பாடாங்  தெராப், ஏப்ரல்.15- நாட்டின் நிர்வாகத்தில்  தேசிய முன்னணி தொடர்ந்து தலைமை வகிக்குமானால், ஐந்து அத்தியாவசியப் பொருளின் விலை ஒருபோதும் அதிகரிக்கப்படாத வகையில் கட்டுப்படுத்தி வைக்கும் என்று உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் பயனீட்டுத்துறையின் அமைச்சர் டத்தோசி ஹம்சா ஜைனுடின் தெரிவித்தார்.

அரிசி, மாவு, சமையல் எண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் சீனி ஆகிய ஐந்து அத்தியாவசிய பொருள்களும் தேசிய முன்னணி அரசு நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் வரையில் விலையேற்றம் காணாது என்று அவர் உறுதி அளித்தார்.

எல்லா தரப்பு மக்களும் பயன்படுத்தி வரும் அடிப்படை அத்தியாவசிய பொருள்களாக இவை அனைத்தும் விளங்குகின்றன.  மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த ஐந்து பொருள்களின் விலையும் அதிகரிக்காமல் இருக்க வழிகாணப்படும் என்று ஏற்கெனவே பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் கூறியுள்ளார்.

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.14- பொதுத்தேர்தலில் ஹிண்ட்ராப் தனது வேட்பாளர்களை நிறுத்தினால், அவர்களை வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதற்கு பெர்லிஸ் முப்தி முகம்மட் அஸ்ரி ஜைனல் அபிடினுக்கு உரிமை கிடையாது என்று ஜசெக தலவர்களில் ஒருவரான பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி அறிவுறுத்தினார்.

சில பிரச்னைகளில் பெர்லிஸ் முப்தி அஸ்ரி, முற்போக்கான நிலைப்பாட்டை கடைபிடிக்கக் கூடியவர்தான் என்றாலும், ஹிண்ட்ராப்பிற்கு வாக்குளிக்கும்படி  எதற்காக வாக்காளர்களை அவர் தூண்டவேண்டும் என்பதை தம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்று இராமசாமி சொன்னார்.

இது அவரது சொந்தக் கருத்தாக இருக்கலாம். ஆனால், பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில்,  தமது சமூகப் பொறுப்புகளுடன் சொந்தக் கருத்தை வெளிப்படுத்தி  அவர் குழப்படக்கூடாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஹிண்ட்ராப்பை புறக்கணிக்க வேண்டும் வேண்டும் என்று குறிப்பாக, இந்தியர்களுக்கு அவர் கோரிக்கை விடுப்பாரேயானால், அது பாரிசானுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக ஆகாதா? என்று பினாங்கின் 2ஆவது துணை முதல்வருமான இராமசாமி கேள்வி எழுப்பினார்.

ஹிண்ட்ராப் நாட்டுக்கு மிரட்டல் என்று கூறும் அவர். ஷாகிர் நாய்க்கை ஆதரித்துப் பேசுகிறார். சமய வெறுப்புணர்வுப் பிரசாரத்திலும் நிதி மோசடிகளிலும் ஈடுபட்டதாக மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்படவேண்டும் என்று  இந்தியாவினால் கோரப்பட்டுள்ள ஷாகிர் நாய்க்கை எப்படி பெர்லிஸ் முப்தி அஸ்ரி ஆதரிக்கிறார் என்று புரிந்து கொள்ள முடியவில்லை என்றார் இராமசாமி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 கோலாலம்பூர், ஏப்ரல்.13- 14-ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் அரசியல்வாதிகள் ஊழல்களில் சம்பந்தப்பட்டிருந்தால், வாக்காளர்கள் அவர்களுக்கு  வாக்களிக்கக் கூடாது என்று ஊழல் மற்றும் குடும்ப அரசியலை எதிர்க்கும் சமூக அமைப்பான 'சி4' அறிவுறுத்தியது. 

பொது நிதிகளை தவறாக சில அரசியல்வாதிகள் பயன்படுத்தியுள்ளனர் என்றும், அவர்கள் மீண்டும் இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க கூடாது என்றும்  சி4 அமைப்பின் நிர்வாக இயக்குநர் சிந்தியா கேப்ரீல் கூறினார். 

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தேசிய முன்னணி வேட்பாளராக, பெல்டாவின் முன்னாள் தலைவர் இசா சமாட் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்பட்டதைச் சுட்டிக் காட்டிய போது சிந்தியா அவ்வாறு கருத்துரைத்தார். 

பொது நிதியை தவறாக பயன்படுத்தியதன் பேரில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இசா சமாட்டை கைது செய்து, அவரிடம் விசாரணையை மேற்கொண்டது. ஆனால், அது தொடர்பில் அவர் மீது எவ்வித வழக்கும் தொடரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் 2012-ஆம் ஆண்டில், தேசிய கால்நடை நிறுவன ஊழலில் சம்பந்தப்பட்ட அம்னோவின் மகளிர் பிரிவுத் தலைவரான டான்ஶ்ரீ ஷாரிசாட் அப்துல் ஜாலீல், பண்டார் துன் ரசாக் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்று வெளியாகி உள்ள தகவலையும் சிந்தியா சாடியுள்ளார். 

“மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அரசியல்வாதிகளை வேட்பாளராக நியமிக்கும் தேசிய முன்னணியின் செயல் நம்மைத் திகைக்க வைக்கிறது என்றார் அவர்.

ஆனால் அதேவேளையில் தேசிய முன்னணி வேட்பாளர்களின் பட்டியல் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் அனைவரின் பின்னணியையும் தாங்கள் பரிசோதித்து  விட்டதாக ஊழல் தடுப்பு ஆணையம் கூறியிருப்பது பெரும் வேடிக்கையாக இருக்கிறது என்று அவர் சொன்னார்

நாட்டில் ஊழல் நடவடிக்கைகள் முற்றாக ஒடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், சி4 அமைப்பு செயல் படுவதாக சிந்தியா தெரிவித்தார். 

ஜோர்ஜ் டவுன், ஏப்ரல்.13- 14-ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றிப் பெற்றால், பினாங்கு பாலத்திலுள்ள டோல்கள் அகற்றப்படும் என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார். 

நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிப் பெற்றால், பினாங்கு பாலத்தை உபயோகிக்கும் மோட்டார் சைக்கிளோட்டிகளிடம் டோல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் கூறியதைத் தொடர்ந்து, லிம் குவான் எங் அவ்வாறு கூறினார்.

“பக்காத்தான் ஹராப்பான் வெற்றிப் பெற்றால், சுங்கை நியூர் டோல் சாவடியை மட்டுமல்ல, பினாங்கு பாலத்தின் அனைத்து டோல்களையும் நாங்கள் முற்றாக நீக்குவோம்” என்று லிம் சொன்னார். 

“இதுவரை ரிம.1.7 பில்லியனுக்கு மேல் டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. கட்டுமானச் செலவு, மற்றும் இரண்டு பாதைகளை மூன்று பாதைகளாக மாற்றுவதற்காக செய்யப்பட்ட செலவுகளை காட்டிலும், அந்த டோல் கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளன. அதனால் எதற்காக முதலாவது பாலத்திற்கு டோல் கட்டணம் வசூலிக்க வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார். 

வெற்று வாக்குறுதிகளை மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு வழங்குவதை விட, பினாங்கு தீவு மற்றும் அதன் நிலப் பகுதியை இணைக்கும் இரயில் போக்குவரத்து மேம்பாட்டுப் பணி தொடர்பிலான வாக்குறுதியை நஜிப் நிறைவேற்ற வேண்டும் என்று லிம் கேட்டுக் கொண்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 கோலாலம்பூர், ஏப்ரல்.13- 14-ஆவது பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் பலர், தாங்கள் வசிக்கும் இடங்களில் தங்களைப் பதிவு செய்துக் கொள்ளவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

வாக்காளர்கள் பலர், தங்களின் பிறந்த இடங்களிலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றலாகி சென்ற போதிலும், அதற்கு ஏற்ப தங்களின் வாக்குகளை பதிவு செய்ய அவர்கள் மாற்றங்கள் செய்யவில்லை என்று தேர்தல் ஆணையத்தின் சட்ட ஆலோசகர் அஸிஸான் முகமட் அர்ஷாட் கூறினார். 

“வாக்காளர்கள் தாங்கள் வசிக்கும் வீட்டு முகவரிகளுக்கு ஏற்ப தங்களின் வாக்குகளை பதிவு செய்யும் பொருட்டு, வாக்காளர்கள் பட்டியலில் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட முகவரிகளை மாற்றிக் கொள்ளலாம். அது வாக்காளர்களின் உரிமை. பலர் ஏன் இதைச் செய்யவில்லை?” என்று அஸிஸான் கேள்வி எழுப்பினார். 

“ஒருவர் கோலாலம்பூரில் வசிக்கிறார். ஆனால், அவர் கிளந்தானில் வாக்களிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்குகளை கிளந்தான் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்களுக்கு போடுவதால், கோலாலம்பூரில் வசிக்கும் ஒருவருக்கு எவ்வித நன்மை ஏற்படும்?” என்று அவர் மேலும் வினவினார். 

“நாம் வசிக்கும் இடத்திற்கு ஏற்ப வாக்காளர்கள் பட்டியலில் உள்ள முகவரியை மாற்றினால், தேர்தல் வார நாளில் நடைபெற்றாலும், நாம் தவறாமல் வாக்களிக்க முடியும். இதனை வாக்காளர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்” என்று அஸிஸான் அறிவுறுத்தினார். 

வார நாளன்று தேர்தல் நடைபெறுகிறது என்பது குறித்து பலர் ஆட்சேபனை எழுப்பியது தொடர்பில் பேசிய அஸிஸான் அவ்வாறு கருத்து ரைத்தார். 

கோலாலம்பூர், ஏப்ரல்.13- நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இணைய பி.எஸ்.எம் கட்சி பேச்சு வார்த்தை நடத்தியது என்றாலும், அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் பி.எஸ்.எம் கட்சி, பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவெடுத்து உள்ளது என்று பி.எஸ்.எம் கட்சியின் பொதுச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம் கூறினார். 

பி.எஸ்.எம் கட்சியின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் ஏப்ரல் 19-ஆம் தேதியன்று வெளியிடப்படும் என்று சிவராஜன் கூறினார். 

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், பக்காத்தான் ஹராப்பான் பொதுச் செயலாளர் சைஃபுடின் அப்துல்லா மற்றும் பி.கே.ஆர் கட்சியின் ஆர்.சிவராசாவுடன் பி.எஸ்.எம் கட்சி பேச்சு நடத்தியதாக அவர் சொன்னார். 

“பி.எஸ்.எம் கட்சிக்கு நியாயமான வாய்ப்புகளை தான் நாங்கள் ஏற்போம் என்றும், அப்படி இல்லையென்றால் பேச்சுவார்த்தை நடத்துவதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை என்றும் நாங்கள் பக்காத்தான் ஹராப்பானிடம் தெரிவித்தோம்” என்று அவர் மேலும் சொன்னார்.

“அக்கூட்டணி வாயிலாக பி.கே.ஆர் சின்னத்தின் கீழ் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு மட்டும் பி.எஸ்.எம்  வழங்கப்படும் என்பதால், நாங்கள் பக்காத்தானின் கூட்டணியில் கட்சியாக இணையவில்லை” என்று அவர் தெளிவு படுத்தினார். 

இதனிடையில், பொதுத் தேர்தல் நடைபெறும் நாள் நெருங்கி விட்டதால், இதற்கு மேல் பி.எஸ்.எம் கட்சி பக்காத்தான் ஹராப்பானின் கூட்டணி கட்சியாக இணையாது என்று பி.எஸ்.எம் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் எஸ்.அருட்செல்வன் கூறினார். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

புத்ராஜெயா, ஏப்ரல்.13- பொதுத் தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்துள்ள வாக்காளர்கள், தங்களின் வாக்குகளைப் பதிவு செய்யும் வாக்குச் சாவடிகள் குறித்த விவரங்களை, திங்கட்கிழமையன்று பல்வேறு வலைத்தளங்களின் வாயிலாக தெரிந்துக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Google Play Apps அல்லது Apple Apps வாயிலாக ‘மைஎஸ்பிஆர் செமாக்’ (MySPR Semak) ஆப்-பை வாக்காளர்கள் தங்களின் கைத்தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 

இந்த ஆப்-பின் வாக்காளர்கள் தங்களின் விவரங்களை சரி பார்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், 14-ஆவது பொதுத் தேர்தலில் தாங்கள் எந்த நாடாளுமன்ற தொகுதியில் வாக்களிக்க வேண்டும் என்ற விவரத்தையும் அவர்கள் அறிந்துக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

அதுமட்டுமல்லாது, pengundi.spr.gov.my என்ற அகப்பக்கத்தின் வாயிலாகவும் வாக்காளர்கள் இது குறித்த விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். 03-88927018 என்ற எண்ணில் அல்லது மாநில தேர்தல் அலுவகங்களை தொடர்புக் கொண்டும் அவர்கள் வாக்குச் சாவடிகள் குறித்த விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். 

SPR என்று டைப் செய்து அதனைத் தொடர்ந்து வாக்காளர்கள் தங்களின் அடையாள அட்டை எண்ணை (SPR அடையாள அட்டை எண்)  டைப் செய்து 15888 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பலாம் என்று தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. 

 

More Articles ...