செம்பனை இறக்குமதி வரி இரட்டிப்பு: மோடியுடன்  நஜிப் பேச்சுவார்த்தை!

அரசியல்
Typography

புதுடில்லி, ஜன.26- செம்பனை இறக்குமதி வரியை இந்தியா   இரண்டு மடங்கிற்கு இந்தியா அதிகரித்துள்ளது தொடர்பாக இன்று நடைபெறவிருக்கும் ஆசியான்-இந்தியா நினைவு உச்ச மாநாட்டின் போது, பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன்  பேச்சுவார்த்தை நடத்துவார்.

இதன் தொடர்பில், மலேசியாவிற்கு ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையை எடுத்துக் கூறும் பொருட்டு, பிரதமர் நஜிப் நிச்சயமாக மோடியுடன் கலந்துரையாடுவார் என்று சில வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

இந்திய விவசாயிகளின் நன்மையை கருத்தில் கொண்டு, கடந்த நவம்பர் மாதத்தின் போது, சுத்திகரிக்கப்படாத செம்பனை எண்ணெய்யின் இறக்குமதி வரியை இந்தியா 15 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடாக உயர்த்தியது. சுத்திகரிக்கப்பட்ட செம்பனை எண்ணெய்யின் இறக்குமதி வரியை 25 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காட்டிற்கு உயர்த்தியது. 

இதுவரை உணவைத் தயாரிக்கும் கச்சா எண்ணெய்க்கான இறக்குமதியை எந்த நாடும் இந்த அளவிற்கு உயர்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இந்த வரி அதிகரிப்பினால், செம்பனை எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் நாடான மலேசியாவின் வர்த்தகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று மலேசியா கருதுகிறது. 

மலேசியா மற்றும் இந்தோனிசியா ஆகிய நாடுகளிலிருந்து, 14.5 மில்லியன் டன் தாவர எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது.  மேலும், விமானப் பாதைகள் குறித்தும் மலேசியா-இந்தியா பேச்சு வார்த்தை நடத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS