கோலாலம்பூர், ஆக.1 – முன்னாள் பிரதமர் துன் மகாதீர் பரம்பரையைப் பற்றி துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஸாஹிட் ஹமிடி பேசியிருந்ததைப் பரபரப்பான விஷயமாக ஆக்கப்பட்டது குறித்து தான் ஏமாற்றம் அடைந்திருப்பதாக அவருடைய பத்திரிக்கைத் துறைச் செயலாளர் இப்ராஹிம் யாஹ்யா கூறினார்.

அம்னோவைத் தங்களுடைய சொந்த நலனுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பதைத் தான் டத்தோ ஶ்ரீ ஸாஹிட் தமது உரையில் சுட்டிக்காட்ட முனைந்திருந்தார் என்று இப்ராஹிம் யஹ்யா விளக்கம் தெரிவித்துள்ளார்.

மகாதீர் அம்னோவை தம்முடைய சொந்த நலனுக்காகவும், தன்னுடைய குடும்பத்தின் நலனுக்காகவும் பயன்படுத்திக் கொண்டு அதன் பின்னர் அம்னோவை விட்டு வெளியேறி, எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக, தன்னுடைய முன்னாள் எதிரியான ஜ.ஜ.க வுடன் கூட்டுச் சேர்ந்துள்ளார் என்றுதான் டத்தோ ஶ்ரீ ஸாஹிட் சொன்னார். 

மகாதீரின் இத்தகைய போக்கு ஆச்சரியமளிக்கக் கூடிய ஒன்றல்ல. ஏனெனில் 22 ஆண்டுகாலம் பிரதமராக இருந்துள்ள மகாதீர், உண்மையில் மலாய் வம்சாவளியைச் சேர்ந்தவர் அல்ல. அவருடைய பரம்பரை கேரளாவிலிருந்து வந்தது என்றுதான் டத்தோ ஶ்ரீ ஸாஹிட் குறிப்பிட்டார் என்று அவரது பத்திரிக்கைச் செயலாளர் இப்ராகிம் யஹ்யா விளக்கியுள்ளார்.

இந்த பிரச்சனையை மகாதீரின் ஆதரவாளர்கள் வேறுவிதமாக பயன்படுத்தி பெரிதுபடுத்தியுள்ளனர். இதனால் இப்பிரச்சனையை சமூக வலைத்தளங்களிலும் பெரும் பரபரப்பாகி விட்டது என்கிறார் அவர்.

இதனைப் பயன்படுத்தி இந்திய முஸ்லீம்களைத் துணைப்பிரதமர் ஸாஹிட் அவமதித்து விட்டதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டத் தொடங்கி விட்டனர். இது தவறானது. மகாதீரின் போக்கைத் தான் ஸாஹிட் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, அம்னோ விஷயத்தில் மகாதீரின் இன்றைய போக்கையே அவர் குறிப்பிட்டு பேசினார் என்றார் இப்ராகிம் யஹ்யா.

 

 கோலாலம்பூர், ஜூலை.31- முப்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மலேசியர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்யத் தகுதி பெற்றிருந்தும், இன்னும் அவ்வாறு செய்யவில்லை என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒஸ்மான் கூறினார் 

2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சுமார் 37 லட்சத்து 72 ஆயிரத்து 149 பேர் இன்னும் வாக்காளராக பதிவு செய்து கொள்ளவில்லை. 

இது தவிர ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பதிவுக்கு 1,454 ஆட்சேபணைகள் வந்துள்ளன என்று அவர் நாடாளுமன்றத்தில் பேசிய போது கூறினார். 

மேலும், தற்காலிக மலேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் எந்தவொரு நபரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையவர்கள் அல்ல என்று பிஅஸாலினா சொன்னார். 

இன்னும் வாக்காளர்களாக பதிவு செய்யாதவர்களின் எண்ணிக்கை பற்றி பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினரான கஸ்தூரி பட்டு எழுப்பிய கேள்விக்கு அவர்  மேற்கண்டவாறு பதிலளித்தார். 

கோலாலம்பூர், ஜூலை.26- பிரதமரைச் சந்திப்பதற்காக நேற்று புத்ரா உலக வாணிப மையத்திற்கு சென்ற பார்டி பிரிபூமி மலேசியா (பிபிபிஎம்) உறுப்பினர்களுக்கும் அம்னோ இளைஞர் பிரிவுக்கும் இடையே கடுமையான மோதல் நிகழ்ந்தது.

நேற்று மதியம் 2.30 மணியளவில் சுமார் 30 பிரிபூமி கட்சி உறுப்பினர்கள் சன்வே புத்ராவில் ஒன்றுகூடி புத்ரா உலக வாணிப மையத்தில் அமைந்திருக்கும் டத்தோ ஓன் ஜப்பார் கட்டடத்தை நோக்கி பேரணி நடத்தினர். பிரதமரைச் சந்தித்து "நத்திங் டு ஹைட் 2.0"- (Nothing to Hide 2.0)  என்ற கோரிக்கையை விடுக்கவே பிரிபூமி கட்சியினர் சென்றனர்.

எனினும், அவர்களின் பேரணியை எதிர்த்து சுமார் 100பேர் அடங்கிய அம்னோ இளைஞர் அணியினர் எதிர்த்து போராட்டம் செய்தனர்.

இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாய்ச்சண்டை முற்றியது. எனினும், போலீஸ் அதிகாரிகளின் சாமர்த்தியத்தால் 15 நிமிடங்களில் அந்தச் சம்பவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதனிடையே, இம்மாதியான பேரணியில் ஈடுபடுவதை சம்பந்தப்பட்ட இரு கட்சியும் போலீஸுக்கு முன் அறிவிப்பு செய்யவில்லை என்பதால்  2012-ஆம் ஆண்டு அமைதி பேரணிச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படும் என டாங் வாங்கியின் தலைமை ஏசிபி முகமட் சுக்ரி கமான் கூறினார்.

கோலாலம்பூர், ஜூலை 24- நாட்டில் 14ஆவது பொதுத் தேர்தலுக்காக கட்சியில் தலைமைத்துவம் தேர்தெடுக்கும் வேட்பாளர்கள் கூட்டணி கட்சிகளைச் சேர்தவர்களாக இருந்தாலும் அம்னோவின் முழு ஆதரவையும் அவர்கள் பெறுவார்கள் என்று துணை பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் அகமாட் சாஹிட் ஹமிட் தெரிவித்தார்.

தேசிய முன்னணி கூட்டணியில் உள்ள சுமார் 13 கட்சிகளும் அரசாங்கத்தில் தங்களை சமமாக பிரதிநிதித்துக் கொள்ள எப்பொழுதும் தங்களுக்குள் அதிகார பகிர்வினை செய்து நியாமான ஆட்சியைப் புரிவதாகவும் அவர் கூறினார்.

செபுத்தே, புக்கிட் பிந்தாங் போன்ற தொகுதிகளில் தேசிய முன்னனி வெற்றிப் பெறுவது முயல் கொம்பாக இருந்தாலும் தங்கள் கட்சி வேட்பாளர்கள் அங்குள்ள மக்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய உதவிகளைச் செய்து மாற்றத்தை கொண்டு வர முடியும் என நம்பிக்கை ஊட்டினார்.

மேலும், கூட்டணி கட்சிகள் அனைத்தும் தங்களின் முழு திறமையையும் வெளிப்படுத்தி கடுமையாக உழைத்து மக்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும். குறிப்பாக மலாய்க்காரர்களின் வாக்குகள் அதிகமில்லாத தொகுதிகளிலும் தங்கள் கட்சி வெற்றிப் பெற முடியும் என நிரூபிக்க வேண்டும் எனவும் புத்ராஜெயா அனைத்துலக வர்த்தக மையத்தில் நடந்த சந்திப்புக் கூட்டத்தில் அவர் கூறினார்.

கோலாலம்பூர், ஜூலை.20– எதிர்க்கட்சி கூட்டணியாக பக்காத்தான் ஹராப்பானில், லிம் கிட் சியாங்தான் எஜமானர். துன் மகாதீர் வெறும் கைப் பாவைதான் என்று பிரதமர் நஜிப்பின் பத்திரிக்கைத் துறைச் செயலாளர் டத்தோ துங்கு ஷரிபுடின் துங்கு அகமட் கூறினார். 

மகாதீர் ஒரு சர்வதிகாரி! இதை அவரே ஒருமுறை ஒப்புக் கொண்டுள்ளார் என்று குறிப்பிட்ட துங்கு ஷரிபுடின், இப்போது மகாதீர் தான் எதிர்க்கட்சிகளின் தலைவர் எனக் கூறிக் கொள்கிறார். மேலும், பிரதமர் நஜிப்புக்கு இணையான தலைவர் என்றும் கூறிக் கொள்கிறார் என சுட்டிக்காட்டினார். 

எதிர்க்கட்சி கூட்டணியில் அதிகாரம் மிக்கத் தலைவர் என துன் மகாதீர் அண்மையில் கூறியிருந்தது குறித்து கருத்துரைத்தப் போது துங்கு ஷரிபுடின் மேற்கண்டவாறு சொன்னார்.

பக்கத்தான் ஹராப்பானில் நான் தலைவர். அதிக அதிகாரம் கொண்டவர் எனும் தோரணையில் துன் மகாதீர் கருத்துச் சொல்லியுள்ளார். ஆனால் அவருடைய பிரிபூமி கட்சியில் ஒரேயொரு எம்.பி. மட்டுமே உள்ளார். ஆனால், லிம் கிட் சியாங் கட்சியில் 38 எம்.பி.கள் உள்ளனர். எனவே, உண்மையில் மகாதீர் வெறும் கைப் பாவையே. லிம் கிட் சியாங்தான் எஜமானர் என்று துங்கு ஷரிபுடின் வர்ணித்தார். 

மகாதீர் ஏதோவொரு மாயையில் இருக்கிறார். யதார்த்தமான உண்மைகளை விட்டு பிரிந்து வெகுதூரத்தில் இருக்கிறார். தமக்கு மிக அதிகாரம் இருப்பதாக நினைக்கிறார். ஆனால், உண்மையாக கைப் பாவைதான் சர்வாதிகாரியான ஜ.செ.க.வின் ஆலோசகரான லிம் கிட் சியாங் தான் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கோலாலம்பூர், ஜூலை.19 – தேசிய பாதுகாப்புச் சட்டம் குறித்து எதிர்க்கட்சி கூட்டணியினர் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டத்தோ ஸைட் இப்ராகிம் எச்சரித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற ஆயுதம் பிரதமரான டத்தோ ஶ்ரீ நஜிப் கையில் உள்ளது. அடுத்து வரும் பொதுத் தேர்தலில் தமக்கும் அம்னோவுக்கும் சாதகமாக இல்லாமல் போகுமானால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பிரதமர் நஜிப் பயன்படுத்துவார் என்று அவர் எச்சரித்தார். 

நாட்டையும் மலாய் இனத்தையும், இஸ்லாத்தையும் பாதுகாக்க எதை வேண்டுமானாலும் செய்வேன் என்று ஏற்கனவே பிரதமர் நஜிப் கூறியிருக்கிறார். தாமும் அம்னோவும் எவ்வகையிலும் அகற்றப் பட முடியாதது என்று நஜிப் கருதுகிறார் என்பதுதான் அவருடைய மேற்கண்ட கூற்றுக்கு அர்த்தம் என்று தான் கருதுவதாக இப்ராஹிம் சொன்னார்.

மேலும், தம்மால் மட்டுமே நாட்டையும் மலாய் இனத்தையும், இஸ்லாத்தையும் தற்காக்க முடியும் என்று அவர் கருதுகிறார் என்று ஸைட் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு செயல்பட்ட தேசிய பாதுகாப்பு மன்றத்தின் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை ஏற்பதற்கும் பேரரசரின் இணக்கத்திற்கு அப்பாற்பட்ட முறையில் நாட்டில் அவசர காவல் பிரகடனத்தை பிரகடனப்படுத்தவும் அதிகாரம் வழங்கியுள்ளது என்றார் முன்னாள் சட்ட அமைச்சரான ஸைட் இப்ராகிம்.

இந்த மசோதா கடந்த ஆண்டு ஜூன் மாதம் பேரரசரின் ஒப்புதல் இன்றியே சட்டமாகிவிட்டது என்று சுட்டிக் காட்டினார் அவர். இறுதியாக எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியினர் தயாராக இருக்க வேண்டியது அவசியம் என்றார்.

புத்ராஜெயா, ஜூலை.18- பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றிப் பெற்றால், அன்வாரை நாட்டின் பிரதமராக முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளப்போவதாக துன் மகாதீர் முகமட்  வலுவான ஒப்புதலை வெளிப்படுத்தியுள்ளார்.

மக்களின் ஆசைக்கு எனது முழு ஆதரவு எப்போதும் உண்டு என அவர் பெர்டானா தலைமை அறவாரிய அலுவலகத்தில் பேசும் போது தெரிவித்தார். மேலும், அடுத்த பிரதமர் யார்? என்று தேர்வு செய்ய சரியான நேரத்திற்கு காத்திருக்கவேண்டும் என்று மகாதீர் கூறினார். வரும் தேர்தலில் பல ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய வியூகம் இது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த பிரதமரின் பெயரை நாங்கள் உகந்த நேரத்தில் அறிவிப்போம். அது இப்போது கூட இருக்கலாம் அல்லது தேர்தலுக்கு முன்பாக அல்லது தேர்தலில் வென்ற பின்னராகக் கூட இருக்கலாம் என்று மகாதீர் குறிப்பிட்டார். 

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமர் பதவிக்கு தகுதி பெறமுடியாது என்று ஊடகங்களில் சில கருத்துகள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles ...