ரிம. 2.6 பில்லியனில் மொகிதீனுக்கும் ஷாப்பிக்கும் பங்கு உள்ளது! - நஸ்ரி அஸிஸ்

அரசியல்
Typography

கோலாலம்பூர், மே.22- பிரதமர் நஜீப்பிற்கு கிடைத்த ரிம. 2.6 பில்லியன் நன்கொடைத் தொகை ஏற்படுத்திய சர்ச்சை இன்னும் தீராத நிலையில், அத்தொகையிலிருந்து டான்ஶ்ரீ மொகிதீன் யாசினுக்கும் டத்தோஶ்ரீ ஷாப்பி அப்டாலுக்கும் பங்கு கிடைத்தது என சுற்றுலா துறை அமைச்சர் டத்தோஶ்ரீ நஸ்ரி அஸீஸ் கூறினார்.

அம்னோவில் உறுப்பினர்களாக இருந்தபோது அவர்களுக்கு இப்பணம் தரப்பட்டது என்று நேற்று நடந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார். 

“எனக்கும் அந்த பணத்திலிருந்து பங்கு கிடைத்தது. தேர்தல் நன்கொடையான அப்பணம், அம்னோ கிளைகளின் தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் கிளை உறுப்பினர்களின் வீடு பழுதுபார்ப்பதற்காகவும்  தரப்பட்டது. ஒவ்வொரு கிளைக்கும் ரிம 5000 கிடைத்தது. எனக்கு கீழ் இயங்கிய கிளைகளுக்கான 10 லட்சம் ரிங்கிட் என்னிடம் தரப்பட்டது” என்றார் நஸ்ரி.

நஸ்ரியை விட, மொகிதீன் யாசின் மற்றும் ஷாப்பி அப்டால் கீழ் அதிக கிளைகள் இயங்கி வந்ததால் அவர்களுக்கு அதிக பணம் கிடைத்திருக்க வாய்ப்புள்ளது என்று அவர் மேலும் கூறினார். 

ஆனால், பணம் வாங்கியபோது கேள்வி ஏதும் அவர்கள் கேட்கவில்லை. அப்பணத்தின் மூலத்தையும் அவர்கள் விசாரிக்கவில்லை. ஆனால், அவர்களின் அரசியல் ஆசை நிறைவேறாத போது பல கேள்விகளை எழுப்புகின்றனர்.

தேர்தலுக்கு நன்கொடைப் பெறுவது தவறில்லை. மேலும், தேர்தல் நன்கொடையான அப்பணம் நஜீப்பின் சொந்த வங்கி கணக்கில் இருப்பதிலும் எந்தவித தவறும் இல்லை என்றும் நஸ்ரி கூறினார். 

“அவரது சொந்த கணக்கில் இருந்தால் தான் எவ்வளவு பணம் செலவு செய்யப்படுகிறது என்று நஜீப்பிற்கு தெரியும். இல்லையேல் செலவீனங்களை கணக்கு செய்வதில் கடினம் ஏற்படும்” என்றும் நஸ்ரி சொன்னார்.

கடந்த பொதுத் தேர்தலுக்கு அந்நன்கொடை பணத்திலிருந்து அம்னோ செய்த செலவு கிட்டத்தட்ட ரிம. 60 கோடி என்றும் நஸ்ரி விவரித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS