புத்ரா ஜெயா, ஏப்ரல்.7- எதிர்வரும் 14ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு தேசிய முன்னணி பல்வேறு சலுகைகளையும் வாக்குறுதிகளையும் கொண்ட தேர்தல் கொள்கை அறிக்கையை இன்று கிட்டதட்ட 40 ஆயிரம் ஆதரவாளர்கள் திரண்டிருந்த கூட்டத்தில் அறிவித்தது. தேசிய முன்னணியின் தலைவரும் பிரதமருமான டத்தோஶ்ரீ நஜிப் இந்தக் கொள்கை அறிக்கையை வெளியிட்டார்.
தேசிய முன்னணியை மக்கள் மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால், நாங்கள் எத்தகைய திட்டங்களை அமல் படுத்துவோம் என்பதை பிரதமர் வாக்குறுதியாக அறிவித்தார்.
# # எல்லா தாய் மொழிப்பள்ளிகளுக்கும் கூடுதல் சலுகைகள் மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகளை வழங்க தேசிய முன்னணி வாக்குறுதி அளித்தது.
# # டி.எல்.பி. எனப்படும் இருமொழிப் பாடத்திட்டத்தை விரிவு படுத்துவதன் வழி ஆங்கிலம் மொழித்திறன் மேம்படுத்தப்படும்.
# # பள்ளிகளில் ஆசிரியர்களின் நிர்வாகப் பணிச் சுமை குறைக்கப்படும். அவர்களுக்குத் தேவையான போதனை உபகரணங்கள் அதிகரிக்கப்படும்.
# # பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் மாணவர்கள் வேலை செய்யும் இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் உடல் பேறு குறைந்தவர்கள் ஆகியோருக்கு 50 ரிங்கிட் முதல் 150 ரிங்கிட்டிற்கு இடையிலான கட்டணச் சலுகையுடன் பல வழிப் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்படும்.
# # சீன உயர்நிலைப் பள்ளிகளில் பயின்று யு.இ.சி சான்றிதழ் பெறும் மாணவர்கள் பொதுப் பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் . இவர்கள் எஸ்.பி.எம்.மில் தேசிய மொழி மற்றும் வரலாற்றுப் பாடங்களில் கிரெடிட் பெற்றிருக்கவேண்டும்.
# # அரசு சார்ந்த விண்ணப்ப பாரங்களில் இடம் பெற்றிருக்கும் 'மற்றவர்கள்' அதாவது 'லைன் லைன்' என்ற பகுதி இனி முற்றாக அகற்றப்படும்.

# # மூன்று லட்சம் மற்றும் அதற்கும் கீழான தொகையைக் கொண்ட வீடுகளை வாங்குவோருக்கு கடன் வசதிகளை வழங்கச் சிறப்பு வங்கி அமைக்கப்படும்.
# # ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் வாங்குவதற்காக ஒரே மலேசிய அரசாங்க வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் வீடுகள் ஒதுக்கப்படும்.
# # 3,000 ரிங்கிட்டிற்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான பிரிம் உதவித் தொகை 400 ரிங்கிட்டிலிருந்து 800 ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டு, ஜூன் மற்றும் ஆகஸ்டு மாதத்தில் வழங்கப்படும்.
# # 3 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரம் ரிங்கிட் வரையிலான குடும்ப வருமானம் கொண்டவர்களின் பிரிம் உதவித் தொகை 300 ரிங்கிட்டிற்குப் பதிலாக 600 ரிங்கிட்டாக உயர்த்தப்படும்.
# # 2 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் குறைந்த வருமானம் பெறும் தனித்து வாழ்வோருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட 450 ரிங்கிட் பிரிம் தொகைக்கு அப்பால் மேலும் கூடுதலாக 150 ரிங்கிட் பிரிம் தொகை வழங்கப்படும்.
# # 4 ஆயிரம் ரிங்கிட் முதல் 5 ஆயிரம் ரிங்கிட் வரை குடும்ப வருமானம் பெறுவோர் புதிதாக 700 ரிங்கிட் பிரிம் உதவித் தொகையை இரண்டு தவணைகளாக ஜூன் மற்றும் ஆகஸ்டு மாதாங்களில் தலா 350 ரிங்கிட் என இருமுறை பெறுவர்.
# # பிரிம் உதவித் தொகை பெறுவோரின் பிள்ளைகள், உயர்க்கல்விக் கூடங்களில் தங்களின் கல்வியைத் தொடங்கும் போது ஒரே தவணையில் 1,500 ரிங்கிட்டைப் பெறுவர்.
# # இளைஞர்களுக்கு 3 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இண்டர்ன்ஷிப் மற்றும் வேலைத் திறன் பயிற்சிகள் மூலம் பட்டதாரிகள் சிறந்த வேலை வாய்ப்பைப் பெற வழிகாணப்படும்.