மக்ரீப் தொழுகை: கிளந்தான் அரசு மீது வழக்கு போடுவேன்- முன்னாள் அமைச்சர்

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல் 19- கிளந்தானில் உள்ள முஸ்லீம் அல்லாதோரும் இனிமேல் மக்ரீப் தொழுகையின்போது தங்கள் கடைகளை மூட வேண்டும் என்று மாநில அரசாங்கம் விதித்தச் சட்டத்தை எதிர்த்து முன்னாள் அமைச்சர் டத்தோ ஸாயிட் இப்ராஹிம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக எச்சரித்தார்.

இஸ்லாமிய மதம் மலேசியாவின் அதிகாரபூர்வ மதமாக அங்கீகரிக்கப்பட்டாலும், மலேசியா ஒரு மதசார்பற்ற, ஜனநாயக நாடாகும். அதனால் கிளந்தான் அரசாங்கம் விதித்துள்ள இந்த சட்டம் செல்லாது என்றார் அவர்.

“பொதுமக்களின் அறியாமையையும் அச்சத்தையும் பாஸ் துஷ்பிரயோகம் செய்கிறது. கைது செய்யப்படுவதிலிருந்தும் ஷரியா குற்றச்சாட்டுகளிலிருந்தும் தப்பித்துக்கொள்ள பொதுமக்கள் கண்மூடித்தனமாக சட்டங்களைப் பின்பற்றி வருகின்றனர். அவர்கள் நல்வழிக்கு திருப்ப நான் இந்த வழக்கைத் தொடர்வேன்” என்று ஸாயிட் இப்ராஹிம் எச்சரித்தார்.

பொதுமக்களுக்கு உண்டான சட்டங்களையும் தனிமனித நம்பிக்கைகளையும் கிளந்தான் அரசாங்கம் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். பாஸ் கட்சியின் மத கொள்கைகளை பொதுமக்கள், குறிப்பாக முஸ்லீம் அல்லாதோர் மீது திணிக்கக் கூடாது. மலேசிய கூட்டரசு சாசனத்தில் உள்ள கோட்பாடுகளுக்கு ஏற்ற சட்டங்களை அமைத்தால் பொதுமக்களுக்கு நன்மை அளிக்கும் என்று அவர் மேலும் அறிவுறுத்தினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS