சிகாம்புட்டில்  போட்டியிட வாய்ப்பா?  தெங்கு அட்னானுக்கு கேவியஸ்  பதிலடி 

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல்.17- கேமரன் மலைத் தொகுதியில் போட்டியிடும் தனது எண்ணம் இம்முறையும் நிறைவேறாமல் போகக் கூடும் என்ற கோபத்தில் இருக்கும் மைபிபிபி தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ்,  தமக்கு சிகாம்புட் தொகுதியை பரிந்துரை செய்த  டத்தோஶ்ரீ தெங்கு அட்னான் மன்சோர்  விரும்பினால்  அவரே சிகாம்புட் தொகுதியில் போட்டியிடலாம் என்று காட்டமாக பதிலடி கொடுத்தார்.

சிகாம்புட் தொகுதியில் ஜ.செ.க கட்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவுள்ள வேளையில், அங்கு வேண்டுமானால் தெங்கு அட்னான் போட்டியிடட்டும் என்று கேவியஸ் கருத்துரைத்துள்ளார். 

“தெங்கு அட்னான் வேண்டுமானால் அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறலாம். என்னால் முடியாது. ஜ.செ.க வேட்பாளர்கள் கடந்த இரு பொதுத் தேர்தல்களில் அத்தொகுதியில் போட்டியிட்டு பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்” என்ரார் அவர்.  கேமரன் மலையில் மைபிபிபியின் தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்ட போது கேவியஸ் மேற்கண்டவாறு  கூறினார். 

தனக்கு கேமரன் மலைத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று, சிகாம்புட் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை தனக்கு தெங்கு அட்னான்   வழங்கியதாகவும், அதனை தாம் உடனே நிராகரித்ததாகவும் கேவியஸ் சொன்னார். 

தெங்கு அட்னான் தனது நண்பர் என்று கூறிய அவர், இருந்த போதிலும், தனது பொருமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றும் தெரிவித்தார்.

இம்முறை கேமரன் மலைத் தொகுதியில், தேசிய முன்னணி கூட்டணி சார்பில், மஇகாவின் இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜ் போட்டியிடக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த மூன்று ஆண்டுகளாக, கேமரன் மலைத் தொகுதி மக்களுக்குத் தேவையான உதவிகளை தாம் வழங்கி வருவதாகவும், அதனால் தனக்கு அத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கேவியஸ் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS