கோலாலம்பூர், செப்.2- பேங்க் நெகாராவின் மிகப்பெரிய அன்னியச் செலாவணி இழப்புகள் தொடர்பாக அமைக்கப்பட்டு விசாரணை நடத்திவரும் அரச ஆணையம், தன்னை ஒரு சாட்சியாக இன்னமும் உறுதிப்படுத்தாமல் இருப்பது குறித்து டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் வியப்புத் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்டு 21ஆம் தேதியே விசாரணை தொடங்கிவிட்டது. ஆனால், இதுவரை சாட்சியம் அளிக்க தன்னை அழைப்பதா, இல்லையா? என்பதை டான்ஶ்ரீ சிடெக் ஹசான் தலைமையிலான அரச ஆணையம் முடிவெடுக்காமல் இருப்பது குறித்து அப்போது நிதியமைச்சராக இருந்த அன்வார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தன்னுடைய சாட்சியம் இல்லாமலேயே இந்த விசாரணை ஒரு முடிவுக்கு வருமானால், அது ஒரு தலைப்பட்சமான விசாரணையாகவே அமையும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

'இந்த விசாரணையின் போது தொடர்ந்து என்னுடைய பெயர் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அரச ஆனையம் உணமை நிலையை அறிந்து கொள்ளவேண்டுமானால் என்னை சாட்சியாக அழைக்கவேண்டியது மிக அவசியமாகும். இதுதான் உண்மையை அறிந்து கொள்ள சிறந்த வழி என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்று அன்வார் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், செப்.2- தங்களுடைய சொந்த ஊர்களுக்குத் திரும்பி வந்து வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு பயணச் செலவுக்கு பணம் தரப்படுமேயானால் அது கூட லஞ்சமாகத்தான் கருதப்படும் என்று மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி. அறிவித்திருக்கிறது.

ரொக்கமாக இருந்தாலும், பரிசுகளாக இருந்தாலும் வாக்காளர்களுக்கு அளிக்கப்படும் எத்தகைய ஊக்குவிப்பும், சட்டத்தின் பார்வையில் லஞ்சமாகத்தான் அமையும் என்று எம்.ஏ.சி.சி.யின் நடவடிக்கைத் துறை துணை ஆணையர் டத்தோ அஷாம் பாக்கி தெரிவித்தார்.

உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிப்பதற்காக, சொந்த ஊருக்குச் சென்று வர ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படுமானால், அது லஞ்சமாகும். அதேவேளையில் ஏழை மக்களுக்கு அரிசி அல்லது நன்கொடைகள் போன்ற நியாயமான உதவிகளை அரசியல்வாதிகள் வழங்குவார்களேயானால், அது லஞ்சமாகக் கருதப்படாது என்றார் அவர்.

மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நாங்கள் லஞ்சமாகக் கருதமாட்டோம் என்று அவர் சொன்னார். பிரசாரக் காலத்தில் பல்வேறு வகையான வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அளிப்பது வழக்கமாகும். உதாரணமாக அதிகமான வீடுகளைக் கட்டித்தருவோம் என்று அவை வாக்குறுதி அளிக்கலாம். இவை லஞ்சமல்ல என்று டத்தோ அஷாம் பாக்கி தெரிவித்தார்.

 

 

கோலாலம்பூர், ஆக.30- எதிர்க்கட்சி கூட்டணியான பக்காத்தான் ஹராப்பான் கட்சியின் உயர் மட்ட பதவிகளில் இந்தியர்கள் நியமிக்கப்படாதது குறித்து கோபிந் சிங் வெளியிட்ட கருத்தைப் பினாங்கு துணை முதலமைச்சர் பி.ராமசாமி முற்றிலும் ஆதரித்தப்பதாக தெரிவித்தார்.

இந்த எதிர்க்கட்சி கூட்டணியில் இந்திய சமுதாயத்தின் பிரதிநிதித்தும் சிறப்பாக இல்லை என்று அம்பிகா ஸ்ரீனிவாசன்,கோபிந் ஆகியோருடன் இணைந்து தான் எழுப்பிய கூற்றை சரிசெய்ய பக்காத்தான் ஹராப்பான் முயற்சி எடுக்க வேண்டும் என்றார் அவர். 

இதனிடையே, ஏற்கனவே உள்ள கட்சிகளிலுள்ள இந்தியர்கள் பக்காத்தான் ஹராப்பானின் முக்கியமான மேல்மட்ட பதவிகளில் நியமிக்கப்பட்டால் அவர்களில் பங்களிப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

அண்மையில் பக்காத்தான் ஹராப்பானின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்ட போது, எதிர்க்கட்சிகளில் முக்கியமான பதவிகள் வகிக்கும் இந்திய பிரதிநிதிகளுக்கு அப்பொறுப்புகள் ஏதும் வழங்கப்படாதது ஏன் என்று கட்சிகளுக்கு இடையில் விவாதிக்கப்பட்டது. 

எதிர்காலத்தில் பக்காத்தான் ஹராப்பானில் இந்தியர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு இதற்கு தீர்வு காணும் வகையில் அம்பிகா இந்த விவகாரத்தை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.

உயரிய பதவிகளுக்கான வாய்ப்பில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் வெறுமையாக இருப்பது தொடர்பில் கூடிய விரைவில் பேச்சு வார்த்தை நடத்த பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவ மன்றம் திட்டமிட்டுள்ளது.

பக்காத்தான் உயர் பதவி பொறுப்புகளில் ஏற்கனவே உள்ள கட்சிகளின் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதன் படிநிலை அமைப்பை புதியதாக மாற்றியமைக்க வேண்டும். பங்களிப்பு மற்றும் கண்ணியம் அடிப்படையில் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று பி.ராமசாமி வலியுறுத்தினார். 

 

கோலாலம்பூர், ஆக.29-, எதிர்க்கட்சி கூட்டணியான பக்காத்தான் ஹராப்பான் எதிர்வரும் 14-ஆவது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியுடன் எத்தகைய ஒத்துழைப்பையும் பேணாது என்று அறிவித்துள்ளது.

நேற்றிரவு நடந்த பக்காத்தான் தலைமைத்துவ மன்றத்தின் மூன்று மணிநேர கூட்டத்தில் பாஸ் கட்சியுடனான உறவை தூண்டித்துக் கொள்ள முடிவெடுக்கப்பட்டிருப்பதாக  பக்காத்தான் ஹராப்பானின் அறிக்கை கூறியது.

14-ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட பக்காத்தான் ஹராப்பான் பலவிதமான உத்திகளைக் கையாண்டு வருகிறது. பக்காத்தான் ஹராப்பான் எதிர்க்கட்சி கூட்டணியில் பிரிபூமி பெர்சாத்து கட்சி, ஜ.செ.க., பி.கே.ஆர் மற்றும் அமானா ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

கடந்த  இரு பொதுத் தேர்தல்களில் பி.கே.ஆர் மற்றும் ஜ.செ.க கட்சிகளுடன் பாஸ் கட்சி இணைந்து செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பக்காத்தான் ஹராப்பானை விட்டு வெளியேறிய தலைவர்கள் இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர். இந்தக் கூட்டத்தில் முக்கியமான விவகாரங்களைக் கலந்தாலோசித்து பல பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டதோடு புதிய தலைவர்களையும் நியமித்ததாக பிரிபூமி பெர்சத்து கட்சியின் அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். 

கோலாலம்பூர், ஆக.28- எனது ஆட்சி காலத்தைப் பற்றிய விவரங்களை முற்றாக அழித்தாலும் எனக்கு கவலை இல்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

பள்ளிப் பாடப் புத்தகங்களில் எனது பெயரை நீக்கினாலும் 60-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் எனது பெயர் உச்சரிக்கப்படாவிட்டாலும் மக்களுக்கு நான் யார்? என்றும் நாட்டிற்கு என்ன செய்தேன்? என்றும் தெரியும் என்று மகாதீர் தெரிவித்தார்.

‘என் பெயரை முற்றாக அழித்தாலும் என்னைப் பற்றி பேசவே இல்லை என்றாலும் எனக்கு கவலையில்லை. ‘மகாதீர் பின் இஸ்கந்தர் குட்டி’ என்று ஒருவர் பிறக்கவே இல்லை என்று கூட சொன்னாலும் கூட கவலையில்லை என்றார் அவர்.

நான் இந்த நாட்டிற்காக எந்தப் பணியும் செய்யவில்லை, நாட்டின் வளர்ச்சிக்காக எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்று சொன்னால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை’ என்று அவர் ஆதங்கப்பட்டார். 

நேற்றிரவு நடந்த நிதி திரட்டும் விருந்துபசரிப்பின் செய்தியாளர்கள் கூட்டத்தில் மகாதீர் இதனைக் கூறினார். 

அண்மையில் பாடப் பயிற்சி புத்தகம் ஒன்றில் வெளியிடப்பட்ட மலேசிய பிரதமர் படப் பட்டியல் வரிசையில் நஜிப் ரசாக் உட்பட ஐந்து பிரதமர்களின் பெயர் மட்டுமே இடம்பெற்றிருந்தது. இதில் மகாதீரின் பெயர் நீக்கப்பட்டிருந்ததலென்பது சமூக வலைத்தளங்களில் பரவியது.

ஏற்கனவே மூன்றாம் படிவ சிவிக் பாடப் புத்தகத்திலுள்ள மலேசிய வரலாற்றில் மகாதீரின் பெயரை நீக்க முயற்சித்ததாக கல்வி அமைச்சின் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அந்தப் புத்தகம் தங்கள் பதிப்பகத்திலிருந்து வெளியிடப்படவில்லை என்று அமைச்சு குற்றத்தை மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  கோலாலம்பூர், ஆக.27- சுமார் 15விழுக்காடு மலாய் வாக்காளர்களின் ஆதரவு திசை மாறுமானால், கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெறமுடியும் என்று ஜசெக கூறியிருப்பதானது, ஒரு கண்மூடித்தனமான அனுமானம் என்று தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோஶ்ரீ சைட் கெருவாக் கருத்துரைத்தார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி எப்படி மலாய்க்காரர்களின் 15 விழுக்காடு ஆதரவைப் பெறப்போகிறது? 1988ஆம் ஆண்டில் அம்னோவில் கடும்  உள்கட்சி நெருக்கடி நிலவிய காலத்திலேயே அவர்களால் 15 விழுக்காடு மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெற முடியவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

துன் மகாதீருக்கும் துங்கு ரசாலி ஹம்சாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அம்னோ இரண்டாக உடைந்த நிலையில், ரசாலியின் செமாங்காட்-46 கட்சி எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட தருணத்திலேயே 2 புள்ளி 4 விழுக்காடு மலாய்க்காரர்கள் ஆதரவு மட்டுமே திசை மாறியது என்று சைட் கெருவாக் சொன்னார்.

தங்களுடைய அண்மைய ஆய்வுகளின்படி 15 விழுக்காடு மலாய்க்காரர்களின் ஆதரவு எதிரணிக்கு சாதகமாகத் திரும்பினாலேயே கிளந்தான் திரெங்கானுவில் பக்காத்தான் வெற்றி பெறும் என்று ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், ஆக.24- அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகையில் பேச்சு வார்த்தை நடத்த விடுத்த அழைப்பை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஏற்றுக் கொண்டார். டிரம்பின் அழைப்பை ஏற்று பிரதமர் வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் என்ற தகவலை விஸ்மா புத்ரா வெளியிட்டுள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் மற்றும் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஆகிய இருவரும் வாஷிங்டனில் சந்திப்பர் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியா, அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவு 60-ஆவது ஆண்டு நிறைவை அடையும் வேளையில் பிரதமரின் தலைமையில் கீழ் இரு நாட்டு கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் இந்த பயணம் அமையவிருக்கிறது.

இச்சந்திப்பில்  நாட்டு பாதுகாப்பு, தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், வர்த்தகம், அனைத்துலக விவகாரங்கள் உள்ளிட்டவைகள் குறித்துக் கலந்தாலோசிக்கப் படவிருக்கின்றன என்று வெளியுறவு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்புடைய தென்கிழக்காசிய நாடுகளில் மலேசியாவும் ஒன்று. இருநாடுகிடையிலான 60-ஆவது ஆண்டு அரச தந்திர உறவு நிறைவு விழாவை கொண்டாடுவதோடு  இருதரப்பு உறவின் நல்லிணக்கத்தை விரிவுப்படுத்தும் வகையில் இந்தப் பேச்சு வார்த்தை அமையும் என்று அமெரிக்க அதிபர் எதிர்ப்பார்க்கிறார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

 

More Articles ...