கோலாலம்பூர், மே.19- சிலாங்கூரில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களை நியமிப்பதும், பதவி விலக்குவதும் சிலாங்கூர் சுல்தான் அதிகாரத்திற்கு உட்பட்டது, அதனால் சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் இருக்கும் பாஸ் கட்சியின் உறுப்பினர்கள் பதவி விலக அவசியமில்லை என பாஸ் கட்சி துணைத் தலைவர் டத்தோ துவான் இப்ராஹிம் கூறினார்.

“திடீரென ஆட்சிக்குழுவிலிருந்து விலகினால் மாநில ஆட்சியில் பல தடையூறுகள் விளையும். அதனால் பாஸ் கட்சியின் உறுப்பினர்களுக்கே அவமதிப்பு உண்டாகும்” எனவும் அவர் மேலும் கூறினார்.

இதனிடையே, பாஸ் கட்சியைச் சேர்ந்த 13 சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களை பதவி துறக்குமாறு பாஸ் தலைமைத்துவம் கட்டளையிட்டது என உள்ளூர் நாளிதழ்களில் வெளியாகிய செய்தி ஆதாரமற்றது என்றும் டத்தோ துவான் இப்ராஹிம் தெரிவித்தார். 

இந்த செயலினால் தேவையில்லாமல் சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டு, இடைத்தேர்தல் நடத்த நெருக்கடி உருவாகும்.

மக்களுக்கு இதனால் பல பாதிப்புகள் ஏற்படும். இது பாஸ் கட்சியின் எண்ணம் அல்ல, மாறாக தங்களுடன் ஒத்துழைக்க மறுக்கும் பிகேஆர் கட்சியுடனான உறவை முறித்து கொண்டு தன்னிச்சையாக செயல்படுவதே பாஸ் கட்சியின் எண்ணம் என்றார் துவான் இப்ராஹிம். 

கோலாலம்பூர், மே.17- பிகேஆர் கட்சியுடனான உறவை துண்டித்துக் கொள்வதற்கு பாஸ் கட்சியின் ஆலோசனை மன்றத்தில் முடிவு செய்ததைத் தொடர்ந்து பாஸ் தலைமையில் இருக்கும் கிளந்தான் மாநில ஆட்சிக் குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் பிகேஆர் கட்சிக்காரர்களை உடனடியாக பதவி விலகுமாறு பிகேஆர் கட்டளை இட்டுள்ளது.

அதேவேளையில் பிகேஆர் தலைமையிலான சிலாங்கூர் ஆட்சிக் குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் பாஸ் கட்சியினரின் நிலைமையை வெளிநாட்டிற்கு அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள சிலாங்கூர் மந்திரி புசாரே முடிவெடுக்க வேண்டும் என்றார் பிகேஆரின் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஸிசா.

“இரு கட்சிகளுக்கும் இடையிலான அரசியல் உறவை பாதுகாக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் இந்த முறிவை தடுக்க இயலாமல் போனது. இந்த முறிவுக்காக பாஸ் கட்சி அளிக்கும் காரணத்தைதான் என்னால் ஏற்க முடியவில்லை” என்று வான் அஸிசா கூறினார்.

இருப்பினும் பாஸ் கட்சியின் இந்த முடிவை மதிப்பதாகவும், அடுத்தப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தக்க நடவடிக்கைகளை எடுக்கவும் இனி பிகேஆரும் ‘பக்கத்தான் ஹராப்பான்’ கூட்டணி கட்சிகளும் திட்டமிடும் என்றும் டத்தோஶ்ரீ வான் அஸிசா மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, ஆட்சிக் குழுவிலிருந்து பிகேஆர் உறுப்பினர்கள் பதவி விலகினால் மாநில நிர்வாகத்தில் எந்தவொரு பாதகமும் இருக்காது என்று கிளந்தான் துணை மந்திரி புசார் டத்தோ முகமட் அமார் நிக் கூறினார். 

“ஆனால், பதவி காலம் முடியும் வரை அல்லது இந்தாண்டு இறுதி வரையிலாவது அவர்கள் பதவியில் நீடித்தால் எங்களுக்கு சந்தோஷம்” என்றார் அமார் நிக்.

சிலாங்கூர் ஆட்சிக் குழுவிலிருந்தும் பாஸ் கட்சியின் பிரதிநிதிகள் பதவி விலகப் போவதில்லை என்று சிலாங்கூர் பாஸ் தலைவர் சாலேஹென் முக்யி அறிக்கை விடுத்துள்ளார். பாஸ் கட்சியின் முடிவுக்கும் மாநிலத்தின் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை. அதனால், மாநில பணியிலிருந்து விலகுவது முறையில்லை என்று அவர் மேலும் கூறினார். 

ஜோர்ஜ்டவுன், மே.17- அடுத்த பொதுத் தேர்தலின்போது பினாங்கு மாநிலத்தில் அம்னோவின் வசம் இருக்கும் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட போவதாக பார்டி பிரிபூமி பெர்சத்து பகிரங்கமாக அறிவித்துள்ளது.

ஆனால், ‘பக்காத்தான் ஹராப்பான்’ கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் இதுபற்றி விவாதித்து எடுக்கப்படும் முடிவை தாங்கள் மதிப்போம் என பெர்சத்து கட்சியின் பினாங்கு மாநில தலைவர் மர்சூக்கி யாஹ்யா கூறினார். 

“வாய்ப்பு கிடைத்தால் பினாங்கில் எல்லா தொகுதிகளிலும் அம்னோவை நாங்கள் எதிர்ப்போம். அரசாங்கத்தில் பல மாற்றங்களை பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பதால் நகரங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் கண்டிப்பாக பெர்சத்து கட்சி அம்னோவை வீழ்த்தும். ” என்றும் அவர் சூளுரைத்தார்.

தற்போது பாஸ் கட்சி பக்காத்தானுடன் உறவை முறித்துக் கொண்டுள்ள இந்நிலையில் கண்டிப்பாக மும்முனை போட்டி நிலவும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், சுங்கை ஆச்சேவில் கெஅடிலானுக்கும் பாஸுக்கும் நடந்த மோதலைப் போல பக்காத்தான் கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்கு இடையே போட்டாப் போட்டி நடக்காமல் இருக்க, முறையான முடிவு எடுக்கப்படும் என்று மர்சூக்கி யாஹ்யா நம்பிக்கைக் தெரிவித்தார்.

 

கூச்சிங், மே.12- முன்பு ஆஸ்திரேலிய குடியுரிமை வைத்திருந்ததன் அடிப்படையில் புஜுட் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் திங் தியோங் சூன், சரவா சட்டமன்றம் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஜசெகவைச் சேர்ந்த டாக்டர் திங்கிற்கு எதிராக அனைத்துலக வர்த்தக மற்றும் மின்னியல் வர்த்தகத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ வோங் சூன் கோ சட்டமன்றத்தில் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார்.

இந்தத் தீர்மானம், 70க்கு 10 என்ற வாக்குகளில் நிறைவேற்றப்பட்டது. இதனால் அவர் உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.

புக்கிட் அமானில் இருந்து தமக்குக் கிடைத்த கடிதத்தின்படி கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி ஆஸ்திரேலிய குடியுரிமையைப் பெற்ற டாக்டர் திங், பின்னர் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி அதனைக் கைவிட்டுள்ளார் என்று டத்தோஶ்ரீ வோங் சொன்னார்.

வேறொரு நாட்டின் குடியுரிமையை ஒருவர் வேண்டி பெற்றிருக்கும் பட்சத்தில், மாநில சட்டமன்ற உறுப்பினராக இருப்பாரேயானால் மாநில அரசியல் அமைப்புச் சட்டத்தின் 17(10(g) பிரிவை மீறியதாக கருதப்பட்டு அவையிலிருந்து நீக்கப்படுவார் என்பதால் அந்த அடிப்படையில் டாக்டர் திங் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டத்தோஶ்ரீ வோங் தெரிவித்தார். 

 

 

 

கோலாலம்பூர்,மே.11- பிகேஆர் கட்சியுடனான உறவு துண்டித்துக் கொள்ளப்படும் என்பதை பாஸ் கட்சியின் ஆலோசனை மன்றம் உறுதிப்படுத்தி    உள்ளது.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நிர்வாக விவகாரங்கள் உள்பட் கட்சியெடுக்கும் எந்தவொரு அரசியல் முடிவும் பாஸ் கட்சியின் மத்திய நிர்வாக குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்று ஆலோசனை மன்றச் செயலாளர் டத்தோ டாக்டர் நிக் முகமட் ஸவாவி தெரிவித்தார்.

பிகேஆர்வுடனான உறவை துண்டித்துக் கொள்வதற்கு பாஸ் கட்சி மூன்று காரணங்களைத் தெரிவித்துள்ளது. பாஸ் கட்சியின் இஸ்லாமிய கொள்கைத் திட்டமான, அதன் நாடாளுமன்ற மசோதாவுக்கு பிகேஆர் ஆதரவு தரவில்லை என்பது முதாவது காரணமாகும்.

பாஸ் கட்சி தலைமைத்துவத்திற்கு எதிராக பிகேஆர் தாக்குதல் தொடுத்ததோடு மற்றும் பொய்க் குற்றச்சாட்டுக்களைக் கூறியது ஆகியவை அரசியல் ஒத்துழைப்பு உணர்வுக்கு முரணானது என்பது 2ஆவது காரணமாகும்.

கிளந்தானில் பாஸ் அரசாங்கத்தைக் கவிழ்க்க விரும்பியவர்களுடன் பிகேஆர் கைகோர்த்தது மற்றும் சுங்கை புசார் மற்றும் கோலக் கங்சார் இடைத்தேர்தல்களில் பாஸ் கட்சிக்கு எதிராக நடந்து கொண்டது ஆகியவை 3ஆவது காரணமாகும்.

 

 

 

புத்ராஜெயா, மே 9- லாவோஸ் பிரதமர் டாக்டர் தோங்லொவுன் சிசௌலித் இரண்டு நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு இன்று மலேசியா வந்தடைந்தார். இன்று காலையில் புத்ராஜெயா வந்தடைந்த அவரை பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் வரவேற்றார்.

இன்று காலை 10.15 மணிக்கு பெர்டானா புத்ராவிற்கு வருகை அளித்த லாவோஸ் பிரதமரை டத்தோஶ்ரீ நஜிப் உட்பட அமைச்சரவை உறுப்பினர்கள் வரவேற்றனர். அவருக்கு 106 இராணுவ அதிகாரிகளின் வரவேற்பும் வழங்கப்பட்டது. அதனை லாவோஸ் பிரதமர் பார்வையிட்டார்.

மலேசியா மற்றும் லாவோஸ் நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த பயணம் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருநாட்டு பேராளர்களுடனான சந்திப்புக்கு முன்னதாக நஜிப் மற்றும் தோங்லொவுன் ஆகிய இருவரும் தனி சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்பர் என கூறப்பட்டுள்ளது.

கோலாலம்பூர், மலேசியாவில் 3லட்சம் இந்தியர்கள் நாடற்றவர்களாக இருக்கின்றனர் என்று கூறியிருக்கும் பினாங்கு மாநில 2ஆவது துணைமுதல்வர் டாக்டர் இராமசாமியால் அக்கூற்றை நிருபிக்க முடியுமா? என்று மஇகா தேசிய இளைஞர் பிரிவுத்தலைவர் டத்தோ சிவராஜ் சவால் விடுத்தார்.

மூன்று லட்சம் பேர் இருப்பார்களேயானால், அதற்கான ஆதாரங்களைத் தரமுடியுமா? தங்களின் கூற்றுக்கு முறையான ஆவண ஆதாரங்களை முன்வைக்காமலேயே எதிர்க்கட்சியினர் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டைக் கூறிவருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

மூன்று லட்சம் பேரா? எங்கிருந்து இப்படியொரு எண்ணிக்கை கண்டுபிடித்தார்கள்? இது வெறும் அபத்தம். அப்படி இருக்குமானால் அதனை எங்களிடம் காட்டுங்கள். எதிர்கட்சி ஆதரவாளர்களை குஷிப்படுத்துவதற்காக இப்படிப்பட்ட மலிவு அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்காதீர்கள் என்று டத்தோ சிவராஜ் வலியுறுத்தினார்.

கடந்த காலத்தில் மை-டப்தார் பதிவு இயக்கத்தின் வழி, நாங்கள் 12,000 பேரின் விபரங்களைப் பதிவு செய்துள்ளோம். மேலும் எஞ்சியிருக்கும் ஆவணமற்ற மலேசிய இந்தியர்களின் பிரச்சனைகளைக் களையும் முயற்சியாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம், நேற்று மாபெரும் மை-டப்தார் இயக்கம் தேசிய அளவில் தொடங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் என சிவராஜ் விளக்கினார்.

இப்பிரச்சனைக்கு முழுவதுமாக தீர்வு காணவே இந்த இரண்டம் கட்ட பதிவு நடவடிக்கை தொடங்கப்படுகிறது. இதுவொரு தேர்தல் தந்திரமல்ல. எதிர்க்கட்சிகளைப் போல அடிப்படையற்றக் குற்றச்சாட்டுக்களைப் பரப்பிக் கொண்டிருக்காமல் மஇகா உண்மையிலேயே இப்பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்பதில் மஇகா முனைப்புடன் உள்ளது என்று அவர் சொன்னார்.

மூன்று லட்சம் இந்தியர்கள் நாடற்றவர்களாக இருக்கிறார்கள் என்று கூறிக்கொண்டிருக்கும் இராமசாமி உள்பட எதிர்க்கட்சியினருக்கு எதிராக தாங்கள் போலீஸ் புகார் செய்யப் போவதாக அவர் கூறினார்.

 

 

More Articles ...