கோலாலம்பூர், டிச.8- இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்து இருப்பதைக் கண்டித்து  மலேசியாவின் அம்னோ, பாஸ், பிகேஆர் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களைச் சேர்ந்த பலர் அமெரிக்க தூதரகத்தின் முன் இன்று மதியம் மறியலில் ஈடுபட்டனர். 

தாபோங் ஹாஜி கட்டடத்தின் முன்பு, மதியம் 1.45-க்கு ஆயிரக்கணக்கான மலேசியர்கள் பலர் இந்த மறியலில் கலந்து கொண்டனர். அம்னோ இளைஞர் பிரிவின் தலைவர் கைய்ரி ஜமாலுடின் அமெரிக்காவின் அந்தச் செயலைக் கண்டிக்கும் மனு ஒன்றை அந்த்த் தூதரகத்தில் மதியம் 2.30 மணிக்கு சமர்ப்பித்தார்.  

"ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அறிவித்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் செயல் ஏற்புடையதாக இல்லை. அது தவறான செயலாகும். ஜெருசலம் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாகும். அங்கு நீங்கள் பிரவேசிக்கக் கூடாது. அதனை இஸ்ரேலின் தலைநகரமாக அறிவித்தது தவறு" என்று கைய்ரி சொன்னார். 

"இதே போன்று அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வந்தால், உலகிலுள்ள பல கோடி மக்கள், அந்த வல்லரசுக்கு எதிராக வெகுண்டெழுவர். அனைத்துலக கோட்பாடை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். மனித நேயத்திற்கு புறம்பாக செயல்படாதீர்கள். பாலஸ் தீனத்தை  வதைக்காதீர்" என்று அவர் அறிவுறுத்தினார். 

உலகின் மிகவும் உயரிய பொறுப்பில் இருக்கும் அதிபர் டிரம்ப், உலகக் கோட்பாட்டை மதிக்க வேண்டும். அதற்கு மாறாக நடப்பதன் வழி,  அவர் முஸ்லீம்களையும், மனித நேயத்தை விரும்பும் மக்களின் உணர்ச்சிகளையும் சீண்டிப் பார்க்கிறார். 

அமைதியான, சுதந்திரமான பாலஸ்தீனத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். இப்போது, இந்தத் தேவையற்ற அங்கீகாரத்தை வழங்கி, பிரச்சனைகளை பெரிதுபடுத்துவது முறையற்ற செயல்என்று கைய்ரி கருத்து தெரிவித்தார்.  

 

 

கோலாலம்பூர், டிசம்.8- அம்னோ தேசியத் தலைவர் பதவிக்கும் துணைத்தலைவர் பதவிக்கும் போட்டி இருக்கக்கூடாது என அம்னோ சிறப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், கட்சியின் அமைப்பு விதிகளின் கீழ் தகுதியுள்ள கட்சி உறுப்பினர்கள் போட்டி போடுவதைத் தடுக்க முடியாது என்று பதவி நீக்கம் செய்யப்பட்ட பத்து கவான் தொகுதி அம்னோ தலைவர் கைருடின் அபு ஹசான் சுட்டிக்காட்டினார்.

தன்னுடைய சந்தாவை சரியாகச் செலுத்தி இருந்து, எந்தவொரு உச்சமன்ற பதவிக்கும் போட்டி போட அவர்களுக்கு போதுமான முன்மொழிவுகள் கிடைத்தால் அவர் போட்டியிடலாம் என்றார் அவர்.

போட்டி போடக்கூடாது என நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்தத் தீர்மானத்தினால் எந்த வகையிலும் கட்சியின் அமைப்பு விதிகளை ஓரங்கட்டி விட முடியாது. இக்கட்சியின் தலைவர்கள் கோழைகளாக இருக்கிறார்கள் என்று கைருடின் சாடினார்.

இங்கு நடந்து வரும் அம்னோ மாநாட்டில் தேசிய தலைவர் நஜிப்புக்கும் துணைத்தலைவர் ஸாஹிட்டிற்கும் போட்டியிருக்கக் கூடாது என்ற தீர்மானம் ஒன்றை அம்னோ இளைஞர் பிரிவு முன்மொழிந்தது. இந்தத் தீர்மானத்தை இந்த சிறப்புப் பேரவை பின்னர் நிறைவேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

கோலாலம்பூர், டிசம்.8- தம்முடைய 'கட்-அவுட்' படத்தை வைத்து அதன் தலைமீது சம்மட்டியால் தாக்கிய சுங்கை புசார் அம்னோ டிவிசனின் தலைவர் ஜமால் யுனோஸின் செயலால் தமக்கும் தம்முடைய குடும்பத்தினரின் பாதுகாப்ப்புக்கும் மிரட்டல் ஏற்பட்டிருப்பதாக முன்னாள் சட்ட அமைச்சர் ஸைட் இப்ராகிம் தெரிவித்தார்.

ஜமாலும் சிலாங்கூர் அம்னோவும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். போலீசாரும் போலீஸ் படைத் தலைவரான ஐஜிபியும் எங்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்த தாங்களால் இயன்றதைச் செய்ய வெண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சிலாங்கூர் சுல்தானை குறைகூறியதற்காக ஸைட் இப்ராகிம் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அந்த ஆளின் தலையிலேயே 'நான் சம்மட்டியால் அடித்து விடுவேன்' என்று கூறியவாறு ஜமால் யுனோஸ் தனது கையில் இருந்த சம்மட்டியைக் கொண்டு ஸைட் இப்ராகிமின் 'கட்- அவுட்' படத்தின் தலையில் தட்டிய சம்பவம் குறித்து கருத்துரைத்தபோது ஸைட் இப்ராகிம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுல்தானை அவமதித்தற்காக அந்த ஆள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது குறித்து சிலாங்கூர் மக்கள் பொறுமை இழந்து விட்டார்கள். எனவே, நாங்கள் இந்த சம்மட்டியை கொண்டு அந்த ஆளின் தலையில் அடிப்போம் என்று புத்ரா உலக வாணிப மையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் ஜாமால் யுனோஸ் கூறினார்.

 

 

கோலாலம்பூர், டிசம்.8- அம்னோ பொதுப் பேரவைக் கூட்டத்தின் போது அதிக அளவில் 'கல்வாத்' சம்பவங்கள் தலைதூக்கி விடுகின்றன என முன்னாள் உறுப்பினர் ஒருவர் கூறியிருப்பதற்கு எதிராக புத்ரி அம்னோ போலீசில் புகார் செய்திருக்கிறது.

எதிர்க்கட்சியின் இணையச் செய்தித் தளம் ஒன்றில் இவ்வாறான தகவல் பதிவிடப்பட்டிருப்பது குறித்து இங்குள்ள டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் அம்னோ புத்ரி தகவல் பிரிவுத் தலைவர் ஹர்யாட்டி ஹம்ட்ஸா புகார் செய்தார்.

இந்தகைய செய்தி மிகவும் மோசமானது. இதனால் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அம்னோ மீதான மக்களின் நம்பிக்கைக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. கட்சியிலுள்ள இளம் பெண்களின் குறிப்பாக, புத்ரி பிரிவினரின் தோற்றத்தை பாதித்துள்ளது என்று அந்தப் போலீஸ் புகாரில் அவர் கூறியிருக்கிறார்.

மேலும் இந்தத் தகவலைப் பதிவு செய்த முன்னாள் அம்னோ உறுப்பினர் மீது புத்ரி அம்னோ சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயங்காது என்று ஹர்யாட்டி கூறினார்.

 

 

கோலாலம்பூர், டிச.8- சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரீஸ் ஷாவை விமர்சித்ததற்காக, 1948-ஆம் ஆண்டின் நிந்தனைச் சட்டம் 4-ஆவது பிரிவின் கீழ், முன்னாள் அமைச்சர் ஸாயிட் இப்ராஹிம், விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் ஃபுஸி கூறினார். 

தனது டுவிட்டர் பக்கத்தில், சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வண்ணம் அவர் குறித்து கருத்து தெரிவித்த குற்றத்தின் பேரில், 1998-ஆம் ஆண்டின் தொலைத் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233-ஆவது பிரிவின் கீழும் ஸாயிட் விசாரிக்கப்படலாம் என்று முகமட் ஃபுஸி மேலும் சொன்னார்.

திங்கட்கிழமையன்று, தனது டுவிட்டர் பக்கத்தில், சிலாங்கூர் சுல்தான் 'அரசியல் விளையாடுகிறார்' என்றும், நாடே பற்றி எரியும் போது, எல்லாரும் பாதிக்கப்படுவர். ஆதலால், சிலாங்கூர் சுல்தான் வார்த்தைகளை விட்டு விடாமல், பேசும் போது கவனமாகப் பேசவேண்டும் ஸாயிட் 'டுவீட்' செய்திருந்தார். 

பொதுமக்களின் வாக்குகளை ஈர்ப்பதற்காக சில அரசியல்வாதிகள் இன, மதப் பேதத்தைச் சார்ந்தே செயல்படுகின்றனர் என்று 'தி ஸ்டார்' நாளேட்டில் வெளியான சிறப்பு பேட்டியில் சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் கூறியிருந்தார்.  

அதனை விமர்சித்து ஸாயிட் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்ததைத் தொடர்ந்து அவரை பலர் சாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

கோலாலம்பூர், டிச.7- எதை எல்லாம் செய்யக்கூடாது, யாருடன் உறவுக் கொண்டாடக் கூடாது என்று பிறருக்கு முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவுறுத்தினாரோ, அதையெல்லாம் அவர் இப்போது செய்து கொண்டிருக்கிறார் என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் கூறினார். 

"மலாய்க்காரர்கள் எப்போதும் பழையதை மறந்து விடுவார்கள் என்று இதே மேடையில் நின்று அவர் பேசினார். இப்போது அவரே முன்பு சொன்னது எதையும் பின்பற்றாமல், அனைத்தையும் மறந்து செயல்படுகிறார்" என்று நஜிப் கூறினார். 

"எந்த எதிர்க்கட்சியை பிரதமராக இருந்த போது தாக்கி வந்தாரோ, அந்த எதிர்க்கட்சியுடன் இப்போது இணைந்து விட்டார். தனக்கும் தன் குடும்பத்திற்கும் லாபம் கிடைக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கம். அவர், அவர் தனது எல்லைக் கோட்டினை கடந்து விட்டார்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் 32 மில்லியன் மக்கள் உள்ளனர். அவர்களின் இன, மத, பேதம் பாராமல், அனைவரும் மலேசியர்களே என்ற அடிப்படையில் அரசாங்கம் பல உதவிகளை வழங்கி வருகிறது.  "ஆனால், ஒரு முன்னாள் பிரதமர், இன்னும் அதே பழைய பஞ்சாங்கத்தையே புரட்டிக் கொண்டிருக்கிறார். அண்மையில் கூட, புகிஸ் வம்சாவளியினர் குறித்து அவர் தவறான கருத்து தெரிவித்திருந்தார்" என்று நஜிப் சுட்டிக் காட்டினார். 

கடந்த அக்டோபர் மாதம் 14-ஆம் தேதியன்று, பேரணி ஒன்றில் கலந்து கொண்ட டாக்டர் மகாதீர், புகிஸ் கடற்கொள்ளையர்கள் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் மலேசியத் தலைவராக இருக்கிறார் என்று கருத்துரைத்திருந்தார். 

அதனைத் தொடர்ந்து, பல புகிஸ் வம்சாவளியினர், குறிப்பாக, சிலாங்கூர் சுல்தான், மற்றும் புகிஸ் அமைப்பினர்கள், மகாதீரை சாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்னோ மலேசியர்கள் அனைவரையும் அரவணைக்கும் கட்சியாகும் என்று பிரதமர் நஜிப் அம்னோ சிறப்பு பேரவையில் உரையாற்றுகையில் கூறினார். 

 

கோலாலம்பூர், டிசம்.7- ஒரு குறிப்பிட்ட சிறிய எண்ணிக்கையிலான சீனர்களும் இந்தியர்களும் எதிர்க்கட்சிகளின் பொய்களில் சிக்கி பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் என்று பிரதமர் நஜிப் கூறினார்.

அம்னோ எல்லா இனங்களுக்குமான ஒரு கட்சியாக விளங்குவதில் அம்னோ நேர்மையாக இருந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது போல அம்னோ ஓர் இனவாதக் கட்சியல்ல என்று அம்னோ சிறப்புப் பேரவைக் கூட்டத்தில் அவர் சொன்னார்.

அம்னோ ஓர் இனவாதக் கட்சியாக இருந்திருக்குமானால், பல ஆண்டுகளாக பல்வேறு இனங்களைப் பிரதிநிதிக்கும் தேசிய முன்னணி பங்காளிக் கட்சிகளுக்கு தலைமை ஏற்று வழிநடத்தும் நம்பிக்கையை அது பெற்றிருக்க முடியும் என்று பிரதமர் நஜிப் கேள்வி எழுப்பினார்.

இதற்கெல்லாம் அப்பாற்பட்ட கட்சி அம்னோ. வேற்றுமையில் ஒற்றுமையை எப்போதும் அது கொண்டாடி வந்துள்ளது. நல்லலெண்ணம், புரிந்துணர்வுடன் ஒன்றுபட்டு வாழ்தல், ஒருவரை ஒருவர் சார்ந்து இருத்தல், ஒருவரை ஒருவர் பாராட்டுதல் போன்றவற்றை கடைபிடித்து வருகிறோம். நான் மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அம்னோ சீனர்களுக்கு எதிரானது அல்லது என்று அவர் வலியுறுத்தினார்.

 

 

 

 

 

More Articles ...