இந்தியக் கட்சிகளுடன் பேரணி; அவசியம் இல்லை என்கிறார் சுப்ரா!

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஜன.5- எதிர்வரும் 14-ஆவது பொதுத் தேர்தலில் இந்திய வாக்காளர்களின் வாக்குகளை வெல்லும் பொருட்டு, தேசிய முன்னணியின் இதர இந்திய பங்காளிக் கட்சிகளுடன் மஇகா ஒன்றிணைந்து பேரணி நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று அதன் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார்.  

"இந்தியர்களின் வாக்குகளை தேசிய முன்னணியின் பக்கம் திருப்புவதற்கு மஇகா வேறு வழிமுறையை பின்பற்றும். ஒன்றிணைந்து பேரணி நடத்துவதன் மூலமாக இந்தியர்கள் வாக்குகளை நாம் வென்று விடமுடியாது. தேசிய முன்னணியின் இதர பங்காளிக் கட்சிகளில், குறிப்பாக கெராக்கான் கட்சியில் பல்வேறு இனத்தவர்கள் உள்ளனர். அதனால் ஒன்றிணைந்து பேரணி நடத்துவது என்பது அவர்களுக்கு பொருத்தமான அணுகுமுறையாக இருக்கலாம்" என்று சிம்பாங் லீமா தேசிய வகை தமிழ் ஆரம்ப்ப்பள்ளியில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது டாக்டர் சுப்ரா அவ்வாறு சொன்னார்.  

அந்நிகழ்ச்சியில் கல்வி அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ பி.கமலநாதனும் கலந்து கொண்டார்.  

தேசிய முன்னணிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் இதர இந்திய பங்காளி கட்சிகளுடன் மஇகா நல்லுறவை பேணி வருகிறது. இந்திய மக்களின் ஆதரவுகளை எவ்வாறு தேசிய முன்னணியின் பக்கம் திருப்புவது என்பது குறித்து அக்கட்சிகளுடன் மஇகா கலந்தாலோசித்து வருகின்ற போதிலும், ஒன்று கூடும் பேரணிக்கு அவசியம் ஏதும் இல்லை என்று சுப்ரா தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில், மக்கள் தங்களின் ஆதரவுகளை தேசிய முன்னணிக்கு வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு மசீச மற்றும் கெராக்கான் கட்சிகள் நாளை ஒன்றிணைந்து ஜாலான் அம்பாங்கிலுள்ள மசீச கட்டிடத்தில் பேரணி ஒன்றை நடத்தவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

அவ்விரு கட்சிகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தை மெருகூட்டும் வகையிலும் தாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படவிருப்பதாக மசீச பொதுச் செயலாளர் டத்தோஶ்ரீ ஒங் கா சுவான் மற்றும் கெராக்கான் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ லியாங் தெக் மெங் ஆகிய இருவரும் தகவல் தெரிவித்துள்ளனர்.  

இதனிடையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஇகா சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பட்டியலை பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கிடம் மஇகா சமர்ப்பித்து விட்டதாகவும், அது குறித்த இறுதி முடிவை பிரதமரே முடிவு செய்வார் என்றும் டாக்டர் சுப்ரா கூறினார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS