'தே.மு.வில் தான் இருக்கிறோம்; ஆனால், முடிவு பிறகு மாறலாம்!'-கேவியஸ் -(VIDEO) 

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல்.17- மைபிபிபி கட்சி தேசிய முன்னணியுடனே இருந்து வரும் என கட்சியின் உச்சமன்றம்  ஏகமனதாக முடிவு செய்து இருக்கிறது. கட்சிக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்து தேசிய முன்னணியின் தலைவரைச் சந்தித்து பேசவுள்ளது. தொகுதிகள் பற்றிய இறுதி முடிவுக்கான அந்தச் சந்திப்புக்கு பின்னர் ஒருவேளை தங்களுடைய கட்சியின் முடிவு மாறலாம் என்று அதன் தேசிய தலைவர் டான்ஶ்ரீ கேவியஸ் அறிவித்தார்.

இன்று கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நடந்த கட்சியின் உச்சமன்றக் கூட்டத்திற்குப் பின்னர் இந்த முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டது என்று அவர் சொன்னார். 

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை மைபிபிபி தொடர்ந்து மைபிபிபி கோரிவரும். அதில் மாற்றமில்லை.  ஏனெனில், கடந்த இரண்டு மூன்று ஆண்டு காலமாக நான் அந்தத் தொகுதியில் மக்களுக்கு சேவையை வழங்கி வந்துள்ளேன் என்று டான்ஶ்ரீ கேவியஸ் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

தேசிய முன்னனியுடன் தான் இருக்கிறோம். தொகுதி ஒதுக்கீடு பற்றிய இறுதி முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர் இந்த முடிவு மாறலாம் என்பதை அவர் தெளிவாக சுட்டிக்காட்டினார்.

கேமரன் மலைத் தொகுதியை பொறுத்தவரையில் மைபிபிபி 50 விழுக்காடு வெற்றியை இப்போதே பெற்றுவிட்டது. அந்தத் தொகுதி எங்களுக்கு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டால் அடுத்த 50 விழுக்காடு வெற்றியை நாங்கள் எளிதாக பெறுவோம்.  

கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில்  கிட்டத்தட்ட 400 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தேசிய முன்னணி வென்றது. இம்முறை நாங்கள் கூடுதலான பெரும்பான்மையுடன் சிறந்த வெற்றியைப் பெறமுடியும். எங்களைத் தவிர வேறு யாரும் அங்கு  போட்டி போட்டால்  மக்களின் ஆதரவை அவர்கள் பெறுவது சிரமம் என்று அவர் சொன்னார்.

கேமரன் மலைத் தொகுதி மைபிபிபி கட்சிக்கு கிடைக்காமல் போகுமானால் சதிச் செயல்கள் இடம்பெறக்கூடுமா என்றொரு கேள்விக்கு பதிலளித்த கேவியஸ், அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நாங்கள் நல்லதைத்தான் செய்வோம் கெட்டதைச் செய்ய மாட்டோம்.  அந்தத் தொகுதி மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்  என்று அவர் தெரிவித்தார்.

கேமரன் மலைத் தொகுதிக்குப் பதிலாக, சிகாம்புட் தொகுதியை உங்களுக்கு  வழங்க தேசிய முன்னணி  முன் வந்திருப்பதால் அது குறித்து பரிசீலிப்பீர்களா? எனச் செய்தியாளர்கள்  கேள்வி எழுப்பிய போது, கேமரன் மலையில்  சிறந்த வெற்றியைப் பெற முடிவும் என்று நம்புகிறேன். எனவே இப்போது மாற்றி யோசிப்பது சரியாக இருக்காது என்று கேவியஸ் பதிலளித்தார். அதேவேளையில் சிகாம்புட்  தொகுதியில் போட்டியிட கட்சியில் உள்ள வேறு எவரும் விரும்பினால் அது பற்றிய முடிவு அவர்களைப் பொறுத்தது எ ன்றார் அவர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS