டிசம்.31-ஆம் தேதி அறிவிப்பு வருமா? ரஜினி அரசியலில்  பிரவேசிப்பாரா?

அரசியல்
Typography

சென்னை, டிச.23- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்ற சந்தேகம் பலரிடம் எழுந்துள்ள வேளையில், எதிர்வரும் 31-ஆம் தேதியன்று அது குறித்த அறிவிப்பை அவர் வெளியிடவிருப்பதாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.   

கிறிஸ்துமஸ் தினம் முடிந்த அடுத்த நாள், அதாவது 26-ஆம் தேதி தொடங்கி, 31-ஆம் தேதி வரை, நடிகர் ரஜினி சென்னையில் தனது ரசிகர்களை சந்திக்கவிருக்கிறார். இதன் தொடர்பில், தனது நண்பரும் அரசியல் ஆலோசகருமான தமிழருவி மணியனுடன் ரஜினி நேற்று போயஸ் கார்டனிலுள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். 

அந்தச் சந்திப்பிற்கு பின்னர், தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நடிகர் ரஜினி டிசம்பர் 31ஆம் தேதியன்று அரசியலில் தாம் குதிக்கவிருக்கின்றாரா? என்ற கேள்விக்கு விடையளிக்கும் வண்ணம் அறிவிப்பு ஒன்ற வெளியிடுவார் என்று தமிழருவி மணியம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. 

"நடிகர் ரஜினிகாந்துடனான இன்றைய சந்திப்பு வழக்கமான சந்திப்பு தான். டிசம்பர் 26 முதல் 31ஆம் தேதி வரை, அவர் தனது ரசிகர்களை சந்திக்கவிருக்கிறார். அந்நாட்களில் ஏதேனும் ஒரு நாளன்று, அரசியல் வருகை குறித்த அவர் அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார்" என்று தமிழருவி மணியன் கூறினார். 

இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் ஆலோசகராக தமிழருவி மணியன் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. கடந்த மே மாதத்தில் ரஜினியை சந்தித்த பிறகு ரஜினியின் அரசியல் ஆர்வம் குறித்து தமிழருவி மணியன் ஊடகங்களில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS