மலாய்க்காரர்கள் மட்டுமே அமைச்சர்களா? ஹாடி அவாங் கருத்து; வேள்பாரி ஆட்சேபம்!

அரசியல்
Typography

கோலாலம்பூர், டிசம்.26- மலேசிய அமைச்சரவையில் மலாய் முஸ்லிம்கள் மட்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும் என்று பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் கூறியிருக்கும் கருத்து, நாட்டில் இனங்களுக்கு இடையிலான உறவுகளை வளர்ப்பதற்கு எந்த வகையிலும் உதவாது என்று மஇகாவின் பொருளாளரான டத்தோஶ்ரீ வேள்பாரி தெரிவித்தார்.

பல் இன மக்களைக் கொண்ட நாட்டில், மலேசியத் தலைமைத்துவம் என்பது முக்கிய பதவிகளில் பல இனங்களைச் சார்ந்தவர்களும்  இடம்பெற வேண்டிய அவசியத்தைக் கொண்டிருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இன மற்றும் சமய வேறுபாடுகளைக் காரணமாக வைத்து,  நாட்டின் நிர்வாகத்தில் இருந்து சிறுபான்மையினர் ஓரங்கட்டப் படக் கூடாது. தண்டிக்கப் படக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

உதாரணமாக, மஇகாவின் தேசியத் தலைவரான டத்தோஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியம், தேர்ச்சி பெற்ற ஒரு டாக்டர். முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதார் ஆகிய இரு தரப்பினரையும் உள்ளடக்கிய சுகாதார தொழில்  தொடர்பான கொள்கைகளை வகுப்பதற்கான தகுதியைக் கொண்டிருப்பவர் என்று வேள்பாரி குறிப்பிட்டார்.

மேலும், சுகாதாரத்துறை துணையமைச்சராக இருப்பவர் ஒரு முஸ்லிம். அமைச்சருக்கும் துணையமைச்சருக்கும் இடையே  அமைச்சுக்குள் எத்தகைய சுகாதாரக் கொள்கைகள் குறித்தும் எப்போதும் விவாதங்கள் இடம்பெறுவது உண்டு. 

ஆக, எல்லாவற்றுக்கும் மேலாக, மிக முக்கியத்துவம் வாய்ந்தது மக்களின் நலன்கள் தான் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மலேசிய அமைச்சரவை முற்றிலும் மலாய் முஸ்லிம்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்பது தான் தங்களின் எதிர்கால இலக்கு என்று பாஸ் தலைவர் ஹாடி அவாங் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் அல்லாதவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படலாம். ஆனால் அவர்கள் நிர்வாக வேலைகள் மட்டும் செய்ய வேண்டுமே தவிர, கொள்கை வகுப்பதில் சம்பந்தப் படக்கூடாது என்றும் ஹராக்கா பத்த்ரிகையில் ஹாடி அவாங் கூறியிருந்தார்.

இதனிடையே, ஹாடி அவாங்கின் கருத்து தொடர்பாக பேசிய மசீச சமய நல்லிணக்க பிரிவின் தலைவர் டத்தோ டி லியன் கெர், சிறுபானமை மக்கள் சம்பந்தப்பட்ட ஜனநாயக கோட்பாடுகள் குறித்து ஹாடி அவாங் தவறான அர்த்தங்களைக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்.

இனம் மற்றும் சமய அடிப்படையில் மலேசியாவை ஹாடி அவாங் பிரிக்க முயற்சிக்கக்கூடாது என்று கெராக்கான் கட்சியின் உதவித் தலைவரான டாக்டர் டொமினிக் லாவ் வலியுறுத்தினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS