கோலாலம்பூர், ஜன.10- விரைவில் எதிர்பார்க்கப்படும் 14 ஆவது பொதுத்தேர்தலில், தீபகற்ப மலேசியாவில் துன் மகாதீர் தலைமையிலான பிரிபூமி மலேசியா கட்சி அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளில், அதாவது 52 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இக்கட்சியை அடுத்து, 51 தொகுதிகளில் பிகேஆர் கட்சியும் 35 தொகுதிகளில் ஜசெகவும் 27 தொகுதிகளில் அமானா நெகாரா கட்சியும் போட்டியிட உள்ளன. கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில் 14 இடங்களை பிகேஆர் கட்சி, பிரிபூமிக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது. பக்காத்தான் கூட்டணியிலுள்ள எதிர்க்கட்சிகள் தங்களுக்கு இடையேயான தொகுதிப் பங்கீட்டை அறிவித்துள்ளன.
பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் தொகுதியான பெக்கானில் அவரை எதிர்த்து கடந்த முறை போட்டியிட்ட பிகேஆர், இம்முறை அந்தத் தொகுதியை பிரிபூமி கட்சிக்கு விட்டுக் கொடுத்துள்ளது. எனவே, பிரதமர் நஜிப்பை எதிர்த்து துன் மகாதீரின் பிரிபூமி கட்சியின் வேட்பாளர் போட்டிடுவார்.
கடந்த தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இருந்த பாஸ் கட்சி தற்போது அந்தக் கூட்டணியில் இல்லாததால், பாஸ் போட்டியிட்ட தொகுதிளில் பெரும்பாலானவை பிரிபூமிக்கும் அமானாவுக்கும் பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளன.
மேலும், இம்முறை கிளந்தான் மாநிலத்தில் அதிகமான தொகுதிகளில் அதாவது 7 இடங்களில் பிரிபூமி கட்சியும் 5 இடங்களில் அமானா கட்சியும் 2 இடங்களில் பிகேஆர் கட்சியும் போட்டியிடுகின்றன.
அதேவேளையில், அம்னோவின் கோட்டையாக விளங்கும் ஜொகூர் மாநிலத்தில் பிரிபூமி 10 தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறது. ஶ்ரீகாடிங், பெங்கெராங், பொந்தியான் மற்றும் மூவார் ஆகிய தொகுதிகளை பிரிபூமிக்கு பிகேஆர் விட்டுக் கொடுத்துள்ளது.
மேலும் பேராவில் 8 நாடாளுமன்றத் தொகுதிகலில் பிரிபூமி போட்டியிடுகிறது. குறிப்பாக, தாப்பா தொகுதி பிரிபூமி கட்சிக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. அடுத்து தம்புன், பகான் சிராய், பாசீர் சாலாக் ஆகியவற்றிலும் அக்கட்சியே போட்டியிடுகிறது.
சிங்கை சிப்புட் தொகுதியில் பிகேஆர் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதியில் கடந்த முறை பிகேஆர் சின்னத்தில் போட்டியிட்டு டாக்டர் சேவியர் ஜெயக்குமார் வென்றார். இவர் மலேசிய சோஸலிசக் கட்சியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. கெடாவில் 6 இடங்களிலும், பகாங்கில் 6 இடங்களிலும் பிரிபூமி போட்டியிடத் தயாராக இருக்கிறது.
நஜிப்புக்கு எதிராக போட்டி: 52 எம்.பி. தொகுதிகளில் மகாதீர் கட்சி!!
Typography
- Font Size
- Default
- Reading Mode