'கெலிங்' என்ற சொல்:  இந்தியர்களிடம் மன்னிப்புக் கேட்டார்  துன் மகாதீர்!

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல்.10-  அவமரியாதையான சொல்லைப் பயனபடுத்தியதாக துன் மகாதீர் மீது இந்திய சமுதாயத்தினர் குறை கூறிவரும் சூழலில், அந்தச் சொல்லை உச்சரித்ததற்காக இந்திய சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று துன் மகாதீர் அறிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தின் போது அவர் இந்த மன்னிப்பைக் கேட்டுக்கொண்டார். 

"எங்கள் காலத்தில் அந்தச் சொல் தப்பானதாக அர்த்தம் கொள்ளப்படவில்லை என்றாலும் அந்தச் சொல்லைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்கிறேன் என்று அவர் சொன்னார். 

அண்மையில் ஜொகூரில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய போது துன் மகாதீர் 'கெலிங்' என்ற சொல்லைப் பயன்படுத்தியது கடும் ஆட்சேபத்தை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, சபா மற்றும் சரவாவைச் சேர்ந்தவர்களை சோம்பேறிகள் என நான் சொன்னதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. நான் அப்படிச் சொல்லவில்லை. அப்படிச் சொன்னது உள்ளூரிலுள்ள ஒரு மலாய் தினசரி தான் என்று துன் மகாதீர் விளக்கம் அளித்தார்.

இந்த முறைதான் தேர்தல் வாக்களிப்பை, புதன் கிழமையில் (மே-9) வைக்கப்பட்டிருக்கிறது.  நம் நாட்டில் என்றைக்கு பொதுத் தேர்தலை புதன்கிழமையில் நடத்தி இருக்கிறார்கள். இதற்கு முன்னர் இப்படி வைக்கப்பட்டதில்லை. இன்னும் என்னென்ன வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை என்று மகாதீர் சிரித்துக் கொண்டே கூறினார்.

மேலும், மக்கள் வந்து வாக்களிப்பதை தடுக்கவே இவ்வாறு செய்திருக்கிறார்கள். ஆனாலும், இதற்கு அப்பால் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்கச் செல்லவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.

மேலும் செய்தியாளர்கள் கூட்டத்தின் போது தன்னைப் படம் பிடித்த புகைப்படக்காரர்களைப் பார்த்து, 'என்னை படம் பிடிக்காதீர்கள், என் படத்தை போடுவது  சட்டவிரோதம் என்று கூறி விட்டார்களே..' என்று துன் மகாதீர் குறிப்பிட்ட போது அவருடன் அமர்ந்திருந்த பக்காத்தான் ஹராப்பன் தலைவர்கள் அனைவரும் சிரித்தனர்.

 பக்காத்தான் ஹராப்பான்  போஸ்டர்களில் துன் மகாதீர் படம் இடம் பெறக்கூடாது என்றும் ஏனெனில், அந்தக் கட்சியின்  பதிவு முறையானது அல்ல என்றும் தேர்தல் ஆணையம் அண்மையில் கூறியிருந்ததை மகாதீர் மறைமுகமாக சுட்டிக்காட்டியதால் இந்தச் சிரிப்பலை எழுந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS