'ஊழலில் தொடர்பா? அவர்களுக்கு  வாக்கு அளிக்காதீர்கள்!' –சி4 அமைப்பு கோரிக்கை

அரசியல்
Typography

 கோலாலம்பூர், ஏப்ரல்.13- 14-ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் அரசியல்வாதிகள் ஊழல்களில் சம்பந்தப்பட்டிருந்தால், வாக்காளர்கள் அவர்களுக்கு  வாக்களிக்கக் கூடாது என்று ஊழல் மற்றும் குடும்ப அரசியலை எதிர்க்கும் சமூக அமைப்பான 'சி4' அறிவுறுத்தியது. 

பொது நிதிகளை தவறாக சில அரசியல்வாதிகள் பயன்படுத்தியுள்ளனர் என்றும், அவர்கள் மீண்டும் இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க கூடாது என்றும்  சி4 அமைப்பின் நிர்வாக இயக்குநர் சிந்தியா கேப்ரீல் கூறினார். 

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தேசிய முன்னணி வேட்பாளராக, பெல்டாவின் முன்னாள் தலைவர் இசா சமாட் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்பட்டதைச் சுட்டிக் காட்டிய போது சிந்தியா அவ்வாறு கருத்துரைத்தார். 

பொது நிதியை தவறாக பயன்படுத்தியதன் பேரில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இசா சமாட்டை கைது செய்து, அவரிடம் விசாரணையை மேற்கொண்டது. ஆனால், அது தொடர்பில் அவர் மீது எவ்வித வழக்கும் தொடரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் 2012-ஆம் ஆண்டில், தேசிய கால்நடை நிறுவன ஊழலில் சம்பந்தப்பட்ட அம்னோவின் மகளிர் பிரிவுத் தலைவரான டான்ஶ்ரீ ஷாரிசாட் அப்துல் ஜாலீல், பண்டார் துன் ரசாக் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்று வெளியாகி உள்ள தகவலையும் சிந்தியா சாடியுள்ளார். 

“மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அரசியல்வாதிகளை வேட்பாளராக நியமிக்கும் தேசிய முன்னணியின் செயல் நம்மைத் திகைக்க வைக்கிறது என்றார் அவர்.

ஆனால் அதேவேளையில் தேசிய முன்னணி வேட்பாளர்களின் பட்டியல் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் அனைவரின் பின்னணியையும் தாங்கள் பரிசோதித்து  விட்டதாக ஊழல் தடுப்பு ஆணையம் கூறியிருப்பது பெரும் வேடிக்கையாக இருக்கிறது என்று அவர் சொன்னார்

நாட்டில் ஊழல் நடவடிக்கைகள் முற்றாக ஒடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், சி4 அமைப்பு செயல் படுவதாக சிந்தியா தெரிவித்தார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS