செனட்டர் பதவியில் 30% பெண்கள்! -பிரதமர் நஜிப் பரிந்துரை-

அரசியல்
Typography

கோலாலம்பூர், டிச.4- எதிர்வரும் பொதுத் தேர்தலில், தேசிய முன்னணி கட்சி மிகச் சிறப்பான வெற்றியை அடைந்தால், அடுத்த முறை வழங்கப்படவிருக்கும் நாடாளுமன்ற செனட்டர் பதவிகளில், குறைந்தது 30 விழுக்காடாவது பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் பரிந்துரைக்கிறது என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.  

"இந்தப் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டும். அதனைச் செயல்படுத்தும் பொருட்டு, அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அதிகமான தொகுதிகளை வெல்ல வேண்டும்" என்று 2017-ஆம் ஆண்டின் அரசியலில் பெண்களின் ஈடுபாடு என்ற அனைத்துலக மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் அவ்வாறு சொன்னார். 

"பெண்களை முதலில் நாடாளுமன்றத்தில் செனட்டர் பதவிகளில் தேர்ந்தெடுத்து, அவர்களின் தலைமைத்துவ திறனை நாம் வெளிக்கொணரலாம்" என்று அவர் கருத்து தெரிவித்தார்.  

இந்த 2017-ஆம் ஆண்டின் அரசியலில் பெண்களின் ஈடுபாடு என்ற அனைத்துலக மாநாட்டில் அம்னோவின் மகளிர் பிரிவுத் தலைவர் டான்ஶ்ரீ ஷாரிசாட் அப்துல் ஜாலில், பிரதமர் நஜிப்பின் துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோர், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஶ்ரீ தெங்கு அட்னான், மகளிர், குடும்பம் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் டத்தோஶ்ரீ ரொஹானி அப்துல் காரிம் மற்றும் கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ மட்ஸீர் காலீட் ஆகியோர் கலந்து கொண்டனர். 

"அரசியலில் பெண்களின் ஈடுபாடு அதிகரிக்கப்பட வேண்டும். இதன் வாயிலாக, ஜனநாயகம் மேலும் வலுவடையும். சாமன்ய மக்களிடத்தில் மிகவும் பண்பாகவும், பொறுமையுடன் நடந்துக் கொண்டு, தேசிய முன்னணிக்கு பலரின் ஆதரவுகளை திரட்டுவதில் அம்னோவின் மகளிர் அணியினர் பலமுறை உதவியுள்ளனர். அவர்கள்தான் அம்னோவின் முதுகெலும்பு" என்று நஜிப் தெரிவித்தார்.   

பெண்கள் மேலும் பல வெற்றிகளை குவிக்க வேண்டும். தலைமைத்துவத்தில் அவர்கள் சிறக்க வேண்டும் என்று நஜிப் கூறினார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS