நியூஜென் பார்ட்டியின் பதிவு ரத்தா? பதிவிலாகா நடவடிக்கை!

அரசியல்
Typography

கோலாலம்பூர், எப்ரல் 20- ‘நியூஜென் பார்ட்டி’ கட்சியின் சிறப்புப் பொதுக் குழு செல்லத்தக்கதா என்று சங்கங்களில் பதிவகம், ஆர்.ஓ.எஸ் ஆராய்ந்து வருகிறது. காரணம் அப்பொதுக் குழு அறிக்கையில் இருக்கும் தகவல்கள் சந்தேகத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அப்படி நியூஜென் கட்சியினர் பொய்த் தகவல்களை ஆர்.ஓ.எஸுக்கு கொடுத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அக்கட்சியின் பதிவு ரத்துச் செய்யப்படும் என்று ஆர்.ஓ.எஸ் இயக்குனர் முகமட் ராஸின் எச்சரித்துள்ளார்.

நியூஜென் கட்சி பதிவு செய்யப்பட்டிருக்கும் முகவரி பொய்யான ஒரு முகவரியாக இருப்பதாகவும், கட்சி செயலவை உறுப்பினர்கள் இருவரின் தகவல்கள் பொய்யாக இருப்பதாகவும் அவர் கூறினார். தேசிய பதிவிலாகவிலிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆர்.ஓ.எஸ் இதனைக் கண்டறிந்ததாக தெரிய வருகிறது.

கடந்த மார்ச் 30ஆம் தேதி நடைபெற்ற அந்த சிறப்புப் பொதுக் குழுவில் கட்சியின் புதிய செயலவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நியூஜென் கட்சியின் புதிய தலைவராக டத்தோ முகமட் இஸாமும் பொது செயலாளராக கோபி கிருஷ்ணனும் நியமிக்கப்பட்டனர். ஆனால், அக்கட்சிக்கு இன்னமும் தலைவராக தாம் இருப்பதாக குமார் அம்மான் அளித்த புகார் ஆர்.ஓ.எஸ்.சின் கவனத்தை ஈர்த்தது. அந்தப் புகாரை ஆராயும் வகையில் கோபி கிருஷ்ணனுக்கும் முகமட் இஸாமுக்கும் ஆர்.ஓ.எஸ் அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியது.

ஆனால், முகவரி பொய்யாக இருந்ததைத் தொடர்ந்து அக்கடிதம் மீண்டும் ஆர்.ஓ.எஸ் அலுவலகத்திற்கே வந்து சேர்ந்தது. அதிகாரிகள் பரிசோதித்ததில் அம்முகவரியில் ஒரு பளிங்குக் கடை நடத்தப்பட்டு வருவது அம்பலமானது. 

இதனால், நியூஜென் கட்சி பொய்யான தகவல் அடிப்படையில் பதிவு செய்ததற்காகவும், சட்டவிரோத பொதுக் குழு நடத்தியதற்காகவும் அக்கட்சியிடமிருந்து காரணம் கோரியது ஆர்.ஓ.எஸ். சரியான பதில்கள் அளிக்கப்படாத நிலையில் அக்கட்சியின் பதிவை ரத்து செய்யப் போவதாக ஆர்.ஓ.எஸ் எச்சரித்துள்ளது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS