சுங்கை சிப்புட்டில் சோதியா? வேள்பாரியா? மஇகா பட்டியல் என்ன சொல்கிறது?

அரசியல்
Typography

கோலாமபூர், மார்ச். 13- 14ஆவது பொதுத்தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், மஇகா போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதிகளில்  குறிப்பாக, சுங்கைப் சிப்புட், கோத்தா ராஜா மற்றும் கேமரன் மலை ஆகிய மூன்று தொகுதிகளில் யார் வேட்பாளர் என்ற குழப்பநிலை நீடிக்கின்றது.

2008 ஆம் ஆண்டு வரையில் முன்னாள் மஇகா தேசிய தலைவர் துன் சாமிவேலுவின் கோட்டையாக விளங்கிய சுங்கை சிப்புட் தொகுதிக்கு அவருடைய புதல்வரும் மஇகா பொருளாளருமான டத்தோஶ்ரீ வேள்பாரி குறிவைத்திருக்கும் நிலையில்,  முன்னாள் துணையமைச்சர் டத்தோ சோதிநாதன் அத்தொகுதியில் நிறுத்தப்படுவார் என்ற புதிய தகவல் கசிந்திருக்கிறது.

தொடக்கத்தில் செனட்டர் பதவிக்கு குறிவைத்திருந்த வேள்பாரிக்கு அந்த வாய்ப்பு மங்கிய நிலையில், சுங்கை சிப்புட் தொகுதியை அடைவதற்கான முயற்சியில் அவர் இறங்கி இருக்கிறார்.ஆனால், ஆகக் கடைசியான நிலவரப்படி சிங்கை சிப்புட்டில் டத்தோ சோதிநாதன் போட்டியிட முடிவாகி இருப்பதாக தெரிகிறது.

இதனை அடுத்து,  முன்பு வெளியான ஆரூடங்களைப் போலவே  கோத்தாராஜா தொகுதி  அம்னோவுக்கு கைமாறுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.. அதற்கு மாற்றாக மஇகாவுக்கு கோலசிலாங்கூர் அல்லது உலு லங்காட் நாடாளுமன்ற தொகுதி வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

ஒருவேளை கோத்தா ராஜாதொகுதியை தொடர்ந்து  மஇகா தக்கவைத்து கொள்ளுமானால் கோத்தராஜா தொகுதியில்  மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ தேவமணி போட்டியிடக்கூடும் அல்லது கோத்தாராஜாவுக்கு பதிலாக தரப்படும் மாற்றுத் தொகுதியில் தேவமணியை மஇகா நிறுத்தத் தயாராகி வருகிறது என்று கட்சி வட்டாரங்கள் கூறின. ஆனால், இதையெல்லாம் விட தற்போது  இருக்கும் செனட்டர் பதவியை மேலும் ஒரு தவணைக்கு நீட்டித்துக் கொள்வதில் தேவமணி குறியாக இருக்கிறார்.

சர்ச்சைக்குரிய மற்றொரு தொகுதியான கேமரன் மலைத் தொகுதி தங்களுக்குத்தான் எனக் கருதி  இந்தத் தொகுதியில்  இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சிவராஜை  நிறுத்த மஇகா ஏற்பாடு செய்து வந்தாலும்,   அந்தத் தொகுதியில் தனக்குத்தான் என்று மைபிபிபி தேசிய தலைவர் டான்ஶ்ரீ கேவியஸ் விடாப்பிடியாக இருப்பதால், குழப்பம் தொடர்கிறது.

இதனிடையே நாடாளுமன்ற தொகுதிகளுக்கான  தனது வேட்பாளர்கள் பட்டியலை மஇகா உறுதி செய்திருப்பதாக தெரிகிறது. ஆனால், மகளிர் பகுதி தலைவி  டத்தோ மோகனா முனியாண்டி  உள்பட ,  முக்கிய மஇகா தலைவர்களில் சிலர்   'தேர்தலும் வேண்டாம், போட்டியும் வேண்டாம்,  செனட்டர் பதவி கிடைத்தாலே போதும்' என்ற மனநிலையில்தான் உள்ளனர் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இந்நிலையில்,  தேசிய தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் சிகாமட்டில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.  அடுத்து நெகிரி செம்பிலான், தெலுக்கெமாங் நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோ வி.எஸ். மோகன்,  சுபாங்கில் மீண்டும் பிரகாஷ் ராவ், உலுசிலாங்கூரில் துணையமைச்சர் டத்தோ கமலநாதன், தாப்பாவில் துணையமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன் ஆகியோர் போட்டியிடுவது உறுதியாகி இருப்பதாக கூறப்பட்டது. 

சிலாங்கூர்,  காப்பார் நாடாளுமன்றத்   தொகுதியில் புதுமுகம் ஒருவர் நிறுத்தப்படுகிறார். ஒரு வழக்கறிஞர் என அறியப்படும் முருகவேல் என்பவர் இங்கு போட்டியிடுவார் என நம்பப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS