மலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா?  அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்!

அரசியல்
Typography

கோலாலம்பூர், பிப்.27- மலேசியாவின் முதல் நிலை கோடீஸ்வரரான 91 வயதுடைய ரோபெர்ட் குவோக், தனது மலேசியக் குடியுரிமையைக் கைவிடவேண்டும், அவர் ஆண்மையற்றவர், அவர் ஒரு பொட்டைக் கோழி என்றெல்லாம் வர்ணித்த கலாசார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் நஸ்ரி அஸீசின் செயல் மிகவும் வேதனையளிக்கக் கூடியது என்று  மசீசக்சாடியது.

'குடியுரிமையைத்  திருப்பிக் கொடு' என்று எந்தவொரு மலேசியரையும் பார்த்துக் கேட்கின்ற உரிமை நஸ்ரிக்கு கிடையாது. அது, அவருடைய அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல என்று மசீசவின் தலைமைச் செயலாளர் ஓங் கா சுவான் வலியுறுத்தினார்.

மலேசியக் கோடீஸ்வரர் ரோபெர்ட் குவோக், ஜசெக கட்சிக்கு நிதியுதவி செய்தார் என்றும் அவர் பாரிசான் ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்கிறார் என்றும்   ஒரு வலைப் பதிவாளரான  ராஜா பெட்ரா கமாருடின்  மற்றும் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் ஆகியோர் குறை கூறியிருந்தனர்.

உண்மையில் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்கினை ஆற்றியிருப்பவர் ரோபெர்ட் குவோக். அனைத்துலக அளவில் வெற்றிகரமான, அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழிலதிபர். அவருக்கு எதிரான சில அம்னோ தலைவர்களின் கருத்து வெறுப்பைத் தூண்டும் வகையிலும் ஒற்றுமையைக் குலைக்கும் விதத்திலும் அமைந்துள்ளது என்று ஓங் கா திங்  சொன்னார். 

அரசாங்கத்தைக் கவிழ்க்க, ரோபெர்ட் குவோக் பல அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறார் எனக் குற்றஞ்சாட்டும் மூன்று கட்டுரைகளை ராஜா பெட்ரா தனது வலைப்பக்கத்தில் எழுதி இருக்கிறார்.

இதன் அடிப்படையில் கருத்துரைத்த அமைச்சர் நஸ்ரி, அவரை ஆண்மையற்றவர் என்றும் மலேசியக் குடியுரிமையை அவர் துறக்க வேண்டும் என்றும்  முடிந்தால் மலேசியாவுக்கு வந்து பொதுத்தேர்தலில் அவர் போட்டியிடட்டும் என்றும் கூறியதாக உள்நாட்டு இணைய இதழான மலேசியக் கினியின் செய்தி கூறியது. 

இது குறித்து மசீசவின் சமய நல்லெண்ணப் பிரிவுத் தலைவர் தி லியன் கெர் குறிப்பிட்ட போது, நஸ்ரியின் இந்தத் தனிப்பட்ட தாக்குதல்கள், மலேசியக் கலாசாரத்தின் தன்மையைப் பிரதிபலிப்பதாக இல்லை என்று கூறினார்.

நஸ்ரியின் கருத்து, இன நல்லுறவுகளைப் பாதிக்கும்படி செய்து விடக் கூடும். இதில் பாதிக்கப்படக் கூடியவர் ரோபெர்ட் குவோக் மட்டுமல்ல, இனங்களுக்கு இடையிலான உறவுகளும் தான்  என்று மசீச பொதுச் செய்லாளர் ஓங் கா சுவான் எச்சரித்தார்.

இதனிடையே, தங்களின் கட்சி ரோபெர்ட் குவோக்கிடமிருந்து நிதியைப் பெற்றதாக கூறப்படுவதை ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் லிம்  நிராகரித்தார்.

இதற்கான ஆதாரங்களை அம்னோ காட்டவேண்டும் முடியாவிட்டால், அதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதுவொரு பொய். இதற்கு ஆதாரம் உண்டா? பிரதமர் நஜிப் மற்றும் துங்கு அட்னான் ஆகியோர் இதற்கான ஆதாரத்தைக் காட்டுவார்களா? என்று லிம் குவான் எங் வினா எழுப்பினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS