டத்தோ அம்பிகா- மரியா சின், பொதுத் தேர்தலில் போட்டியா?

அரசியல்
Typography

கோலாலம்பூர், பிப்.22- பெர்சே இயக்கத்தின் தலைவர்களான டத்தோ அம்பிகா சீனிவாசனும் மரியா சின் அப்துல்லாவும் எதிர்வரும் பொதுத்தேர்த லில் எதிர்க்கட்சி வேட்பாளர்களாக நாடாளுமன்றத்திற்கு போட்டியிடக்கூடும் என்ற ஆருடங்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் முன்னாள் பெர்சே தலைவரும் பிரபல வழக்கறிஞருமான அம்பிகா சீனிவாசன், பிகேஆர் கட்சியின் சார்பில் காப்பார் நாடாளுமன்றத் தொகுதியிலோ அல்லது சிகாமட் தொகுதியிலோ போட்டியிடுவார் என்று ஆங்கில தினசரியான என்.எஸ்.டி.யின் செய்தி ஒன்று எதிர்க்கட்சி வட்டரங்களை மேற்கோள் காட்டி கூறியிருக்கிறது. 

அதேவேளையில் நடப்பு பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா பிகேஆர் சார்பில் பத்து தொகுதியில் அல்லது பெட்டாலிங் ஜெயா செலாத்தான் தொகுதியில் போட்டியிடக்கூடும் என்று கட்சி வட்டரங்கள் கூறியதாக அந்தச் செய்தி குறிப்பிட்டது.

எனினும், இன்னும்  இது குறித்த இறுதி முடிவை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி எடுக்கவில்லை என்றும் அது தெரிவித்தது.

பெரும்பாலும்  சிகாமட் நடாளுமன்றத் தொகுதியில் தொகுதியில் நடப்பு எம்பியான ம இகா தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியத்தை எதிர்த்து அம்பிகா நிற்கக்கூடும் என்ற மற்றொரு வட்டாரத்தை மேற்கோள் காட்டி என்.எஸ்.டி செய்தி தெரிவித்துள்ளது.

தேர்தலில் அம்பிகா போட்டியிடப் போகிறார் எனக் கடந்த காலங்களிலும் ஆருடங்கள் பரவலாக நிலவின என்றாலும் அதனை அம்பிகா மறுத்தே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், வாட்ஸ் -அப் மூலமாக தொடர்பு கொண்டு அம்பிகாவிடம் இதுபற்றிக் கேட்ட போது 'அதுவொரு வதந்தி' என்று குறிப்பிட்டார் என அந்தச் செய்தி கூறியது. அதேபோன்று மரியா சின் அப்துல்லாவிடம் கேட்ட போது 'நான் போட்டியிடவில்லை' என்று பதிலளித்ததாகவும் அது தெரிவித்துள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS