எதிர்கட்சியின் வெட்டிப் பேச்சுகளை நம்பாதீர்! -இந்தியர்களுக்கு நஜிப் அறிவுறுத்து-

அரசியல்
Typography

கோலாலம்பூர், டிச.4- எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிப் பெரும் பொருட்டு, எதிர்கட்சியினரின் பல பொய்க் கதைகளை கூறி வருகின்றனர் என்றும் அவர்களின் வெட்டிப் பேச்சுகளை சட்டை செய்ய வேண்டாம் என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் இந்தியர்களை அறிவுறுத்தினார்.  

"எதிர்கட்சித் தலைவர்கள் சிலர் வெட்டிப் பேச்சுகளை பேசுவதில் வல்லவர்கள். ஆனால், மக்களுக்கு கொடுக்கும் எந்த வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்ற மாட்டார்கள். யார் வாக்குறுதிகளை காப்பாற்றுகின்றார்களோ, அவர்களுக்கே மக்கள் தங்களின் ஆதரவுகளை வழங்கவேண்டும். ஒருவரின் பேச்சுத் திறமைக்காக ஆதரவுகளை வழங்கக்கூடாது" என்று மக்கள் கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு, பிரதமர் நஜிப் அவ்வாறு கூறினார். 

வேண்டுமென்றே மத்திய அரசாங்கத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், எதிர்கட்சியினர் இல்லாததை இருப்பதுபோல் திரித்து பேசுகிறார்கள் என்றும், ஆதாரம் இல்லாத எந்தப் பேச்சையும் மக்கள் நம்பக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.  

இதனிடையில், இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதாரம் மேம்படும் பொருட்டு, அரசாங்கள் பல திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தியுள்ளது என்றும் நஜிப் தெரிவித்தார்.  

"மலேசிய வரலாற்றில், அரசாங்கத்தால் இந்தியர்களுக்கான ப்ளூபிரிண்ட் இதுவரை அறிவிக்கப்பட்டதில்லை. இந்திய மக்களின் மீது அக்கறைக் கொண்டு, நாங்கள் இவ்வருடம் அந்த ப்ளூபிரிண்டை அறிமுகப்படுத்தினோம்" என்று அவர் கூறினார்.  

நாட்டில் உள்ள ஒட்டு மொத்த இந்தியர்களின் தேவைகளையும் நலன்களையும் பாதுகாக்கக்கூடிய, நீண்ட கால அடிப்படையில், அந்த ப்ளூபிரிண்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. மலேசிய இந்தியர்களின் பொருளாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு, 1 பில்லியன் ரிங்கிட் இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று நஜிப் கூறினார். 

"ஒரு சமூகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டுமானால், அவர்களுக்கு முதலில் கல்வி அறிவு வழங்கப்பட வேண்டும்" என்று அவர் கருத்து தெரிவித்தார்.  

இதனிடையே, மக்கள் கட்சியின் 133,000 உறுப்பினர்களும், தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு தங்களின் ஆதரவினை தெரிவித்துள்ளனர் என்று மக்கள் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் அப்பொதுக் கூட்டத்தில் அறிவித்தார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS