‘உங்களின் மனசாட்சியைத் தேடுங்கள்’ கர்ப்பாலை நினைவூட்டிய கஸ்தூரி!

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல்.17- புத்ராஜெயாவில் ஆட்சி மாற்றங்கள் நிகழ வேண்டுமானால், மக்கள் அவர்களின் மனசாட்சியை முதலில் தேட வேண்டும் என்ற மறைந்த அரசியல்வாதி கர்ப்பால் சிங்கின் கோரிக்கைய இப்போது நினைவு கூற வேண்டும் என்று ஜ.செ.க மகளிர் தகவல் செயலாளரான கஸ்தூரி பட்டு அறிவுறுத்தினார். 

தேசிய முன்னணி அரசாங்கத்தின் இரும்புப் பிடியிலிருந்து விடுபட்டு, மலேசியர்கள், நீதி, ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் நல்லாட்சியை நாட்டில் மலர வைக்கும் பெரும் போராட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்று அவர் சொன்னார். 

மாற்றங்களால் நன்மை ஏற்படுமா? என்ற குழப்பத்திலும், பயத்திலும் தடுமாறிக் கொண்டிருக்கும் மக்கள், கடந்த 2004-ஆம் ஆண்டு, செப்டம்பர் 4-ஆம் தேதியன்று, நாடாளுமன்றத்தில் “உங்களின் மனசாட்சியை தேடுங்கள்” என்று கர்ப்பால் சிங் கர்ஜித்ததை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுமாறு கஸ்தூரி வலியுறுத்தினார். 

நாட்டில் மாற்றங்கள் நிகழ வேண்டுமானால், மலேசியர்கள் நியாயமாகவும், தைரியமாகவும் இருத்தல் அவசியம் என்று கர்ப்பால் சிங்கை நினைவு கூர்ந்து  பத்து காவான் (முன்னாள்) நாடாளுமன்ற உறுப்பினரான கஸ்தூரி தெரிவித்தார். 

பினாங்கு மக்களால்  "ஜெலுத்தோங் புலி" என்று செல்லமாக அழைக்கப்பட்ட கர்ப்பால் சிங், உண்மையை உரைப்பதிலும், தைரியமாக செயல்பட்டு வந்தவராவார். கடந்த 2014-ஆம் ஆண்டு, அவர் சாலை விபத்தொன்றில் பரிதாபமாக உயிரிழந்தார். 

"நேர்மை, மரியாதை, பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்டு, தேசிய முன்னணியால் ஆட்சி செய்ய முடியாது என்பது தெளிவாகி விட்டது. ஆதலால், மலேசியாவை உலகளவில் வெற்றியடைய வைக்கும் பொருட்டு, மலேசியர்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்" என்று கஸ்தூரி வலியுறுத்தினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS