மலாய்க்காரர்கள் மட்டுமே அமைச்சர்களா? ஹாடி அவாங்கிற்கு மசீச கண்டனம்!

அரசியல்
Typography

கோலாலம்பூர், டிச.27- மலேசிய அமைச்சரவையில் மலாய் முஸ்லிம்கள் மட்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும் என்று பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் வெளிப்படையாகக் கூறியதைத் தொடர்ந்து பலர் கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஹாடியின் பேச்சை ஊடகங்கள் திரித்து கூறி விட்டதாக அவர் தரப்பினர் கூறுவது ஏற்புடையதாக இல்லை என்று மசீச மத நல்லிணக்க பிரிவின் தலைவர் டத்தோஶ்ரீ டீ லியான் கேர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மலேசிய அமைச்சரவை மலாய் முஸ்லிம்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படலாம். ஆனால், அவர்கள் நிர்வாக வேலைகள் மட்டும் செய்ய வேண்டும். கொள்கை வகுப்பதில் சம்பந்தப் படக்கூடாது என்று ஹராக்கா பத்திரிக்கையில் ஹாடி அவாங் கூறியிருந்தார்.  

"பாஸ் கட்சியானது, பாகுபாடு கொண்ட கட்சி என்பதை தனது கருத்துகள் வாயிலாக ஹாடி அவாங் நிரூபித்துள்ளார். இவ்வாறான கருத்தைக் கொண்டிருக்கும் தலைவரை மக்கள் எவ்வாறு நம்ப முடியும்? அவரின் கருத்துகளுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருவதைத் தொடர்ந்து, தாம் அவ்வாறு கூறவில்லை என்று அவர் பின்வாங்குகிறார்" என்று டத்தோஶ்ரீ டீ லியான் கேர் சொன்னார். 

இன மற்றும் சமய வேறுபாடுகளைக் காரணமாக வைத்து,  நாட்டின் நிர்வாகத்தில் இருந்து சிறுபான்மையினரை ஓரங்கட்டும் முயற்சியில் ஹாடி அவாங் ஈடுபடுகின்றார் என்று டீ லியாங் சாடினார். மனிதநேயத்திற்கு முக்கியத்துவம் வழங்க அவர் தவறி விட்டார் என்றும் டீ லியாங் சுட்டிக் காட்டினார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS