'கேமரன்மலை: மகாதீர் எனக்குத் தந்த தொகுதி!' -டான்ஶ்ரீ கேவியஸ் பதில்

அரசியல்
Typography

கேமரன்மலை, மே.31- "கேமரன்மலை என்னுடைய தொகுதி. முன்னாள் பிரதமர் துன் மகாதீர் காலத்தில் அதாவது 1999ஆம் ஆண்டில் லிப்பீஸ் தொகுதியை எல்லை மறுசீரமைப்பு செய்து, கேமரன்மலையை எனக்காகக் கொடுத்தார் என்று மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ கேவியஸ் கூறினார்.

இந்த உண்மை டத்தோஶ்ரீ சாமிவேலுக்குத் தெரியும். அவரை அணுகி ஒரு 'கப்' காப்பி குடித்து என்னதான் நடந்தது; எப்படி கேவியசை ஏமாற்றினார் என்று கேட்டுப் பாருங்கள் என டான்ஶ்ரீ கேவியஸ் சுட்டிக்காட்டினார்.

இன்று வரைக்கும் டத்தோஶ்ரீ சுப்பிரமணியத்திற்கு எதுவும் புரியவில்லை. இவர்தான் டத்தோஶ்ரீ பழனிவேலை மஇகா கட்சியின் உறுப்பினர் அல்லர்; கேமரன்மலை எங்களுடைய தொகுதி இல்லை; அது 'பேபாஸ்' தொகுதி என்று மஇகாவின் செயலாளரிடம் சொல்லி, நாடாளுமன்றத்திற்கு கடிதம் அனுப்பி கேமரன்மலை நாடாளுமன்ற தொகுதியை 'அனாதை' தொகுதியாக தவிக்கவிட்டதை ஏன் அவர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மூன்று ஆண்டு காலத்திற்கு ஒன்றும் இல்லாமலும், தனிப்பட்ட முறையில் எந்த மஇகா தலைவர்களும் உடனில்லாமலும், சிரமப்பட்டு டத்தோஶ்ரீ பழனியும் அவரது துணைவியாரும் மற்றவர்களுடன் சேர்ந்து கேமரன்மலை மக்களுக்கு உதவி செய்து வந்தார்கள்.

ஆனால், தமது தேசியத் தலைவரையே கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, தொகுதியை அனாதை ஆக்கிவிட்டு, இன்று அதே தொகுதியை மீண்டும் மீண்டும் மார்தட்டிக் கொண்டு, "எங்கள் பாரம்பரியத் தொகுதி" என்றால் இவருக்கு அரசியல் புரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

வயதில் டத்தோஶ்ரீ சுப்ரா என்னைவிட மூத்தவராக இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். ஆனால், அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை. இப்படி நான் சொல்வதற்குக் காரணம், சுயேச்சை என்று சொன்ன தொகுதியின் அடிப்படை அர்த்தமே இவருக்குப் புரியவில்லை என்பதுதான். 

இப்போது கேமரன்மலையைப் பிரதிநிதிக்கும் மஇகாவின் வேட்பாளர் யாரும் இருக்கின்றாரா? இல்லையே; இப்போது தேசிய முன்னணியில் கேட்டால் கூட, அவர்களே சொல்வார்கள்,  'இத்து கவாசான் பேபாஸ்' (Itu Kawasan Bebas) என்று..!   நாடாளுமன்றத்திற்கு கடிதம் கொடுத்தவரிடம் சொல்லி சரி பார்க்கச் சொல்லுங்கள் என்றும் டான்ஶ்ரீ கேவியஸ் சொன்னார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS