துன் சாமிவேலு பற்றி தவறாகப் பேசினேனா? -டத்தோஶ்ரீ தேவமணி மறுப்பு!

அரசியல்
Typography

 

கோலாலம்பூர், டிசம்.11- இன்றைய நாளிதழில் ஒன்றில் துன் சாமிவேலு பற்றி நான் கூறியதாக பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி முற்றிலும் தவறான செய்தியாகும். எனது உரையினை திரித்து, தவறான பொருள் படும்படி சித்தரிக்கப்பட்டுள்ளது என்று மஇகாவின் தேசிய துணைத்தலைவரும் பிரதமர் துணையமைச்சருமான டத்தோஶ்ரீ தேவமணி விளக்கினார்.

மலேசியாவின் பிரபல தமிழ் நாளிதழான மக்கள் ஓசையில் வெளிவந்திருக்கும் தம்மை பற்றிய செய்தி குறித்து டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி பத்திரிகை அறிக்கை ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். 

அவர் மேலும் கூறியிருப்பதாவது:

சம்பந்தப்பட்ட அந்நிகழ்வில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் காலத்தில் இந்தியர்களுக்கான எவ்வித சிறப்பு திட்டங்களோ, அமலாக்கமோ இல்லாததை தொட்டு பேசினேன். 'துன்' என்று துன் மகாதீரை குறப்பிட்டேனே தவிர, துன் சாமிவேலுவை அல்ல. நிகழ்வில் கலந்து கொண்ட ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர்கள் டத்தோ ந. முனியாண்டி மற்றும் டத்தோ எஸ்.எம். முத்து இக்கூற்றினை உறுதிப்படுத்துவர்.

இவ்வாறு திரித்துப் பிரசுரிக்கப்பட்ட செய்தியினால் மக்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. 14ஆவது பொதுத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள வேளையில், ம.இ.கா மற்றும் தேசிய முன்னணி மீது சமுதாயம் கொண்டுள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வல்லமையை இதுபோன்ற செய்திகள் கொண்டுள்ளன.

என்னை ம.இ.கா வாயிலாக சமுதாய பணிகளுக்கு அறிமுகம் செய்து அரசியல் ஆசானாக, வழிக்காட்டியாக திகழும் துன் சாமிவேலு அவர்களை என்றும் மறவேன். இந்திய சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியவை.

ஆதலால், தவறான பத்திரிக்கை செய்தியினால் குழப்பமடையாமல், அதை புறந்தள்ளி நமது மக்கள் பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு தம்முடைய பத்திரிகை அறிக்கையில் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி கூறியுள்ளார்.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS