மகளிர் கூட்டத்தில் உரை; சித்தி ஹஸ்மாவிடம் போலீஸ் விசாரணை! 

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஜன.26- கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில், மகளிர் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியதன் தொடர்பில், துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவிடம் போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோலாலம்பூரிலுள்ள யாயாசான் அல்-புகாரி கட்டிடத்தில், சித்தி ஹஸ்மாவிடம் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் முன்னாள் பிரதமரும், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் துணைவியாரான சித்தி ஹஸ்மா, கடந்தாண்டு, செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதியன்று 'நச்சுத் தன்மை வாய்ந்த அரசியலுக்கு எதிரான பெண்கள்' என்ற மகளிர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். 

டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா, டத்தீன் படுக்கா மரீனா மகாதீர், வழக்கறிஞரான டத்தோ அம்பிகா ஶ்ரீநிவாசன், மற்றும் பெர்சே தலைவர் மரியா சீன் ஆகியோரும், அக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையில், சித்தி ஹஸ்மாவிடம் போலீஸ் விசாரணை மேற்கொள்ளும் தறுவாயில், அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து பெண்களும், தனது தாயாருக்கு ஆதரவாக குரல் கொடுப்பர் என்று, மகாதீரின் மகளான மரீனா மகாதீர் தனது டுவிட்டர் அகப்பக்கத்தில் டுவீட் செய்திருந்தார். 

"கடந்தாண்டு நிகழ்ந்த கூட்டம் தொடர்பில், இப்போது விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இதைச் சற்று யோசித்துப் பாருங்கள்! என் தாயாருக்கு எங்களின் ஆதரவு என்றும் உண்டு" என்று மரீனா இன்று காலை டுவீட் செய்திருந்தார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS