மஇகா- ஆர்.ஓ.எஸ். மீதான வழக்கை வாபஸ்! -ஏ.கே.ராமலிங்கம் அறிக்கை 

அரசியல்
Typography

 

கோலாலம்பூர், டிச.6- தேசிய முன்னணி மற்றும் மஇகாவின் நலன் கருதி, ஆர்.ஓ.எஸ் மற்றும் ம.இ.காவிற்கு எதிராகத் தாங்கள் உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கை வாபஸ் பெற்றிருப்பதாக ம.இ.கா.வின் முன்னாள் வியூக இயக்குநர் ஏ.கே.ராமலிங்கம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

அவர் அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

"என்னுடன் இணைந்து, டத்தோ ஹென்ரி பெனடிக் ஆசிர்வதம், மற்றும் டத்தோ வி.ராஜு ஆகியோரும் மஇகா மற்றும் ஆர்.ஓ.எஸ் மீதான தங்களின் வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதன் தொடர்பாக, டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியத்துடன் பலமுறை நாங்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டோம். அதனைத் தொடர்ந்து, நாங்கள் அதிகம் நேசிக்கும் எங்களின் கட்சியின் எதிர்கால நலன் கருதி இந்த முடிவினை நாங்கள் எடுத்துள்ளோம். 

"இந்த வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மீண்டும் கட்சியை வலுப்படுத்தும் காலம் இப்போது மலர்ந்துள்ளதாக நான் கருதுகிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பு, கட்சியிலிருந்து பிரிந்துச் சென்ற அனைவரும், மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று நாங்கள் டாக்டர் சுப்ரமணியத்திடம் கேட்டுக் கொண்டோம். 

அதற்கிணங்க, கட்சியிலிருந்து தனித்திருந்த அனைவரும் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவர். இந்திய சமுதாய நலனுக்காக, நமது சொந்த விருப்பு வெறுப்பைத் தள்ளி வைத்து விட்டு, அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இந்நாட்டின் மிகவும் பழைமை வாய்ந்த இந்தியர்களை பிரதிநிதிக்கும் கட்சியான ம.இ.கா, இந்திய மக்களுடன் வரலாறு கொண்டிருக்கிறது. கட்சியின் மீதான வழக்கு தொடரப்பட்டால், அது எதிர்வரும் 14-ஆவது பொதுத் தேர்தலில், கட்சிக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். 

"பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் அறிவுரையின் பேரில், மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேலின் ஆதரவாளர்களாகிய நாங்கள், தற்போதைய மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்துடன் இணைந்து செயலாற்றி, கட்சி முன்பு பெற்ற வெற்றிகளை மீண்டும் கொண்டு வருவதற்கு பாடுபடுவோம்." 

"கடந்த மூன்று ஆண்டுகளாக, இந்த வழக்கிற்கு ஆதரவு தெரிவித்து, எங்களுடன் இணைந்து பங்காற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை இங்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பிரச்சனை இத்துடன் ஒரு முடிவுக்கு வருகிறது. அடுத்தப் பொதுத் தேர்தலில், மஇகாவின் வெற்றிக்காக நாம் அனைவரும் இணைந்து போராடுவோம்." 

இவ்வாறு ஏ.கே.ராமலிங்கம் தம்முடைய அறிக்கையில் கூறியுள்ளார்.

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS