2007- ஹிண்ட்ராப் பேரணியால்  நன்மையே!  -ம இகா பிரமுகர் ஒப்புதல்

அரசியல்
Typography

 கோலாலம்பூர், நவ.28- கடந்த 2007-ஆம் ஆண்டில், மத்திய அரசாங்கத்திற்கு எதிராக வெகுண்டு எழுந்த இந்தியர்கள் பலர் ஹிண்ட்ராப் இயக்கத்தால் நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டு, 2008-ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின் வாயிலாக நாட்டில் அரசியல் சுனாமியை ஏற்படுத்தினர் என மஇகாவின் முக்கிய புள்ளி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அந்த சுனாமியைத் தொடர்ந்து, பல இந்தியர்களுக்கு நன்மைகள் கிடைக்கப் பெற்றன என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத மஇகாவின் முக்கியத் தலைவர் கருத்துரைத்துள்ளார்.  

2008-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான், அரசாங்கத்தின் முக்கியத் துறைகளில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது., அதன் பின்னரே, பல இந்தியர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன என்று ஜ. செ.க.வின் அந்தோனி லோக் கூறியதைத் தொடர்ந்து, அந்த மஇகா தலைவர் அவ்வாறு சொன்னார். 

"அந்தோனி கூறியது உண்மையே. 2008-ஆம் ஆண்டிற்கு முன்பு, அரசாங்கத்தின் எந்த முக்கியப் பதவிகளும் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டதில்லை. எதிர்க்கட்சியினரின் ஆதரவில் நடத்தப்பட்ட அந்தப் பேரணி வாயிலாக பல இந்தியர்களுக்கு நன்மைகள் கிடைத்தன என்பதை மறுக்க முடியாது" என்று அவர் சொன்னார். 

ஒரு பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டாலோ, அல்லது பதவி விலகினாலோ, அவரின் இடத்தை நிரப்புவதற்கு வேறொரு இந்தியரை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற சூழ்நிலை இப்போது அரசாங்கத்தில் நிலவி இருப்பதற்கு காரணமாகத் திகழ்வது 2007-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அந்த ஹிண்ட்ராப் பேரணியே, என்று அவர் கூறினார். 

1960 மற்றும் 1970-ஆம் ஆண்டுகளில், பொதுச் சேவைத் துறையில், இந்தியர்களின் எண்ணிக்கை குறைக்கப் பட்டு, அவர்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்படவில்லை. ஒரு சிலருக்கே அந்த வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், அவை வெறும் பெயரளவில் தான் தரப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

இந்தியர்களால் அரசாங்கத்தின் முக்கியப் பதவிகளை வகிக்க முடியும் என்பதை 2008-ஆம் ஆண்டு வரை ம.இ.கா அறிந்திருக்கவில்லை என்றும் அந்த முக்கியத் தலைவர் கூறினார். 

பினாங்கு மாநிலத்தை ஜ.செ.க ஆளத் தொடங்கியப் பின்னர், அந்த மாநிலத்தின் இரண்டாவது துணை முதலமைச்சர் பதவி இந்தியரான பேராசிரியர் பி.இராமசாமிக்கு வழங்கியதையும், பேரா மாநிலத்தின் சபாநாயகராக ஜ.செ.கவின் துரோனோ சட்டமன்ற உறுப்பினர் வி.சிவகுமார் நியமிக்கப்பட்டார் என்பதையும் அந்தத் தலைவர் சுட்டிக் காட்டினார்.  

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS