ஷா ஆலாம், ஜூன்.7- சிலாங்கூர் சுல்தானின் கட்டளையை மீறியதற்காகச் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினரான சிவராசா  மன்னிப்பு கேட்டுக் கொண்டார்

மசூதிகளிலும் தொழுகை இடங்களிலும்  அரசியல் சார்ந்த உரைகள் எதுவும்  வழங்கப்படக் கூடாது என்ற சிலாங்கூர் சுல்தானின் கட்டளையை மீறியது தவறு என்று சிவராசா ஒப்புக் கொண்டுள்ளார்

கடந்த மே 24-ஆம் தேதி சுபாங் கம்போங் பாருவின் அன்-நுர் மசூதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா உரையாற்றி தனது எல்லையை மீறி விட்டார் என்று சுல்தான் இட்ரிஸ் ஷா கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தன்னுடைய உரையின் உள்ளடக்கத்தை விளக்கியும் மன்னிப்பு கோரியும் சிவராசா சுல்தானுக்குத் தனிப்பட்ட முறையில்  ஒரு கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.

கோலாலம்பூர், ஜூன்.3- அடுத்த பொதுத் தேர்தலில் ‘பக்காத்தான் ஹரப்பான்’ கூட்டணி வெற்றி பெற்றால் மகாதீரை பிரதமராக்கும் கனவை பெர்சத்து கட்சி நிறுத்திகொள்ள வேண்டும் என்று பிகேஆர் உதவித் தலைவர் சம்சூல் இஸ்கண்டார் தெரிவித்தார்.

நேற்று முந்தினம் மகாதீர் தனது முகநூல் நேரலை பேட்டியின்போது தன்னை பிரதமராக்க பக்காத்தான் தலைவர்கள் விருப்பப்பட்டால் தாம் அதைப் பற்றி பரிசீலிக்க வாய்ப்பு உண்டு என்று கூறினார்.

பக்காத்தான் வெற்றி பெற்றால், அன்வார் விடுதலை செய்யப்பட்டால், அன்வார்தான் அடுத்த பிரதமர் என்று ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட ஒன்று. அதனால், பிரதமர் வேட்பாளரைப் பற்றி இப்போது பேச தேவையில்லை என்றார் சம்சூல்.

அதேவேளையில், தனது ஆட்சியின் போது பல ஊழலைப் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட மகாதீர் மறுபடியும் பிரதமர் ஆக முடியாது என்று ‘சோலிடாரிட்டி அனாக் மூடா மலேசியா’ சங்கத்தின் தலைவர் பட்ரூல் ஹிஷாம் கூறினார்.

அதுமட்டுமின்றி பெர்சத்து கட்சிக்கென தற்போது ஒரு தொகுதிதான் உள்ளது. அடுத்த பொதுத் தேர்தலிலும் அவர்கள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியவில்லை. அதனால் பெர்சத்து கட்சி பிரதமர் வேட்பாளரை பற்றி கவலைக்கொள்ள அவசியம் இல்லை என்றார் பட்ரூல்.

அப்படி அன்வார் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை என்றால் டத்தோஶ்ரீ வான் அஸிசா தான் பிரதமர் பதவிக்கு உரிய வேட்பாளர் என்றும் முன்னாள் பிகேஆர் உறுப்பினரான பட்ரூல் கூறினார்.

 

ஷா ஆலம், ஜூன்.3- சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா மசூதியில் உரையாற்றியதை கண்டித்த சிலாங்கூர் சுல்தான் அவர் வரம்பு மீறி செயல்பட்டு விட்டார் என மீண்டும் சுட்டிக்காட்டினார்.

மசூதிகளில் அரசியல் தலைவர்கள் உரையாற்றுவதை விரும்பாத சிலாங்கூர் சுல்தான் அப்படி செய்வதை நிறுத்திகொள்ளுமாறு கடந்த காலங்களில் பலமுறை வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும் சுல்தானின் அறிவுறுத்தலையும் பொருட்படுத்தாமல் சிவராசா அன் நூர் மசூதியில் உரையாற்றியதை பலரும் கண்டித்து வருகின்றனர்.

“10 மணி நேரம் வேண்டுமானாலும் சிவராசா உறையாற்றலாம். ஆனால், அது மசூதிக்கு வெளியே இருக்க வேண்டும். என் அறிவுறுத்தலையும் பொருட்படுத்தாமல் நீங்கள் செய்தது வரம்பு மீறிய செயல்” என்று சிவராசாவை சுல்தான் சாடினார்.

இனிமேல் அரசியல் தலைவர்களுக்கு உரையாற்ற அனுமதி வழங்கும் மசூதி நிர்வாகிகள் மேல் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுல்தான் எச்சரித்தார்.

அரசியல் கருத்துக்களால் இஸ்லாமிய மக்கள் பிளவுபட கூடாது என்பதால் தான் மசூதிகளில் அரசியல் உரையாற்றுவதை விரும்பவில்லை. மத போதனைக்கும், சமய அறிவை வளர்க்கவும், இஸ்லாமியர்கள் இடையே ஒற்றுமையை வளர்க்கவும் மசூதிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் சுல்தான் வலியுறுத்தினார்.

நேற்று நடந்த நோன்பு திறப்பு உபசரிப்பில் கலந்து கொண்டு சிலாங்கூர் சுல்தான் இதனைக் கூறினார். நிகழ்ச்சியில் சிலாங்கூர் மந்திரி புசாரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கோலாலம்பூர், ஜூன்.1- எதிர்க்கட்சி கூட்டணியான பக்காத்தான் ஹரப்பான், தம்மைப் பிரதமராக்கும் திட்டத்தினை கொண்டு இருக்கும் பட்சத்தில், தாம் மீண்டும் பிரதமர் பதவியை ஏற்பது குறித்து பரிசீலிக்கும் கட்டாயத்திற்கு உள்ளாகக் கூடும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

இன்று தம்முடைய முகநூலில் நேரலைப் பேட்டி ஒன்றின்போது மக்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். 

அடுத்து நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்றால், நீங்கள் மீண்டும் பிரதமராக ஒப்புக் கொள்வீர்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் மேற்கண்டவாறு அவர் பதிலளித்தார்.

எதிர்க்கட்சி கூட்டணியிலுள்ள எனது நண்பர்களின் விருப்பத்தை நான் அலட்சியப்படுத்த முடியாது. அவர்களிடம் அப்படியொரு திட்டம் இருக்குமானால், அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுமானால், அது பற்றி பரிசீலிக்கும் கட்டாயம் எனக்கு இருக்கிறது என்றார் அவர்.

இருப்பினும், பிரதமர் பொறுப்பை மீண்டும் ஏற்றுக்கொள்ள தமக்கு விருப்பம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய துன் மகாதீர், நான் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டால், மீண்டும் பிரதமராக மாட்டேன் என்று ஏற்கெனவே நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

 

கேமரன்மலை, மே.31- "கேமரன்மலை என்னுடைய தொகுதி. முன்னாள் பிரதமர் துன் மகாதீர் காலத்தில் அதாவது 1999ஆம் ஆண்டில் லிப்பீஸ் தொகுதியை எல்லை மறுசீரமைப்பு செய்து, கேமரன்மலையை எனக்காகக் கொடுத்தார் என்று மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ கேவியஸ் கூறினார்.

இந்த உண்மை டத்தோஶ்ரீ சாமிவேலுக்குத் தெரியும். அவரை அணுகி ஒரு 'கப்' காப்பி குடித்து என்னதான் நடந்தது; எப்படி கேவியசை ஏமாற்றினார் என்று கேட்டுப் பாருங்கள் என டான்ஶ்ரீ கேவியஸ் சுட்டிக்காட்டினார்.

இன்று வரைக்கும் டத்தோஶ்ரீ சுப்பிரமணியத்திற்கு எதுவும் புரியவில்லை. இவர்தான் டத்தோஶ்ரீ பழனிவேலை மஇகா கட்சியின் உறுப்பினர் அல்லர்; கேமரன்மலை எங்களுடைய தொகுதி இல்லை; அது 'பேபாஸ்' தொகுதி என்று மஇகாவின் செயலாளரிடம் சொல்லி, நாடாளுமன்றத்திற்கு கடிதம் அனுப்பி கேமரன்மலை நாடாளுமன்ற தொகுதியை 'அனாதை' தொகுதியாக தவிக்கவிட்டதை ஏன் அவர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மூன்று ஆண்டு காலத்திற்கு ஒன்றும் இல்லாமலும், தனிப்பட்ட முறையில் எந்த மஇகா தலைவர்களும் உடனில்லாமலும், சிரமப்பட்டு டத்தோஶ்ரீ பழனியும் அவரது துணைவியாரும் மற்றவர்களுடன் சேர்ந்து கேமரன்மலை மக்களுக்கு உதவி செய்து வந்தார்கள்.

ஆனால், தமது தேசியத் தலைவரையே கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, தொகுதியை அனாதை ஆக்கிவிட்டு, இன்று அதே தொகுதியை மீண்டும் மீண்டும் மார்தட்டிக் கொண்டு, "எங்கள் பாரம்பரியத் தொகுதி" என்றால் இவருக்கு அரசியல் புரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

வயதில் டத்தோஶ்ரீ சுப்ரா என்னைவிட மூத்தவராக இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். ஆனால், அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை. இப்படி நான் சொல்வதற்குக் காரணம், சுயேச்சை என்று சொன்ன தொகுதியின் அடிப்படை அர்த்தமே இவருக்குப் புரியவில்லை என்பதுதான். 

இப்போது கேமரன்மலையைப் பிரதிநிதிக்கும் மஇகாவின் வேட்பாளர் யாரும் இருக்கின்றாரா? இல்லையே; இப்போது தேசிய முன்னணியில் கேட்டால் கூட, அவர்களே சொல்வார்கள்,  'இத்து கவாசான் பேபாஸ்' (Itu Kawasan Bebas) என்று..!   நாடாளுமன்றத்திற்கு கடிதம் கொடுத்தவரிடம் சொல்லி சரி பார்க்கச் சொல்லுங்கள் என்றும் டான்ஶ்ரீ கேவியஸ் சொன்னார்.

கோலாலம்பூர், மே.25- பிரதமர் நஜீப்பிற்கு கிடைத்த 2.6 பில்லியன் ரிங்கிட் தேர்தல் நன்கொடை நிதியிலிருந்து தமக்கும் பணம் தரப்பட்டதாக கூறப்படுவதை மறுத்தார் முன்னாள் துணைப் பிரதமர் டான்ஶ்ரீ மொகிதீன் யாசின்.

அம்னோவில் இருந்த போது மொகிதீன் மற்றும் ஷாபி அப்டால் கீழ் இயங்கி வந்த கிளைகளுக்கு அந்த தேர்தல் நன்கொடையிலிருந்து நிதி தரப்பட்டது என்று சுற்றுலா துறை அமைச்சர் நஸ்ரி அஸீஸ் குற்றம் சாட்டியதை மறுத்து மொகிதீன் இதனைத் தெரிவித்தார்.

“எங்களைப் பற்றி அவதூறு பரப்பவே இப்படியான குற்றச்சாட்டுக்கள் பரப்பப்படுகின்றன. எங்கள் இருவருக்கும் அந்த 2.6 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து ஒரு காசும் தரப்படவில்லை” என்றும் மொகிதீன் கூறினார்.

அம்னோ முன்னாள் உதவித் தலைவராக இருந்த ஷாபி அப்டாலும், தம் மீது நஸ்ரி சுமத்திய குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தனக்கு கீழ் இயங்கி வந்த கிளைகளுக்காக தாம் எந்தவொரு நிதியுதவியும் பெறவில்லை என்றார் அவர். 

ஆனால், அந்த 2.6 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து உம்ரா யாத்திரை மேற்கொள்வோருக்கு உதவி செய்வதைப் பற்றி மட்டுமே தாமும் பிரதமர் நஜீப்பும் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஷாபி அப்டால் தெரிவித்தார்.

கோலாலம்பூர், மே 25- அடுத்த பொதுத்தேர்தலில் வெல்ல முடியாமல் போனால் பிரதமர் வேட்பாளராக யாரை நிறுத்தினாலும் அதில் புண்ணியமில்லை என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். பிரிபூமி பெர்சத்து கட்சியின் தலைவரான அவர், யார் பிரதமர் வேட்பாளர் என்பதை விட தேர்தலில் ஜெயிப்பதே மிக முக்கியமானது என்றார்.

பிகேஆர் கட்சி சார்ந்த கருத்துக்கணிப்பில் பிரதமர் வேட்பாளருக்கான மக்களின் முதன்மை தேர்வு டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தான் என்று தெரிவிக்கப்பட்டது குறித்து துன் மகாதீரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

"அவர் வேட்பாளர்களில் ஒருவரே. ஆனால் இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை. நாம் (தேர்தலில்) வெற்றி பெற்றால் பின்னர் வேட்பாளர் யார் என்று முடிவு செய்யலாம்" என அவர் தெரிவித்தார்.

"தேர்தலில் ஜெயிக்கவில்லை என்றால் வேட்பாளருக்கான பெயர் மட்டும் போட்டுக் கொள்வதில் என்ன இருக்கிறது? தன்னை திருப்திப்படுத்திக் கொள்ளவா?" என துன் மகாதீர் கேள்வி எழுப்பினார். 

More Articles ...