தெலுக் இந்தானில் குலசேகரன் போட்டி? கெராக்கான் தலைவருடன் அதிரடி மோதல்!

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஜன.3- நடப்பு ஈப்போ பாராட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான எம்.குலசேகரன், அடுத்து வரும் பொதுத் தேர்தலில் தெலுக் இந்தான் தொகுதியில் கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவரான மா சியூ கீயோங்கை எதிர்த்து போட்டியிடுவார் என ஜசெக வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த 2014ஆம் ஆண்டில் தெலுக் இந்தானில் நடந்த இடைத்தேர்தலில் ஜசெக வேட்பாளரான டியானா சோஃப்யாவை 238 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே மா சியூ கியோங் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இந்த இடைத்தேர்தலில் இந்தியர்களின் வாக்குகள் தேசிய முன்னணிக்கு ஆதரவாக அமைந்ததோடு வெளியூர்களில் இருந்த சீன வாக்காளர்கள் பலர் வாக்களிக்கத் தொகுதிக்கு வராமல் போனதால் ஜசெக தோல்வி கண்டதாக கூறப்பட்டது.

மூன்று தவணைகள் ஈப்போ பாராட் தொகுதியில் எம்.பி.யாக இருந்துள்ள குலசேகரனால், தெலுக் இந்தான் தொகுதியை மீட்டெடுக்க முடியும் என்று ஜசெக நம்புவதாகக் கூறப்பட்டது.

இது குறித்து விளக்கம் கோரப்பட்ட போது, " கட்சி அந்தத் தொகுதிக்குப் போகச் சொன்னால், நான் போவேன்'' என்று குலசேகரன் பதிலளித்துள்ளார்.

''தெலுக் இந்தான்  தொகுதிக்கு நான் செல்லும் போதெல்லாம் மக்கள்  என்னை  அந்தத் தொகுதிக்கு வரும்படி கோருவதுண்டு. இந்நிலையில் கட்சி என்னை அங்கு போட்டியிடும் படி கோருமேயானால் நான் அங்கு செல்வேன் என்றார் அவர்.

கடந்த 1997 ஆம் ஆண்டில் தெலுக் இந்தான் தொகுதியில் நடந்த இடைத்தேர்தல் ஒன்றில் கெராக்கான் வேட்பாளர் ஷீ சி சோக்கை வென்று அத்தொகுதியின் எம்.பி. ஆனர் குலசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS