கேமரன் மலையில் போட்டியிடப் போவது யார்? பிரதமரே முடிவு செய்வார்! ஸாஹிட் கருத்து!

அரசியல்
Typography

கோலாலம்பூர், டிச.5- கேமரன் மலைத் தொகுதியில் தேசிய முன்னணியின் வேட்பாளராக யார் நியமிக்கப்படுவார் என்பதை பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கே முடிவு செய்வார் என்று துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமீடி கூறினார்.

"தேசிய முன்னணியின் தலைவர் என்ற அடிப்படையில், யாரை வேட்பாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை பிரதமரே முடிவு செய்வார்" என்று செய்தியாளர்களின் கேமரன் மலைத் தொகுதி வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு ஸாஹிட் அவ்வாறு பதிலளித்தார். 

எதிர்வரும் 14ஆவது பொதுத் தேர்தலில், கேமரன் மலைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளான மஇகா மற்றும் மைபிபிபி ஆகிய இரு கட்சிகளும் ஆர்வம் தெரிவித்துள்ளன. அத்தொகுதியில், கடந்த 2004-ஆம் ஆண்டிலிருந்து மஇகா கட்சி வேட்பாளரே போட்டியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையில், அடுத்த ஆண்டு நடைப்பெறவிருக்கும் பொதுத் தேர்தலில், அத்தொகுதியை வேறு எந்தக் கட்சிக்கும் விட்டுக் கொடுக்கும் எண்ணம் மஇகாவிற்கு இல்லை என்று மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அண்மையில் தெரிவித்திருந்தார்.  

அத்தொகுதியில் நேரடி வேட்பாளர் நியமிப்பு முறை நிகழ்த்தப்படுமா என்ற கேள்விக்கு அவசியம் ஏற்பட்டால், அந்த முறை செயல்படுத்தப்படும் என்று ஸாஹிட் கூறினார்.  

"சரவாக்கில் இந்த முறை கடந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட்து. ஆனால், அங்குள்ள அரசியல் நிலவரம் வேறு. இருப்பினும், அந்த முறைக்கு அவசியம் ஏற்பட்டால், தேசிய முன்னணி அதனைப் பயன்படுத்தும்" என்று அவர் தெரிவித்தார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS