சிறைவாசம்; மக்களவையில் ரபிஸி வேதனையுடன் பிரியாவிடை!

அரசியல்
Typography

கோலாலம்பூர், மார்ச். 14- வங்கியின் கணக்கு இரகசியத்தை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தினால் 30 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரபல எதிர்க்கட்சி எம்.பி.யான ரபிஸி ரம்லி , இன்று மக்களவையில்  சக எம்.பி.க்களிடம் சோகத்துடன் பிரியாவிடை பெற்றார். 

மேலும் மக்களவையில் பேசும் போது யாருடைய மனதையும் புண்படும்படி பேசியிருந்தால் அதற்காக மன்னிப்பும் கோரினார்.

அரச உரை மீதான விவாதத்தின் போது பேசிய பாண்டான் எம்.பி. ரபிஸி,  இதுதான் நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றும் கடைசி உரை என்பதால் சோகத்துடன் காணப்பட்டார். 

பல சந்தர்ப்பங்களில் தமக்கு பேச வாய்ப்பளித்த  சபாநாயகர் மற்றும் துணை சபாநாயருக்கு  அவர் தம்முடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

 அரசாங்கத்தின் கொள்கைகளையும் குறைகளையும் விமர்சிக்கும் போது எவருடைய மனமாவது புண்பட்டிருந்தால்அதற்காக  இந்த வேளையில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.  நான் ஆளும் தரப்பு எம்.பி.க்களுடன் விவாதம் மற்றும் வாக்குவாதத்தில் பல முறை ஈடுபட்டுள்ள போதிலும் எந்த வெறுப்புணர்வுடனும் இருந்ததில்லை என்றார் அவர்.

ஓர் எதிர்க்கட்சி எம்.பி. என்ற முறையில் நான் மௌனமாக இருக்கமுடியாது எனது கடமையை நான் செய்ததாக வேண்டும்.  எம்.பி.என்ற முறையில் மக்கள் எனக்கு சம்பளம் தருகிறார்கள் அவர்களுக்காக நான் பேசித் தான் ஆகவேண்டும் என்று பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருமான ரபிஸி சொன்னார்.

என்.எப்.சி. எனப்படும் தேசிய கால்நடை தீவனக் கழகம்  தொடர்பிலான வங்கிக் கணக்கு இரகசியங்களை அம்பலப் படுத்தியதாக ரபிஸி மீதும் மற்றொரு வங்கி ஊழியரான ஜொகாரி முகமட் என்பவர் மீதும்  ஷா ஆலம் செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு, அவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, தலா 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார். எனினும், வரும் பொதுதேர்தலில் அவர் போட்டியிடமுடியாது என்பது குறிப்பி டத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS