மகாதீர் எல்லையைக் கடந்து போய்விட்டார்! -பிரதமர் நஜிப் சாடல்

அரசியல்
Typography

 

கோலாலம்பூர், டிச.7- எதை எல்லாம் செய்யக்கூடாது, யாருடன் உறவுக் கொண்டாடக் கூடாது என்று பிறருக்கு முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவுறுத்தினாரோ, அதையெல்லாம் அவர் இப்போது செய்து கொண்டிருக்கிறார் என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் கூறினார். 

"மலாய்க்காரர்கள் எப்போதும் பழையதை மறந்து விடுவார்கள் என்று இதே மேடையில் நின்று அவர் பேசினார். இப்போது அவரே முன்பு சொன்னது எதையும் பின்பற்றாமல், அனைத்தையும் மறந்து செயல்படுகிறார்" என்று நஜிப் கூறினார். 

"எந்த எதிர்க்கட்சியை பிரதமராக இருந்த போது தாக்கி வந்தாரோ, அந்த எதிர்க்கட்சியுடன் இப்போது இணைந்து விட்டார். தனக்கும் தன் குடும்பத்திற்கும் லாபம் கிடைக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கம். அவர், அவர் தனது எல்லைக் கோட்டினை கடந்து விட்டார்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் 32 மில்லியன் மக்கள் உள்ளனர். அவர்களின் இன, மத, பேதம் பாராமல், அனைவரும் மலேசியர்களே என்ற அடிப்படையில் அரசாங்கம் பல உதவிகளை வழங்கி வருகிறது.  "ஆனால், ஒரு முன்னாள் பிரதமர், இன்னும் அதே பழைய பஞ்சாங்கத்தையே புரட்டிக் கொண்டிருக்கிறார். அண்மையில் கூட, புகிஸ் வம்சாவளியினர் குறித்து அவர் தவறான கருத்து தெரிவித்திருந்தார்" என்று நஜிப் சுட்டிக் காட்டினார். 

கடந்த அக்டோபர் மாதம் 14-ஆம் தேதியன்று, பேரணி ஒன்றில் கலந்து கொண்ட டாக்டர் மகாதீர், புகிஸ் கடற்கொள்ளையர்கள் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் மலேசியத் தலைவராக இருக்கிறார் என்று கருத்துரைத்திருந்தார். 

அதனைத் தொடர்ந்து, பல புகிஸ் வம்சாவளியினர், குறிப்பாக, சிலாங்கூர் சுல்தான், மற்றும் புகிஸ் அமைப்பினர்கள், மகாதீரை சாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்னோ மலேசியர்கள் அனைவரையும் அரவணைக்கும் கட்சியாகும் என்று பிரதமர் நஜிப் அம்னோ சிறப்பு பேரவையில் உரையாற்றுகையில் கூறினார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS