மகாதீர் ஆட்சியில் பதவியை அனுபவித்தவர்கள் அவரைக் குறைகூறுவதா? வேதமூர்த்தி கண்டனம்

அரசியல்
Typography

கோலாலம்பூர், பிப்.6- மலேசிய இந்திய சமுதாயத்திற்காக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் எதுவுமே செய்யவில்லை என்று  குறைகூறும் மஇகாவின் சில தலைவர்கள் அவர் 22 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த போது அவருடைய தயவில் பதவியில் இருந்தவர்களே என்று ஹிண்ட்ராப் அமைப்பின் தேசிய தலைவர் பி.வேதமூர்த்தி சாடினார்.

அவர் இது குறித்து மேலும் கூறியிருப்பதாவது:  மகாதீர் எதுவுமே செய்யவில்லை கூறும் மஇகா தலைவர்களும் பிரதமர் நஜிப்பும் அவர் நாட்டின் பிரதமராக அவர் இருந்த போது பதவியில் இருந்தார்கள்.  இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு தாம் மீண்டும் பிரதமரானால் உதவி செய்யத் தயாராக இருப்பதாக மகாதீர் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

பிரதமராக இருந்த போது இந்தியா சமுதாயத்திற்கு மகாதீர் செய்திருக்க வேண்டும் என்று மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் அவருக்கு பதிலளித்திருக்கிறார். மகாதீரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த காலக்கட்டத்திலும் பகாங் மந்திரி புசாராக இருந்த காலக்கட்டத்திலும் நஜிப் ஏன் மவுனமாக இருந்தார்? மகாதீர் ஆட்சியின் போது துணையமைச்சராக இருந்த டாக்டர் சுப்பிரணியமும் ஏன் மவுனமாக இருந்தார்?

அப்போதெல்லாம் இந்திய சமுதாயத்திற்காக நஜிப் குரல் கொடுத்ததாக எத்தகைய பதிவும் கிடையாது. இப்போது மகாதீரைக் குறைகூறுவது ஏன்?  எதிர்க்கட்சி கூட்டணியான பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளராக மகாதீர் அறிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட பீதியில் இவர்கள் குறை கூறுகிறார்கள்.

இந்திய சமுதாயம் மகாதீருக்கு ஒரு வாய்ப்புத் தரவேண்டும். என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது தம்முடைய கடந்த காலத் தவறுகளுக்கு பரிகாரம் தேடவே மகாதீர் முனைந்துள்ளார். இவ்வாறு ஹிண்டராப் அமைப்பின் தலைவர் வேதமூர்த்தி கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS