களிக்கும்படி செய்வதில் ஹிண்ட்ராப் முக்கிய பங்கு வகிக்கும் என்று வேதமூர்த்தி கூறினார்.

இந்திய வாக்காளர்களின் வாக்குகளை எதிர்க்கட்சி கூட்டணிக்கு பெற்றுத் தருவதற்காக சமுதாயத்தினர் மத்தியில் ஹிண்ட்ராப்  இறங்கிவேலை செய்யும். 'ஒரே மலேசியா' கோட்பாடு மற்றும் மத மிதவாதக் கொள்கை போன்ற பிரதமர் நஜிப்பின் திட்டங்களில் நேர்மையில்லை. தனிப்பட்ட சில நபர்களை பாதுகாப்பதோடு இனத் தீவிரவாதத்தையும் அவர் ஊக்குவிக்கிறார் என்று வேதமூர்த்தி குற்றஞ்சாட்டினார்.

மேலும், அரசாங்கத்தின் இந்தியர்களுக்கான வியூகப் பெருந்திட்டம் குறித்தும் வேதமூர்த்தி கடுமையாகச் சாடினார். இந்தியர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டு அமைப்பான 'செடிக்' மூலம் இந்தியர்களுக்கான வியூகப் பெருந்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது இந்திய சமுதாயத்தை மயக்குவதற்கான நஜிப்பின் ஒரு முயற்சி என்றார் அவர்.

பிரதமர் துறை மூலமாகவும் செடிக் மூலமாகவும் இந்திய சமுதாயத்தைச் சென்றடைய வேண்டிய கோடிக்கணக்கான ரிங்கிட் பணத்தை மஇகாவும் அரசுசாரா அமைப்புக்களும் உறிஞ்சிக் கொண்டிருக்கிறன என்று வேதமூர்த்தி சாடினார்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS