ம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே? கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா?

அரசியல்
Typography

கோலாலம்பூர், மார்ச் 23- விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் ம.இ.காவுக்கு இம்முறை 7 நாடாளுமன்றத் தொகுதிகள் மட்டுமே கிடைக்கலாம்.  இதர இரண்டு தொகுதிகள் கைவிட்டுப் போகலாம் என்று ஆருடம் கூறப்படுகிறது. 

கடந்த தேர்தலில் 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் ம.இ.கா வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவற்றில் சிகாமட், தாப்பா, உலு சிலாங்கூர் மற்றும் கேமரன் மலை ஆகிய 4 தொகுதிகளில் மட்டுமே அது வென்றது. 

இம்முறை 7 நாடாளுமன்றத் தொகுதிகள் மட்டுமே மஇகாவுக்கு தரப்படலாம். குறிப்பாக,  கோத்தா ராஜா மற்றும் கேமரன் மலைத் தொகுதிகள் கைநழுவக்கூடும். இம்முறை கோத்தா ராஜா தொகுதியை அம்னோ கைவசப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

அதற்கு மாற்றாக உலு லங்காட் தொகுதி வழங்கப்படலாம் என்று கூறப்பட்ட போதிலும், அந்தத் தொகுதியையும் அம்னோ தக்க வைத்துக் கொள்ளும் நிலை உருவானதால் கோத்தா ராஜா, மஇகாவிடமிருந்து இம்முறை கை நழுவும் எனத் தெரிகிறது.

ஏற்கெனவே இந்தத் தொகுதியில் 2008 ஆம் ஆண்டிலும், 2013 ஆம் ஆண்டிலும் மஇகா வேட்பாளர்கள் கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டனர். எனவே, இம்முறை, அத்தொகுதி தங்களுக்கு வேண்டும் என்பதில் அம்னோ பிடிவாதம் காட்டி வருகிறது.

இந்நிலையில் கோத்தா ராஜா கைநழுவியதைப் போலவே கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியும் மஇகாவை விட்டு கைநழுவி விடலாம் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.

கேமரன் மலைத் தொகுதியில் தாம் போட்டியிடப் போவது உறுதி எனக் கூறிய மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஶ்ரீ கேவியஸ் தொடந்து அத்தொகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்.

அதே வேளையில், அந்தத் தொகுதி ம.இ.காவுக்கே உரியது எனக் கூறி, அக்கட்சியும் களமிறங்கியது. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சிவராஜ் இங்கு தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

ஆனால், ஆகக் கடைசியான நிலவரப்படி கேமரன் மலையும் ம.இ.கா.விடமிருந்து கை நழுவுகிறது என்றும் விரைவில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப், அத்தொதியில் யார் வேட்பாளர் என்பதை அறிவிப்பார் என்றும்  தெரிய வருகிறது.

தொடர்ந்து, சிகாமட்,  தாப்பா,  சுங்கை சிப்புட், தெலுக் கெமாங், சுபாங், காப்பார்,  உலு சிலாங்கூர் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் மட்டுமே  இம்முறை ம.இ.கா போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS