கோலாலம்பூர்,அக்.9- பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் வேண்டுகோளை ம.இ.கா. புறக்கணித்து வருகிறது. இணைந்து செயல்படும்படி ம.இ.காவையும் ஐ.பி.எப்.பையும் பிரதமர் கேட்டுக் கொண்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், ம.இ.கா. இந்தக் கோரிக்கையை மதித்து செயல்படவில்லை என்று ஐ.பி.எப் கட்சியின் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ சம்பந்தன் கூறினார்..

ம.இ.கா. தங்களுடன் ஒத்துழைக்க முன்வரவே இல்லை என்று ஐ.பி.எப். மாநாட்டில் பிரதமர் நஜிப் முன்னிலையிலேயே டத்தோ சம்பந்தன் குறிப்பிட்டார்.

இரு கட்சிகளின் ஒத்துழைப்பு குறித்து ம.இ.கா. தேசிய தலைவரைச் சந்தித்து பேசும்படி பிரதமர் அறிவுறுத்தி இருந்தார். அப்படியொரு சந்திப்புக்காக நாங்கள் எவ்வளவோ முயன்றும் அதற்கு ம.இ.கா. தலைவர் தயாராக இல்லை. இரண்டு ஆண்டுகள் எவ்வளவோ முயற்சிகளைச் செய்துள்ளோம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

செர்டாங் பல்கலைக்கழகத்தில் உள்ள மெப்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடந்த ஐபிஎப்.பின் 25- ஆவது ஆண்டு பேராளர் மாநாட்டில் பேசிய போது டத்தோ சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.

பொதுத்தேர்தல் நெருங்கி வந்துவிட்ட இந்த வேளையிலும் கூட எங்களுடன் இணைந்து செயல்பட ம.இ.கா. தயாராக இல்லை.

இந்தியர்களின் பிரச்சனைகளைத் தாங்கள் களையப் போவதாக ம.இ.கா.வினர் கூறுகின்றனர். ஆனால், ஐ.பி.எப்.புடன் இணைந்து செயல்பட அவர்கள் தயாராக இல்லாத நிலையில் எப்படி இந்தியர்களின் பிரச்சனைகளைக் களையப் போகிறார்கள்? என்று டத்தோ சம்பந்தன் கேள்வி எழுப்பினார்.

செர்டாங், அக்.8- இந்திய சமுதாயத்திற்காக தேசிய முன்னணி அரசாங்க வழங்கும் வாக்குறுதிகள் வெறும் 'வெட்டிப் பேச்சு' அல்ல. அந்த வாகுறுதிகள் 'நிஜம்' என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் திட்டவட்டமாக கூறினார். 'வெட்டிப்பேச்சு' மற்றும் 'நிஜம்' ஆகிய வார்த்தைகளைப் பிரதமர் தமிழிலேயே உச்சரித்தார்.

இங்கு ஐபிஎப் கட்சியின் 25 ஆவது ஆண்டு பேராளர் மாநாட்டை முடித்து வைத்துப் பேசிய போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மலேசியாவிலுள்ள இந்திய சமுதாயத்திற்கு உதவுவதற்கான தனது வாக்குறுதிகளை பாரிசான் நிறைவேற்றும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.

இந்திய சமுதாயத்தை மேல்நிலைக்கு கொண்டுவருவது என்பது என்னுடைய கடப்பாடு. இதுவொரு 'வெட்டிப் பேச்சல்ல'..., 'நிஜம்'.. 'நிஜம்'.. என்பதை நிருபித்துக் காட்டுவேன் என்றார் அவர்.

இப்போதைக்கு பாரிசான் நேஷனலின் நண்பர்கள் என்ற அடிப்படையில் ஐபிஎப் தொடர்ந்து செயல்பட்டுவரும். ஐபிஎப்பிற்கு கூடுதல் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என பாரிசான் கூட்டணி கட்சிகளுக்கு உணர்த்துவதற்காக தொடர்ந்து தாம் பாடுபடப்போவதாக அவர் சொன்னார்.

ஐபிஎப்பிற்கு கூடுதல் அங்கீகாரத்தைப் பெற்றுத் தர, இதர பங்காளிக் கட்சிகளிடமிருந்து தமக்கு கூடுதல் ஒத்துழைப்புத் தேவைப்படுகிறது என்று ஐபிஎப் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ சம்பந்தன் முன்னிலையில் பிரதமர் நஜிப் குறிப்பிட்டார். 

 

ஜொகூர்பாரு, அக்.7- ஜொகூர் இளவரசர் துங்கு இஸ்மாயிலுக்கும் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிற்கும் இடையே சந்திப்பு ஒன்று நடந்தது.

ஜொகூர் பாருவிலுள்ள புத்ரி பான் பசிபிக் தங்கும் விடுதியில் இந்தச் சந்திப்பு இன்று நடந்தது. 

ஜொகூர் மாநிலத்தின் மேம்பாடுகள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

மேலும் கூட்டரசு அரசாங்கத்துடனான ஜொகூர் மாநிலத்தின் நல்லுறவுகளை மேம்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.

 கோலாலம்பூர், அக்.6- சுங்கை பெசார் அம்னோ டிவிசன் தலைவரான டத்தோஶ்ரீ ஜமால் முகமட் யுனோஸ் நேற்று செக்‌ஷன் 14-இல் சிலாங்கூர் மாநில அரசாங்க அலுவலகத்தின் முன்பு, பீர் பெட்டிகளைப் போட்டு அடித்து, உடைத்த விவகாரத்தில், அம்னோவுக்கு  எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

அரசு சார்ப்பற்ற அமைப்பின் சார்பில்தான் பீர் பெட்டிகளை உடைத்தார். தவிர கட்சியின் சார்பில் அவர் இச்செயலை செய்யவில்லை என அம்னோ துணைத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் அமாட் ஜாஹிட் அமிடி சொன்னார்.

டத்தோஶ்ரீ ஜமால் அரசு சார்பற்ற அமைப்புகளின் தலைவராகவும் இருப்ந்தனால், அந்த அமைப்புக்களைப் பிரதிநிதித்துதான் அச்செயலைச் செய்திருக்கிறார். அவர் அம்னோ சார்பில் இச்செயலை செய்யவில்லை அதற்கு நாங்கள் அனுமதியும் வழங்கவில்லை என டத்தோ ஸாஹிட் கூறினார்.

நேற்று காலை மணி 10 அளவில், சிவப்புச் சட்டை அணி தலைவரான ஜமால் மற்றும் அவரின் சகாக்கள், கிட்டத்தட்ட 10 பீர் பெட்டிகளை அந்த சிலாங்கூர் அரசாங்க அலுவலகத்தின் முன்பு போட்டு அடித்து உடைத்து ரகளை செய்தனர். 

அதன் பின்னர், அவர்கள் உடைத்து நொறுக்கிய பீர் பெட்டிகளை அகற்ற வேண்டும் என்று பாதுகாவலர்கள் கேட்டுக் கொண்டதை பொருட்படுத்தாமல் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர். 

 

பெட்டாலிங் ஜெயா, அக்.5- பினாங்கு மாநிலத்தில் அதிக சட்டமன்ற தொகுதிகளை வெல்லும் கட்சிக்கே அம்மாநில முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு அனைத்து கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. 

ஒரு மாநிலத்தை ஆளும் காரணியாக இது மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். சீனரோ அல்லது மலாய்க்காரர் என்ற தகுதியோ அல்ல என அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பினாங்கு மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் பதவி மலாய்க்காரருக்கு வழங்கப்பட வேண்டும் என பிகேஆர் அரசியல்வாதி ஹஸ்மி ஹாஷிம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். இது தொடர்பாக நாளை பங்சாரில் பொதுக் கூட்டம் ஒன்றில் அவர் விவாதிக்க இருக்கின்றார்.

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி, மேற்கனட கோரிக்கையை ஏற்கவில்லை. ஹஸ்மி தமது உதவியாளர் பணியில் தற்போது இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன மத வாதங்களைக் கொண்டு உரைக்கப்படும் எவ்வித கருத்துகளையும் தாமோ அல்லது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியோ ஆமோதிக்கப் போவதில்லை எனவும் அஸ்மின் அலி கூறினார். 

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி இனரீதியில் செயல்படவில்லை. மேலும் தற்போதைய பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், ஓர் இனத்தை பிரதிநிதிப்பவர் அல்லர். மாறாக, பினாங்கு மக்கள் அனைவரையும் பிரதிநிதிக்கிறார் அவர் என்று அஸ்மின் விளக்கினார்

 

புத்ராஜெயா, அக்.5- புத்ராஜெயா நாடாளுமன்றத் தொகுதியில் தாம் போட்டியிடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக பிரிபூமி பெர்சத்து கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். 

"நான் புத்ராஜெயா தொகுதியில் போட்டியிடக் கூடும்' என்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தப் போது கூறினார். அடுத்து வரும் பொதுத்தேர்தலில் தாம் போட்டியிட வேண்டும் என்று தமக்கு பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கோரிக்கைகள் கடந்த ஆண்டிலிருந்து விடுக்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

இதே வேளையில், தாம் புத்ராஜெயா தொகுதியில் நிற்கவேண்டும் என்று அமானா நெகாரா கட்சி கோரிக்கை விடுத்திருக்கிறது என்று அவர் சொன்னார். எதிர்க்கட்சி கூட்டணியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் முகமட் அண்மையில் புத்ராஜெயாவிலும் லங்காவியிலும் போட்டியிடக் கூடிய சாத்தியமிருப்பதாக கூறியிருந்தார். இவ்விரு தொகுதிகளும் தற்போது தேசிய முன்னணி வசம் உள்ளது.

ஷாஆலாம், அக்.5- மீண்டும் தனது கோமாளி வேலையைத் தொடங்கி விட்டார் சிவப்பு சட்டை அணித் தலைவர் டத்தோஶ்ரீ ஜமால் முகம்மட் யுனோஸ். இங்கு செக்‌ஷன்-14 இல் உள்ள சிலாங்கூர் மாநில அரசாங்க அலுவலகத்தின் முன்பு, பீர்ப் பெட்டிகளைப் போட்டு அடித்து, உடைத்து தனது ஆட்சேபத்தைத் தெரிவித்துள்ளார்.  

சுங்கை புசார் அம்னோ டிவிசன் தலைவருமான ஜமால் யுனோஸ், பீர் விழாவுக்கு எதிராக தனது ஆட்சேபத்தை காட்டுவதற்கு இப்படியொரு கூத்தை அவர் நடத்தினார்.  

இந்தப் பீர்கள் அனைத்தையும் சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப் போவதாக அவர் கூறினார்.  

"அஸ்மினும் அவரது கும்பலும் அவர்களின் அலுவலகத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் குடித்துத் தீர்க்கட்டும். ஆனால், அதனை வெளியே தொடரக்கூடாது" என்றார் அவர்.  

அந்தப் பீர்ப் பெட்டிகளை அடித்து உடைத்தப் பின்னர், ஜமால் மற்றும் அவரின் சகாக்கள் அங்கிருந்து கிளம்பி விட்டனர். மாநில அரசாங்க அலுவலகத்தின் பாதுகாவலர்கள், உடைக்கப்பட்ட அந்தப் பெட்டிகளை அங்கிருந்த அவர்கள் அகற்றவேண்டும் என்று கேட்டுக் கொண்டதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.  

More Articles ...