மலாய்க்காரர்களை மட்டுமே கொண்ட அமைச்சரவை!  - ஹாடி அவாங் கூறுகிறார்

அரசியல்
Typography

கோலாலம்பூர், டிசம். 25- பெரும்பான்மையைக் கொண்ட சமூகம் என்பதால் மலேசிய அமைச்சரவை என்பது முழுக்க மலாய்க்காரர்களை மட்டுமே அமைச்சர்களாக கொண்டிருக்கவேண்டும் என்பதே பாஸ் கட்சியின் எதிர்கால விருப்பம் என்று பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறினார்.

தேசிய தலைவர் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் இஸ்லாமிய நம்பிக்கையில் உறுதிப்பாடு கொண்டிருக்கவேண்டும் என்று இஸ்லாம் வரையறுத்து இருப்பதாக அவர் சொன்னார்.

அரசியல், பொருளாதாரம் மற்றும் வாழ்க்கையின் இதர அம்சங்களில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாம் உரிமை வழங்கி இருக்கிறது என்று  பாஸ் கட்சியின் பிரசார ஏடான ஹராக்காவில் ஹாடி அவாங் கூறியுள்ளார்.

முஸ்லிம் அல்லாதவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படலாம். ஆனால், அவர்கள் நிர்வாகப் பணிகளை மட்டுமே செய்ய வேண்டும் என்று இஸ்லாம் வரையறுப்பதாக இஸ்லாமிய அறிஞர் அல் மவார்டி என்பவரை மேற்கோள் காட்டி ஹாடி அவாங் கூறியுள்ளார்.

அப்படி அமைச்சர்களாக நியமிக்கப்படும் முஸ்லிம் அல்லாதவர்கள் நிர்வாகப் பணிகளை செய்யலாமே தவிர கொள்கை வகுப்பாளாராக இருக்க முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மற்ற சமயங்களின் நடைமுறையில் தலையிடாமல் இதர சமயங்களின் உரிமைகளை இஸ்லாம் பேணுகிறது என்றார் அவர்.  அரசியலைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களுக்கான கோட்பாடுகளையும் கொள்கைகளையும் பாதுகாக்க இஸ்லாமே அடிப்படை தலைமைத்துவத்தை கொண்டிருக்கவேண்டும் என்றார் அவர்.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS