ஹிண்ட்ராப் ஆதரவு; எதிர்க் கூட்டணிக்கு  நன்மை! பிஎஸ்எம் ஜெயக்குமார் கருத்து

அரசியல்
Typography

 கோலாலம்பூர், நவ.30- எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஹிண்ட்ராப் இணைக்கப்படுவது  நன்மையையே அளிக்கும். ஆனால், எதிர்க்கட்சிகளில் உள்ள இந்தியத் தலைவர்கள் அதனை விரும்பமாட்டார்கள் என்று சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கேல் ஜெயகுமார் கூறினார். 

"பிகேஆர் மற்றும் ஜசெக கட்சிகளில் பல இந்தியத் தலைவர்கள் உள்ளனர். பக்காத்தான் ஹராப்பான் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் இதர கட்சிகளிலும், இந்தியத் தலைவர்கள் உள்ளனர். 

ஹிண்ட்ராப் பக்காத்தான் ஹராப்பானில் இணைவதால், தங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரங்கள் கிடைக்காமல் போகக்கூடும் என்று அவர்கள் கருதலாம்" என்று மலேசிய சோஸியலிஸ்ட் கட்சி (பி.எஸ்.எம்) தலைவருமான டாக்டர் மைக்கேல் கருத்துரைத்தார்.  

"ஜசெக மற்றும் பிகேஆர் கட்சிகளைச் சேர்ந்த இந்தியத் தலைவர்கள் பலர், கடந்த பொதுத் தேர்தல்களில் மஇகா  தொகுதிகளில், அக்கட்சிக்கு எதிராக போட்டியிட்டு தோல்விக் கண்டார்கள். அந்தத் தோல்வியை மாற்றியமைக்க தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் இம்முறையும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். 

ஆனால், ஹிண்ட்ராப் இணைக்கப்படுவதன் வாயிலாக தங்களுக்கான இன்னொரு வாய்ப்பு பறிபோய்விடும் என்ற எண்ணம் அவர்களுக்குள் இருக்கும் வாய்ப்பு உண்டு" என்று அவர் சொன்னார். 

இதனிடையில், இந்தியர்களின் வாழ்க்கை முறையை மட்டுமே மாற்ற வேண்டும் என்ற ஹிண்ட்ராப்பின் கொள்கையின் தனக்கு உடன்பாடு இல்லயென்று  அவர் சொன்னார். 

"இந்தியர்களின் மத்தியில் நிலவும் ஏழ்மை நிலைக்கு காரணம் என்ன? அவர்களின் இனமா? அல்லது சமூகப் பொருளாதார நிலையா? சமூகப் பொருளாதார நிலைமையால் தான் நாட்டில் ஏழ்மையின் பிடியில் பலர் சிக்கித் தவிக்கின்றனர் என்று நான் கருதுகிறேன். 

அதனால், சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் வாயிலாக அனைத்து இன மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே என் குறிக்கோள். ஹிண்ட்ராப்பை போல் இந்திய மக்களை மட்டுமே வாழ வைக்க வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல. 

இருந்த போதிலும், மஇகாவைப் போலில்லாமல், இந்தியர்களின் நலனுக்காக ஹிண்ட்ராப் உண்மையிலேயே பாடுபடுகிறது என்றும் அவர் தெரிவித்தார். 

 இதனிடையில், அனைத்து இனத்தைச் சேர்ந்த 70 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டு, ஓய்வூதியத் திட்டம் ஒன்றை அமல்படுத்துவது குறித்து பி.எஸ்.எம் கட்சி ஆராய்ந்து வருவதாகவும் டாக்டர் மைக்கேல் கூறினார். 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS