டத்தோஶ்ரீ நஜிப் - அஸ்மின்  'உள்குத்து' பேச்சு: நாடாளுமன்றத்தில் சலசலப்பு!

அரசியல்
Typography

கோலாலம்பூர், மார்ச். 12– இன்று திங்கள் கிழமை காலை நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கிய 15 நிமிடங்களிலேயே அமளி ஆரம்பமாகிவிட்டது. பிரதமர் நஜிப்பும் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அஸ்மின் அலியும் ஒருவருகொருவர் 'உள்குத்து' வேலையில் இறங்கியதால்  சலசலப்பு  ஏற்பட்டது. 

நீண்ட கால அடிப்படையில் தேசிய பொருளாதாரத்தை நிர்வகிப்பது தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நஜிப் பேசிக் கொண்டிருந்த வேளையில், அஸ்மின் அலி (பி.கே.ஆர்-கோம்பாக்) உபரியாக கேள்வி ஒன்றை முன்வைத்தார். 

2009-ஆம் ஆண்டில் மலேசியாவின் தேசியக் கடனைத் திருப்பி செலுத்துவதற்கான வட்டி விகிதம் 9 விழுக்காடாக இருந்தது. 2016-இல் ஆண்டில், 12.5 விழுக்காடாக அதிகரித்திருப்பதாக அனைத்துலக தகவல் ஒன்று கூறுகிறது என அஸ்மின் அலி குறுக்கிட்டார். 

இவ்வாண்டு வட்டியைக் கட்டுவதற்காக மட்டும், 31 பில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் செலவிட வேண்டியிருக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. 1எம்டிசி விவகாரத்தில்தான் நமது நாட்டின் தேசிய கடனுக்கான வட்டி அதிகரித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என்று அஸ்மின் அலி அவையில் கேள்வி எழுப்பினார்.

இதனால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், 'இந்தக் கேள்விக்கு நஜிப் அவர்களே பதில் சொல்லட்டும்'  என்று அஸ்மின் அறிவுறுத்தினார். 

உடனே எழுந்து நின்ற நஜிப், "இந்த விவகாரத்தை விட மிக நெருக்கடியான விவகாரம் என்றால், சிலாங்கூரில் நிலவும் தண்ணீர் பிரச்சனைதான் என்று பதில் கூறவே, அஸ்மின் அந்த பதிலைக் கடுமையாக ஆட்சேபித்தார். 

"தேசிய கடன் பிரச்சனை தொடர்பான கேள்விக்கும் இந்த பதிலுக்கும் என்ன சம்பந்தம்?" என்று அஸ்மின் அலி கேள்வி எழுப்பினார். 

இதனைத் தொடர்ந்து, அஸ்மின் அலியைப் பார்த்து “உட்காரு….உட்காரு” என்று சில தேசிய முன்னணி எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர். சபாநாயகர் பண்டிக்கார் அமின் முலியா குறுக்கிட்டு அஸ்மின் அலியை உட்காரும்படி பணித்தார். 

இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. எனினும் பின்னர், அஸ்மின் அலியின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர் நஜிப், 'நமது தேசியக் கடன் எவ்வளவு என்பது கேள்வி அல்ல, மாறாக அதனைத் திருப்பிச் செலுத்தக் கூடிய திறன் இருக்கிறதா? என்பதுதான் பிரச்சனை. மலேசியாவுக்கு திரும்பிச் செலுத்தும் ஆற்றல் இருக்கிறது ' என்று அவர் பதிலளித்தார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS