நஜிப் சாப்பிடும் 'கீன்வா' அரிசி: கிளம்பியது அரசியல் சர்ச்சை!

அரசியல்
Typography

கோலாலம்பூர், பிப்.24- விலைவாசி ஏற்றம், ஜிஎஸ்டி, வாரிசு அரசியல்,  லஞ்ச ஊழல் என பல கோணங்களில் சூடு பரப்பிக் கொண்டிருந்த மலேசிய அரசியலில், இப்போது புதிதாக புகுந்து விட்ட 'சோறு' அரசியல்  பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது.  

''கீன்வா' என்ற பெரு நாட்டிலிருந்து கிடைக்கும் ஒரு வகை அரிசியைத் தான் நான் சாப்பிடுகிறேன்' என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அண்மைய தொலைக் காட்சி பேட்டி யில் கூறியதானது, இப்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

பிரதமரின் அந்தக் கருத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஏகப்பட்ட  'அரிசி அலசல்'களையும் சமூக ஊடகங்களில்  எக்கச்சக்கமான கிண்டல்களையும் பரப்பி வருகிறார்கள்.

பிப்ரவரி 22ஆம் தேதி தொலைக்காட்சி பேட்டியில், "நான் அரிசி சோறு சாப்பிடுவதில்லை" என்று பிரதமர் நஜிப் சொன்னார். 

"அடிக்கடி என்னால் உடற்பயிற்சி செய்ய முடிவதில்லை. எனது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நான் அரிசிச் சோறு சாப்பிடுவதில்லை. மாறாக, பெரு நாட்டில் இருந்து கிடைக்கும் 'கீன்வா' ( Quinoa) என்ற வகைப்  புரதச்சத்து கொண்ட  உணவைத்தான் சாப்பிடுகிறேன்" என்று தொலைக்காட்சிப் பேட்டியில் அவர் கூறியிருந்தார்.

"உடற்பயிற்சி அடிக்கடி செய்ய முடியாததால், உடல் ஆரோக்கியத்தை கவனமாகப் பேணி வருகிறேன்.  எனக்கு  பிற மலேசியர்களைப் போலவே உணவில் அதிக விருப்பம் உண்டு. எனவே , அரிசிச் சோறு சாப்பிடுவதில்லை. கீன்வா என்ற தானிய உணவைச் சாப்பிடுகிறேன். இதில் புரோட்டின் அதிகம். கார்போஹைட்ரேட் மிகக் குறைவு.  இந்த 'கீன்வா', பெரு நாட்டைச்  சேர்ந்த உணவு. என் மகன் இதனை எனக்கு அறிமுகப்படுத்தினார் " என அந்தப் பேட்டியில் பிரதமர் கூறியிருந்தார்.

பிரதமர் நஜிப்பின் இந்தக் கூற்று, இப்போது சர்ச்சையாகியுள்ளது. விலைவாசி கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கும் நிலையில் பிரதமரின் இந்தக் தகவல் அரசியல் ரீதியில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

இந்த கீன்வா அரிசியின் ஒரு கிலோ விலை 70 ரிங்கிட் எனத் தெரிய வந்துள்ளது, அப்படியானால், 10 கிலோ பாக்கெட்  ஒன்றின் விலை கிட்டத்தட்ட  700 ரிங்கிட் ஆகும். ஆனால், பெரும்பாலான மலேசியர்கள் வழக்கமாக வாங்கி உண்ணும் 10 கிலோ அரிசி பாக்கெட்டின் விலை சராசரியாக 28  ரிங்கிட் தான் என்று இப்போது எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் சமூக ஊடகங்களில்  உலாவும் வலைத்தள வாசிகளும் கணக்குப் போட்டு கதைக்கின்றனர்.

தான் அரிசி சோறு சாப்பிடுவதில்லை என்று நஜிப் கூறியதை வைத்து தம்முடைய டிவிட்டர் பக்கத்தில்  மகாதீர் கேலி  செய்திருக்கிறார். "நான் அரிசி சோறுதான் சாப்பிடுகிறேன்.."  என்று அதில் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.  அவர் (நஜிப்) சாப்பிடுவது கீன்வா அரிசி, 250 கிராம் 15 ரிங்கிட்...  நம் மக்கள் சாப்பிடுவது கிலோ 2.50 காசு விலை  அரிசிதான் என்று குறிப்பிட்டு ஒரு பிச்சைக்காரரின்  படத்தையும் வெளியிட்டுள்ளார் மகாதீர்.

இதனிடையே, இது பற்றிக் கருத்துரைத்துள்ள எதிர்க்கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்,  "இதுவரையில் நான் கீன்வா அரிசி பற்றி கேள்விப்பட்டதே இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார். சாதாரணமான 30 மில்லியன் மலேசியர்கள் சாப்பிடும் அரிசியை விட  இந்த கீன்வா அரிசி 23 மடங்கு அதிக விலையானது என்று ஊடகத் தகவல்கள் கூறுவதை  லிம் கிட் சியாங் மேற்கோள் காட்டியுள்ளார்.

அடுத்து வரும் பொதுத் தேர்தலில் கீன்வாவுக்கும்  நம்ம ஊர் அரிசிக்கும் இடையே தான் போட்டி என்றும் அவர் கேலியாக குறிப்பிட்டிருக்கிறார்.

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS