ஷாகிர் நாயக்கிற்கு அமானா கட்சி ஆதரவு தருவதா? -சிவராஜ் கண்டனம்

அரசியல்
Typography

 கோலாலம்பூர், நவ.29- பயங்கரவாதத்திற்கு துணை போவதாக, சர்ச்சைகளை எதிர்நோக்கி வரும் இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமிய மதப் போதகர் ஷாகிர் நாயக்கிற்கு ஆதரவாக அமானா நெகாரா கட்சி செயல்பட முடிவு செய்திருப்பது குறித்து மஇகா இளைஞர் பிரிவு கேள்வி எழுப்பியுள்ளது.

மத போதகர் ஷாகிருக்கு ஆதரவாக அமானா நெகாரா கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் காலிட்  சமாட் பேசியிருப்பது குறித்து மஇகா இளைஞர் பிரிவின் தலைவர் டத்தோ சிவராஜ் கேள்வி எழுப்பினார்.

கடந்த ஆண்டு டாக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் அவருடைய ஆதரவாளர்கள் சம்பந்தப் பட்டுள்ளார்கள் என்பதற்காக ஷாகிர் நாய்க் மீது பழிபோடக்கூடாது என்று காலிட் சமாட் கூறியதாக இணையச் செய்தித் தளம் ஒன்று தெரிவித்துள்ளது. 

காலிட் சமாட் இவ்வாறு கூறியிருப்பது உண்மையாக இருக்குமேயானால், இது ஓர் அபாயகரமான  போக்குதான்.  பக்காத்தான் ஹராப்பான் இப்போது ஷாகிர் நாயக்கை ஆதரிக்கிறதா? என்று ம இகா இளைஞர் பிரிவின் தலைவர் டத்தோ சிவராஜ் வினவினார்.

அமானா கட்சி பக்காத்தான் ஹராப்பான்  கூட்டணியில் இடம்பெற்ரிருப்பதால் காலிட் சமாட்டின் எந்தவொரு கருத்தும்  அந்தக் கூட்டணியின் கருத்தாக அமையும் என்பதை சிவராஜ் சுட்டிக்காட்டினார்.

தம்முடைய  பிரசங்கங்களில் தொடர்ச்சியாக இந்துக்களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும் ஷாகிர் இழிவுபடுத்தி வருகிறார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. எனவே தான் இதர பல அரசு சாரா அமைப்புக்களுடன்  மஇகா இளைஞர் பிரிவும் சேர்ந்து ஷாகிரின் மலேசிய நிகழ்ச்சிகளுக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்தது என்று சிவராஜ் சொன்னார்.

மேலும் காலிட் சமாட்டின் கருத்து, எதிர்க்கட்சி கூட்டணியின் கருத்தைப் பிரதிபலிக்கிறதா? என்பது குறித்து ஜசெகவிலுள்ள இந்திய தலைவர்களும் ஹிண்ட்ராப் தலைவர்களும் விளக்கம் கோர முன்வரவேண்டும் என்று  அவர் கேட்டுக்கொண்டார்.

ஷாகிர் விவகாரத்தில் பாஸ் கட்சியின் கொள்கையையே அமானா கட்சியும் கொண்டிருப்பது காலிட் சமாட்டின் கருத்தில் இருந்து தெரிய வருகிறது என்று சிவராஜ் கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS