கேமரன் மலை தொகுதியில் தே.மு வேட்பாளர் யார்? மஇகா, மைபிபிபி ரகசியப் பேச்சு வார்த்தை!

அரசியல்
Typography

கோலாலம்பூர், டிச.28- எதிர்வரும் 14-ஆவது பொதுத் தேர்தலுக்கு ஆயுத்தமாகும் பொருட்டு, ஜனவரி 3-ஆம் தேதியன்று நடைப்பெறவிருக்கும் தேசிய முன்னணி உச்சமன்ற உறுப்பினர்களுக்கான சந்திப்பின் போது, தேசிய முன்னணியின் சார்பில், கேமரன் மலைத் தொகுதியில் போட்டியிடப் போவது யார் என்பது குறித்து கலந்தாலோசிக்கப்படாது. 

மாறாக, அது குறித்து, தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளான மஇகா மற்றும் மைபிபிபி தலைவர்கள் மத்தியில் இரகசிய பேச்சு வார்த்தை கூடிய விரைவில் நடைப்பெறவிருப்பதாக மைபிபிபி தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் அறிவித்துள்ளார். 

"தேசிய முன்னணியின் இதர உறுப்புக் கட்சிகள் முன்னிலையில் இந்தப் பேச்சு வார்த்தை நிச்சயமாக நடைப்பெறாது. அந்தத் தொகுதியில் போட்டியிடுவது யார் என்பது குறித்து மஇகா மற்றும் மைபிபிபி மட்டும்தான் கலந்துரையாட முடியும். இருந்த போதிலும், அத்தொகுதியில் போட்டியிடப் போவது யார் என்பது குறித்து பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கே முடிவு எடுப்பார்" என்று டான்ஶ்ரீ எம்.கேவியஸ் கூறினார். 

அத்தொகுதியில் வெற்றி வாகை சூடும் பொருட்டு, தகுதியான வேட்பாளரை மிகவும் கவனத்துடன் பிரதமர் தேர்ந்தெடுப்பார் என்று தாம் நம்புவதாகவும் கேவியஸ் கருத்துரைத்தார். கேமரன் மலையில் போட்டியிட மைபிபிபி தேர்ந்தெடுக்கப்பட்டால், அத்தொகுதி வாழ் மக்களின் நலனுக்கும், தேசிய முன்னணியின் வெற்றிக்கும் தாங்கள் தொடர்ந்து பாடுபடவிருப்பதாக அவர் உறுதியளித்தார். 

"அத்தொகுதியிலுள்ள 28,000 வாக்காளர்களையும், 5,000 புதிய வாக்காளர்களையும் மைபிபிபி கட்சி கடந்த மூன்று வருடங்களாக நேரில் சந்தித்து வருகிறது. இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியை சூடும் அதிக வாய்ப்பு மைபிபிபிக்கே உண்டு" என்று கேவியஸ் சொன்னார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS