இந்தியர்களுக்கென தனி சிறப்புப் பிரிவு: பிரதமரின் வெற்று வாக்குறுதி! -வேதா சாடல்

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல்.16- மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டிற்கென சிறப்புப் பிரிவை அமைப்பதற்கு உடன்பாடு காணப்பட்டது என்றாலும் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தம்முடைய தரப்பு வாக்குறுதிகளை நிறைவேற்றவே இல்லை என்று ஹிண்ட்ராப் இயக்கம் கூறியது.

பிரதமர் துறையில் இருந்து அளிக்கப்படும் நிதியைக் கொண்டு ஹிண்ட்ராப் தலைமையில் அத்தகைய சிறப்புப் பிரிவை  அமைக்கும் உடன்பாட்டை நிறைவு செய்ய, தேசிய முன்னணியின் தலைவரான பிரதமர் நஜிப் தயக்கம் காட்டினார் என்று ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி சாடினார்.

தேசிய முன்னணிக்கு என்றுமே விசுவாசமாக இருந்து வரும் கட்சி மஇகா. எனவே, அக்கட்சியின் நிலை பற்றி தாம் கவலைப்படுவதாக அவர் ஒரு கட்டத்தில் தெரிவித்தார். ஹிண்ட்ராப் தலைமையில் சிறப்புப் பிரிவு அமையும் போது அது மஇகா ஓரங்கட்டுவதாக அமைந்து விடக்கூடும் என்ற அச்சமே இதற்குக் காராணமாகும் என்று வேதமூர்த்தி விளக்கினார்.

தேசிய முன்னணிக்கும் ஹிண்ட்ராப்பிற்கும் இடையே ஏற்பட்ட இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டை அம்னோவிலுள்ள பல அமைச்சர்களும் எதிர்ப்பதாகவும் 2007ஆம் ஆண்டில் நடந்த ஹிண்ட்ராப் எழுச்சினால் ஏற்பட்ட பாதிப்புக்களை அவர்கள் மறக்க முடியாத நிலையில் இருக்கின்றனர் என்று தம்மிடம் கூறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியர்களுக்கான செயல் வரைவுத் திட்டக் கோரிக்கையை நிறைவேற்ற ஹிண்டராப்பிற்கு பிரதமர் நஜிப் வாக்குறுதி அளித்ததை அடுத்து அந்தப் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்தானது. 

இதனிடையே இந்தியர்களுக்கான மேம்பாட்டு செயல் வரைவுத் திட்டத்தை பிரதமர் ஏப்ரல் 23ஆம் தேதி அறிவிக்கப் போவதாக அறிவிப்பு வந்துள்ளது. இது ஒரு ஏமாற்று வித்தை. பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டில் வரவிருக்கும் நிலையில், இந்தியர்களின் மீது தங்களுக்கு அக்கரை இருப்பது போல் ஒரு போலித் தோற்றத்தை ஏற்படுத்த இவர்கள் முயற்சிக்கிறார்கள் என்றார் அவர்.

"நீங்கள் இந்தப் புதிய செயல் வரைவுத்திட்ட தந்திரத்தைக் கொண்டு உங்களின் அதிர்ஷ்டத்தை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள். அடுத்த பொதுத்தேர்தலின் போது தேசிய முன்னணிக்கு எதிராக அதன் இனிப்பான வாக்குறுதிகள் எப்படி வெற்று வாக்குறுதிகளாக மாறின என்பது பற்றி ஹிண்ட்ராப் பகிரங்கமாகப் பேசும் என்று வேதமூர்த்தி சொன்னார்.

'நம்பிக்கை' என்ற சுலோகத்தை வைத்துக் கொண்டு அம்னோ மற்றும் மஇகா அமைச்சர்களுடன் சேர்ந்து இந்தியர்களை நஜிப் ஏமாற்றினார் என்று அவர் சாடினார்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS